தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..

ப .ஜெயசீலன்

2000 A space odyssey என்ற திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இன்றும் அதன் இறுதி காட்சியில் இயக்குனர் சொல்ல வந்த உட்பொருள் குறித்து பெரும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு படத்தை இயக்கிய ஸ்டான்லி கூட தன்னிடம் கேள்வி எழுப்பியவரை பார்த்து நான் சொல்வது உங்களுக்கு புரியாது என்று சொன்னதில்லை. தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன் அவர்கள் சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி கரு. பழனியப்பன் தாடி முடியில் கால் பங்கு கூட தலையில் முளைக்காத சிறுவர்களிடம் கேட்டால் கூட புரிய கூடிய வகையில் கேட்ட எளிய கேள்விக்கு “இத வேற ஆட்களோடு விவாதிக்கணும்…வேற மேடை வேண்டும்…உங்களுக்கு அது புரியவும் புரியாது” “உங்களுக்கு இல்ல யாருக்குமே புரியாது” என்று திருவாய் மலர்ந்தார்.

தொகுப்பாளினி, அப்பட்டமாக ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை legitimate ஆக்கும் நோக்கத்துடன் எடுக்கபடும் படங்கள் தமிழர் அனைவருக்குமான படமாக உச்சி முகர்ந்து கொண்டாடப்படும் சூழலில் தலித்துகளின் குரலாக ஒலிக்கும் கபாலியை தலித்துகளுக்கான படம் என்று சுருக்குவதை கேள்வியாய் கேட்க இது மொக்கை வாதம் என்று ஒதுக்கிய பழனியப்பன் கபாலிக்கு U certificate ஏன் கொடுத்தார்கள் என்று “ராஜா குலோதுங்குவை விட்டு விட்டான் ஐயா” என்று கபாலியை புறம் தள்ள இன்னொரு காரணத்தை கண்டடைகிறார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரியானது. காபலிக்கு வெட்டப்பட்ட கை காட்டப்படும் காட்சியோடு U certificate கொடுத்தது ஏற்று கொள்ள முடியாதது. சென்சார் போர்டின் கோடிக்கணக்கான கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. உதாரணத்திற்க்கு சர்வதேச அரசியல், மத அடிப்படைவாத பயங்கரவாதம், மிக கொடூரமான கொலைகள் சண்டைக்காட்சிகள் கொண்ட விஸ்வரூபம் திரைப்படத்திற்கும் A certificate தரவில்லை. பிரச்சனை இப்பொழுது அது இல்லை. பிரச்சனை அதுதான் என்றால் கமல் “காசு கொடு வீட்டுக்கு போகணும் ஆத்தா வையும்” என்னும் பாவனையில் தான் அமெரிக்கா போவதாக கண் கசக்க, தமிழ் திரையுலகம் கூடி கமலுக்கு ஆறுதலும் அரவணைப்பும் வழங்க, தமிழர்கள் “தேவர் மகன்”கமலுக்கு இப்படி ஒரு நிலையா என்று கலங்கி சொந்த காசைக் காசோலையாக்கி அனுப்பி கமலுக்கு தைரியமூட்டி பின் படம் வெளியாகி வெற்றியும் அடைந்த பின் பழனியப்பன் இதே போன்று படத்திற்கு ஏன் A certificate தரவில்லை என்று இன்று வரை எங்காவது கேட்டுள்ளாரா? அப்பொழுது வராத அற சீற்றம் பழனியப்பனுக்கு கபாலத்தில் கபாலி மீது மட்டும் வருவது எதேச்சையானதா? ஒரு திரைப்படத்தை அதை இயக்கியவனின் சாதி சார்ந்து அவன் கதையினூடாக சொல்லும் விஷயங்களை கூட அவனது சாதியினூடே குறிப்பாக தலித்தாக இருக்கும் பட்சத்தில் மட்டும் சுருக்குவது எதனால்?

ஐயர் “விருமாண்டி ” இயக்கினால் அதில் ஐயர் அரசியல் இல்லாமல் விருமாண்டியாக பார்க்கிறார்கள், முதலியார் “நாட்டாமை” இயக்கினால் முதலியார் அரசியல் இல்லாமல் நாட்டாமையாக பார்க்கிறார்கள், பழனியப்பன் “பிரிவோம் சந்திப்போம்” இயக்கினால் செட்டியார் அரசியல் பார்க்காமல் “தமிழர் கலாச்சாரத்தை” ஆவணப்படுத்தும் முயற்சியாக பார்க்கிறார்கள். ஆனால் தலித் “கபாலி” எடுத்தால் மலேசியா வாழ்க்கையாக பார்க்காமல் ஏன் கபாலியை வெறும் தலித்தாக மட்டுமே பார்க்கிறார்கள்? பழனியப்பன், “ரஞ்சித் தமிழர்களையா ஒன்று சேருங்கள் என்கிறார்?? அவர் தமிழர்கள் என்று சொல்லி உண்மையில் தலித்துகளைத்தானே ஒன்று சேர சொல்கிறார் ” என்று ஒரு அரிய உண்மையை கண்டுபிடிக்கிறார்.

