”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்

பிரேம் 

பிரேம்
பிரேம்

திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்!

செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன்.

அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதி என்பது தெரிந்தது.

நிகழ்ச்சியில் உரையாடலை நடத்தியவர் ஒரு “பெண்“ ஊடகவியலாளர். உட்கார்ந்து பேசியவர் மூன்று நான்கு படம் காட்டிய ஒரு இயக்குநர்.

ஆனால் அவர் காட்டிய தோரணை ரித்விக் கட்டக்கும் மிருனாள் சென்னும் கிம் கி டுக் உடலில் ஆவியாகப் புகுந்து கொண்டது போல இருந்தது.

அது ஒரு பக்கம்.

பலர் சாதியைப் பெயருக்குப் பின்னால் இணைப்பது போல முன்னால் இணைக்கும் மரபைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. முழுமையாகக் கேட்டேன்.

பா.ரஞ்சித் சொன்ன “திரைப்படமே அரசியல், திரைப்படம் ஒரு அரசியல் செயல்பாடு“ என்பதற்கு விளக்கம் கொடுக்க அவர் முன் வைத்த முதல் வாக்கியம். ”ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்னு சேரணும்னு சொல்ல வந்த ரஞ்சித் தமிழர்கள் ஒன்னு சேரணும்னு சொல்லிக்கிட்டே இருக்கார், அதை மறைச்சி மறைச்சி சொல்லிக்கிட்டே இருக்கார். அவர் தமிழர்கள் பற்றியா சொல்லறார். நல்லா பாருங்க.”

அதற்குப் பின் வைக்கப்பட்ட கேள்விக்கு “உங்களுக்கு எல்லாம் அது புரியாது, புரியவே புரியாது, யாருக்கும் புரியாது.“ என்று ஒரு அறிவுத் தாக்குதல்.

அத்துடன் அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை.

78 பேர் கொல்லப்பட்டார்கள் என்று தகவல் தந்தார் ஆனால் படத்தில் 124 பேர் நேரடியாகவும் 120 பேர் கும்பல் வகையிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு தகவல்.

தமிழ்த் திரையில் சாதியமே இல்லை என்பது அவரது ஆணித்தரமான கருத்து.

கபாலி படமே ஒரு அரசியல் என்றவர் ”அட்டகத்தி ஒரு காவியம் (!!!) அதுதான் ரஞ்சித் படம் . கபாலி எல்லாம் அவருக்கு எதற்கு? தேவையில்லாத தீவிரங்களப் பேசி ஒட்டடைக்கு முட்டு கொடுக்கறீங்க, (?) அது ஒரு வியாபாரம், பெரிய வியாபாரம் நிகழ்ச்சியை முடியுங்கள்.” எனக் கட்டளையிட்டார்.

இவரது அறச்சீற்றத்தைப் பார்த்து இவரும் இவரது நண்பர்களும் தமது படங்களை எடுத்து முதலில் தெருத்தெருவாக ஒருவாரம் மக்களுக்குத் திரையிட்டுக் காட்டிவிட்டு பிறகுதான் அரங்கத்திற்கு அனுப்புகிற ஒருவித திரைப்பட இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ எனத் திகைத்து விட்டேன்.

நான் இவரது படங்களைப் பார்த்ததில்லை. உடனடியாக வேறு சில நிகழ்ச்சிகளில் இவர் பேசிய பேச்சுகளைக் கேட்டேன். சாதியைத் தவிர வேறு எதுவும் பேசாத படங்களைப் பற்றி ஓங்கார நாதம் எழுப்பிக் கொண்டிருந்தார்.

தணிக்கை அரசியல், வணிக அரசியல், சாதி அரசியல், பிம்ப அரசியல், தேசிய அரசியல், தொடங்கி ஊடக அரசியல், உலக அரசியல் வரை அனைத்தைப் பற்றியுமான பேச்சுகளை கபாலி என்ற ஒரே ஒரு படம் தொடங்கிவைத்துள்ளதை நினைத்த போது இது உலக அதிசயம்தான் என்று தோன்றியது. இது “இயக்கமாக“ வளர்ந்தால் நல்லது.

அவருடைய பேச்சின் வல்லின ஒலியை, உடல் மொழியை ஒரு நாடக ஆசிரியனாக என்னால் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒன்றே ஒன்றுதான் சொல்லுவேன், அதைப் பார்த்து கோபம் வரவில்லையென்றால் இந்திய-தமிழ் சமூக-அரசியல் உங்களுக்குள் இல்லை என்றுதான் பொருள். சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது.  இதற்கெல்லாம் கோபமா என்று கோபமாகக் கேட்பவர்கள் உலக அரசியல், உலகத் திரைப்படம், உலக அமைதி பற்றிப் பேசவே தகுதியானவர்கள்.
நாங்கள் என்ன செய்வது சேரி அரசியலையே இன்னும் சரியாகப் புரி்ந்து கொள்ள முடியாதவர்கள்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். “குற்றம் செய்வது மனித இயல்பு. அதனை மறைத்து வைத்துக் கொண்டாடுவது கலைஞர்கள் இயல்பு“ என்று ஒரு பேச்சு பரவலாக உள்ளது.

[கபாலி காலகாலமாக ஒன்று பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தை இப்படிச் சாதி வெறிபிடித்த சமூகமாக மாற்றிவிட்டதே!!!]

(“மறதிகளால் கட்டப்படும் வரலாறு” கட்டுரை இதற்கு முன் நான் பேசியிருந்த உலக அரசியல் தெரியாத எனது சாதி அரசியலுக்கு! ஒரு உதாரணம்.)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 25 நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது ‘காந்தியைக் கடந்த ககாந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.