
இந்த பதிவில் ஏன் பிரம்மசர்ய துறவு முறை இந்து மதத்துக்கு ஒப்புதலானதில்லை என்பதையும், அதன் எதிக்ஸையும் நவீன கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
அகத்தியர், வசிஷ்டர், விசுவாமித்திரர் என வேதரிஷிகளை எடுத்துகொண்டால் அவர்கள் யாரும் பிரம்மசாரிகள் அல்ல, வெஜிட்டேரியன்களும் அல்ல. ரிஷிகள், ரிஷிபத்தினிகள் என ஆசிரமம் அமைத்தே குடும்பத்துடன் வாழ்ந்தார்கள். இந்து கடவுளர்களும் சிவன், பார்வதி, முருகன், வினாயகர் என குடும்பத்துடனே அருள்பாலிக்கிறார்கள். திருமனம் செய்து, பிள்ளைபெறாவிடில் புத் என்ற நரகம் கிடைக்கும் என இந்துநூல்கள் கூறுகின்றன. வியாசர் முதலான சன்யாசிகளும் திருமனம்ச் செய்யவில்லையெனினும் அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கவே செய்தன.
திருமண மறுப்பு, வெஜிட்டேரியனிசம் இவை இரண்டுமே ஜைன மதத்தால் தான் இந்தியாவுக்கு அறிமுகபடுத்தபடுகிறது. பின்னாளில் பவுத்தம் இதை கைகொள்கிறது. ஆதிசங்கரர் தான் முதல் முதலாக திருமணம் செய்யாமல் இருந்த துறவி. ஆனால் அவரும் தாயின் அனுமதி பெற்றே துறவு பூணுகிறார். அதற்காக முதலை அவரை பிடித்த கதையும் கூறப்படுகிறது.
ஏன் துறவிகளுக்கு பிரம்மசர்யம் அனுமதிக்கப்படவில்லை?
பாலியல் மறுப்பு என்பது எளிதானது அல்ல. அது இயற்கை அளித்த விசயம்…உறுப்புகளை சிதைத்துகொள்ளாமல் ஒருவரால் ஆசையை துறக்க இயலாது. அப்படி இருக்க சொல்வது இயற்கைக்கு முரணான விஷயம். இந்த சூழலில் ஆண்,பெண் என அனைவரிடமும் தந்தை ஸ்தானத்தில் இருக்கவேண்டிய துறவி அடக்கமாட்டாத உணர்வுகளை மனதில் கொண்டு இருப்பது மிகப்பெரும் விபரீதத்தை தோற்றுவிக்கும்.
அதனால் பிரம்மசர்யத்தை வலியுறுத்திய மடங்கள், நிறுவனங்கள், மதங்கள், அமைப்புகளில் பாலியல் முறைகேடுகள் பெருமளவு எழுவதை காண்கிறோம். அதனால் அந்த அமைப்புகளின் பெயர் கெட்டு மதங்களே சீரழிவதுதான் வாடிக்கை.
சமூகசேவைக்கு துறவு அவசியமா என்றால் இல்லை. கலியுகத்தில் துறவிகள் அவசியமில்லை. பக்திமார்க்கமே முக்தி அடைய போதுமானது எனும் நிலையில் துறவும், யாகமும், பிரம்மசர்யமும் ஏன்? ராமானுஜர் போன்ற ஞானிகள் மனைவி தன் குருவை சாதி பார்த்து அவமதித்ததால் தான் மனைவியை விட்டு விலகினரே ஒழிய திருமணம் கூடாது என்பதால் அல்ல. ஆழ்வார்கள், நாயன்மார்கள் பலரும் திருமணம் ஆனவர்களே. சிவனே சுந்தரரின் காதலுக்கு தூது போகிறான். முருகன் வள்ளியை மணக்க வினாயகர் உதவுகிறார்.
நீங்கள் துறவு பூணவேண்டுமெனில் மகராசனாக பூணுங்கள். ஆனால் 60 வயதில் உங்கள் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பூணூங்கள். உங்கள் தாய்,தந்தையை நட்டாற்றில் விட்டுவிட்டு துறவுபூன்டால் அவர்களை பார்ப்பது யார்? எவனோ பார்க்கட்டும் என்றால் அப்புறம் நீ துறவுபூண்டு யாருக்கு சேவை செய்யபோகிறாய்? மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதே வழமை…பெற்ற தாய்,தந்தையை உதறிவிட்டு குரு, தெய்வம் என்பது “பெற்ற தாய் கும்பகோணத்தில் கிண்ணிபிச்சை எடுக்க கும்பகோணத்தில் கோதானம் செய்த கதைதான்”
எதிக்ஸ் என்ற விதத்தில் பார்த்தாலும் திருமண மறுப்பு என்பது ஆழ்ந்த பெண்வெறுப்பால் வருவதும், பெண் என்பவள் பாவகரமானவள், அவளை தீன்டினால் புனிதம் கெட்டுவிடும் என்றும் நம்புவதன் விளைவே. இத்தகைய ஆணாதிக்கபோக்கு எப்படி ஆன்மிகமாகும்?
தாயுடன் தந்தையர் பாதம்
என்றும் தலைவணங்காதவன்
நாள்தவறாமல் கோயிலில் என்ன காண்பான்?
நந்தகோபாலன் வேண்டும் வரம் தருவானோ? – ஹரிதாஸ் (1944)
நியாண்டர் செல்வன், பேலியோ டயட் நூலின் ஆசிரியர்.