கபாலி படத்தில் தலித்துகள் ஒன்று சேர வேண்டும் என்றுதான் ரஞ்சித் சொல்ல விரும்பியதாகவும் ஆனால் அப்படி சொல்ல முடியாததால் அதைத்தான் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்னும் போர்வையில் திரும்ப திரும்ப படத்தில் சொல்வதாகவும் பழனியப்பன் கண்டு பிடித்து சொல்கிறார். திருமாவளவன் சமீபத்தில் “தலித்துகளின் போராட்டம் என்பது பிறரோடு ஒன்று சேர்வதற்கானது…சாதிய கட்டமைப்பானது எல்லோரையும் பிரித்து வைப்பது…அதுதான் தலித்துகள் பிறரோடு ஒன்று சேர முடியாமல் தடுப்பது” என்று சொன்னதைப் போல ரஞ்சித் மானுட விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய விஷயங்கள் சாதி வெறியர்களுக்கு புரியாது என்னும் நிலையில் குறைந்த பட்சம் தமிழர் என்ற அடிப்படையில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளிலாவது ஒன்று சேர்வோம் என்று சொன்னால் அதையும் பழனியப்பன், அவர் தமிழர்கள் என்ற போர்வையில் தலித்துகளை ஒன்று சேர சொல்கிறார் என்று அவருடைய தாடிக்குள் இருந்து ஒரு அரிய கருத்தை கண்டுபிடித்து சொல்கிறார்.

திருமாவளவன் முல்லை பெரியார் சார்ந்த ஒரு போராட்டத்தில் பங்கு பெற தான் தேனி வழியாக சென்ற பொழுது தன் மீது கல் வீசி தாக்கினார்கள் என்று ஒரு முறை சொன்னார். குண்டி கழுவ தண்ணி இல்லாமல் செத்தாலும் சாவோம் ஆனால் சாதி திமிரை விட மாட்டோம் என்னும் எண்ணத்தில் ஒரு தமிழனாக தங்கள் பிரச்சனையில் போராட திருமாவளவன் வருகிறார் என்று கூட பார்க்காமல் கல்லெறிந்த தற்குறிகளின் மனோபாவத்திற்கும் பழனியப்பனின் மனோபாவத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா? ரஞ்சித் தலித்தாக இருப்பதினால் அவர் தமிழரின் ஒற்றுமை சார்ந்து யோசிக்க வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்வதற்கு இவரை வழிநடத்தியது எது? படத்தில் எந்த இடத்தில் வரும் வசனம் தமிழர் என்ற போர்வையில் தலித்துகளை ஒன்று சேர சொன்னது என்று பழனியப்பனால் விளக்க முடியுமா? பழனியப்பன் பார்வையில் ஒரு தலித் தமிழர் ஒற்றுமை, தமிழ் தேசியம் போன்ற விஷயங்களில் பங்கெடுக்க, வலியுறுத்த வாய்ப்பே இல்லையா? அல்லது தகுதி இல்லையா?

அட்டகத்திய ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சலித்து வேறு கொள்கிறார். அட்டகத்தி குறித்து பொது வெளியில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அது ஒரு நேர்த்தியான தலித் திரைப்படம் ( “தலித் திரை படம் ” தலித் வாழ்வியலை. அவர்களது பிரச்சனைகளை, அவர்களது குரலை பேசும் படம் என்னும் பொருளில். தலித்துகளுக்கான படம் என்னும் பொருளில் அல்ல) என்று ஒரு சாராரும் அப்படி இல்லை என்று ஒரு சாராரும் விவாதித்தார்கள், முரண்பட்டார்கள். எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் அது ஏன் தலித் சினிமா இல்லை என்னும் பொருளில் ஒரு பெரிய கட்டுரை கூட எழுதியதாக நியாபகம். அப்பொழுது பழனியப்பன் தாடி வளர்த்து கொண்டிருந்ததால் இதை கவனிக்காமல் விட்டு விட்டார். கபாலி படம் கவனம் பெற ரஜினியும் வியாபாரமும் மட்டும்தான் காரணம் என்றால் அது ஏன் இதற்கு முன் வந்த எந்த ரஜினி படத்திற்கும் நிகழாத படம் சார்ந்த படத்தின் பேசுபொருள் சார்ந்த ஒரு விவாதம் கபாலிக்கு மட்டும் நிகழ்ந்தது? தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் பேசு பொருள் சார்ந்த அரசியல் சார்ந்த ஒரு பெரு வெளியில் எல்லோரும் பங்கு கொள்ளும், கொண்டிருக்கும் விவாதத்தை பழனியப்பன் இது எல்லாம் வியாபாரம் இதுக்கு வேற முக்கியத்துவம் தர தேவை இல்லை என்று ஆமையை போல தனது ஓட்டுக்குள் மண்டையை இழுத்து கொள்ளும் காரணம் என்ன ? இந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை வெறும் வியாபாரம் சார்ந்தது என்று கொச்சைப்படுத்தும் ஆசை ஏன்?

கடைசியாக, அவர் சொல்லுவது யாருக்கும் புரியாது என்னும் அளவில் அவர் இதுவரையில் எதாவது படம் இயக்கி உள்ளாரா ? அவரது படத்தில் சம்மந்தம் இல்லாமல் ஒரு கதாபாத்திரம் குளித்து விட்டு வந்து கண்ணதாசன் புகைப்படத்தை தொட்டு கும்மிடுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா? தனிமையில் வாடும் அவரது கதாநாயகி தனது தாய் தகப்பனை miss பண்ணாமல் தனது புருஷன் வீட்டு கூட்டு குடித்தனத்தை miss பண்ணுவது நமக்கு ஏன் என்று புரியவில்லையா? நன்கு படித்த நாலைந்து பெண்கள் ஒரே வீட்டில் இருந்து பேன் பார்ப்பது, மிளகாய் காய வைப்பது, காய் அறிவது போன்ற வேலைகளை சந்தோசமாக செய்வது ஏன் என்று புரியவில்லையா? உலகத்திலேயே அப்பழுக்கற்ற ஒரு சமூகம், ஒரு சமூக அமைப்பு, குடும்ப அமைப்பு எங்கு உள்ளது என்றால் எது காரைக்குடி சுற்று வட்டார பகுதியில்தான் உள்ளது என்று ஏன் பழனியப்பனுக்கு படம் எடுக்க தோன்றுகிறது என்று நமக்கு புரியவில்லையா? இவ்வளவு ஏன் பழனியப்பன் காதில் இருக்கும் கடுக்கன் வளையம் எதற்கானது என்று நமக்கு புரியவில்லையா? இப்படி சிறுவர் மலர் கதைகளை ஒத்து இருக்கும் எளிமையை தனது படங்களில், வாழ்க்கையில், பேச்சில் கடை பிடிக்கும் பழனியப்பனுக்கு எது தான் பேசுவது யாருக்குமே புரியாது என்று தோன்ற வைத்தது? அவரது படங்களின் தோல்வியா?அவரது படங்கள் தோல்வி அடைவது யாருக்கும் பிடிக்காமல்தானே தவிர புரியாமல் அல்ல என்று அவரிடம் எப்படி புரிய வைப்பது?

தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு அவர் பேச வேற மேடை வேண்டும் என்று சொன்னதைக் கூட அடுத்த வருடம் கேன்ஸ் பட விழாவில் அவர் The palm d’or விருது வாங்க போகும் மேடையை சொல்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் “இதை வேறு ஆட்களோடு நான் விவாதிக்கணும்” என்று சொன்னதில் உள்ள அந்த வேறு ஆட்கள் அவரது நண்பரான a mafioso action “ஆதி பகவான்” எடுத்த அமீர் போன்ற ஆட்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எனது ஆசையும் பிராத்தனையும்.

கட்டுரையாளர் ப .ஜெயசீலன், தமிழ் சினிமா பார்வையாளர்.

5 thoughts on “தமிழ் திரையுலகின் ஸ்டான்லி கூப்ரிக் கரு.பழனியப்பன்…நமக்கு புரியாத விஷயங்களை புரிந்து வைத்துள்ள மாமேதை..

 1. மிகவிரிவாக, தகவல்களுடன் காட்சி மேற்கோள்களுடன் விளக்கப்பட்ட கட்டுரை. எனது பதிவு உடனடி எதிர்வினை, இக்கட்டுரை ஒரு சுருக்கமான ஆய்வு. இது போதுமானது. கற்கட்டும் மாறட்டும். என்னதான் நினைத்துக் கொண்டுளளன இந்த படப்பெட்டிப் பாம்புகள்!

  Like

 2. “தலித்துகளின் போராட்டம் என்பது பிறரோடு ஒன்று சேர்வதற்கானது…சாதிய கட்டமைப்பானது எல்லோரையும் பிரித்து வைப்பது…அதுதான் தலித்துகள் பிறரோடு ஒன்று சேர முடியாமல் தடுப்பது” -தொல. திருமாவளவன். திரைப்படம் பற்றிய கட்டுரையில் இது போன்ற மேற்கோள்கள் வரவேண்டும். செய்திகள் தாண்டி அறிவுலகின் சொற்களில் இவை பெருகவேண்டும்.

  Like

 3. இது தொடர்பான எனது பதிவின் மீது விளக்கம் கேட்டு அறிய விரும்பும் அறிவுத் தேட்டம் உடையவர்களுக்கு இந்தக் கட்டுரையை பரிந்துரை செய்கிறேன். நன்றி ஜெயசீலன்…

  Like

 4. “பொதுவாக வெளிவரும் படங்களில் தான் அதிகம் ‘வன்மம்’ இருக்கும்…
  ஆனால்…
  படம் பார்த்தவர்களின், விமர்சித்தவர்களின் ‘வன்மம்’ வெளிப்பட்டது கபாலி மூலமாகத்தான்…!”

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.