சூரியனுக்கு பின்பக்கம் உதிர்ந்த ஒரு சொல்: ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச். ஜி. ரசூல்
ஹெச். ஜி. ரசூல்

கவிதை வனத்திலிருந்து சூரியனுக்கு பின்பக்கம் ஒரு சொல் உதிர்ந்தது. தமிழ்கவிதை நவீனமயமான சம்பவத்தின் அடிநாதக் கோடுகளால் ஞானக்கூத்தன்
வரைந்த ஓவியம் நம்மோடு நேர் நின்று பேசுகிறது. உரையாடல் தொனிசார்ந்த மரபின் தொடர்ச்சியோடு எளிமையும் அங்கதமும் நிறைந்த எழுத்தின் புதுவித திரட்சி அது. காட்சி சித்திரங்களின் பதிவுகளில் தத்துவ நோக்கினையும் பார்ப்பனீய மேலாண்மை இழைகளையும் இணைவாக்கம் செய்த எழுத்தில் அதியதார்த்தமும் ஊடாடியது.

சூளைச் செங்கல்லில் இருந்து
ஒரு கல் சரிந்தது.
சரிந்த கல்லை எடுத்து அணைத்திட யாரும் இன்னும் முன்வரவில்லை. அது தனிமையின் முனகலாகிக் கிடக்கிறது. கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட துயரம் தொடர்ந்து துரத்துகிறது.

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம்
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
தலையும் களவுபோய்விடும் அளவிற்கு பிரச்சினைகளின் விகாரமான காலமாக இது இருக்கிறது.சர்ரியலிச படிமக் கூறுகளையும் இணைத்து பேசும் எழுத்தின் முறையியல் மண்டையில் களிமண் இருப்பதாக சொன்னவாக்கினை பரிட்சித்துப்பார்க்க தன் தலையைத் திறந்து பார்த்தபோது திறந்த இஸ்திரிப்பெட்டியில் போல் மின்சாரம் பாய்ந்திருக்கிறது.

வேலையைச் செய்வதற்கு மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் துயருலகம் பலனை எதிர்பார்க்காதே என்கிறது. உழைப்பின் மீது பயனற்ற உதாசீனத்தை செய்தவைதீக அரசியலின் மீதான எதிர்வினையைப் போலவும் சில வரிகள் தோற்றம் தருகின்றன.
வேலைசெய் என்னும் உங்கள் வார்த்தைகள்
குசுபோல்நாறக் கழிவறை உலகம் செய்தீர்

மனிதக்கழிவுகளைச் சுமக்கும் மக்கள் வாழ்தலினோடும், வலிகளோடும் வதைபட்டுகிடக்கும் உலகினுள் நமது இருத்தல் நிகழ்வது இன்னும் ஒரு அவமானகரமான செயற்பாடாகவே இருக்கிறது.
ஆள்சித்திரங்களை தனது படைப்பினுள் அலையவிட்ட ஞானக்கூத்தனின் இயல்புவாத எழுத்தில் சைக்கிள் கமலம் இன்னும் சைக்கிள் பழகி மைதானத்தை சுற்றிச் சுற்றி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.தம்பியைக்கொண்டு பள்ளிக்கு போவதும், கடுகுக்காக ஒருதரமும், மிளகுக்காய் மறுதரமும் கடைக்கு போவதும்,கூடுதல் விலைக்காக சண்டைபிடிப்பதும் காற்றாய் பறப்பதும், மாடுகள் ,குழந்தைகள் எதிர்ப்பட்டால் உடனே இறங்கிக்கொள்வதுமாய் இது நிகழ்கிறது.
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

ஞானக்கூத்தனின் காட்சிவிவரணை ஆளோவியச்சித்திரங்களில் கதைக்கவிதையின் கதாபாத்திரமாய் அங்கம்மாள் மீளுருவாக்கம் கொள்கிறாள்.1959 களில் சி.சு. செல்லப்பாவின் எழுத்துபத்திரிகையில் வெளிவந்த ந. பிச்சமூர்த்தியின் கதைக்கவிதைக் களம் பெட்டிக்கடை. அக்கவிதை பெட்டிக்கடை நாரணன் கதாபாத்திரத்தின் வழி கலப்பட வியாபார விமர்சனத்தையும் பங்கீட்டுகடைநடத்தி பணக்காரன் ஆகும் சுரண்டலையும் மையப்படுத்துகிறது. அதே விதமான பெட்டிக்கடையின் கதைக்களமே ஞானக்கூத்தனின் அங்கம்மாளின் கவலை கதைக்கவிதை. பெட்டிக்கடையில் மிட்டாய், சீயக்காய், ஊறுகாய் விற்றுக்கொண்டிருக்கும் அங்கம்மாளை நையாண்டி செய்ய ஓசியாய் சுருட்டுவாங்க ,தொட, முத்தமிட, பாலியல் சேட்டை செய்யும் நாராயணன்,கோபாலன், வேணு கதாபாத்திரங்களை ஏசியவாறு எரிச்சலை வெளிப்படுத்தும் அங்கம்மாள் கவலையோடு இப்படி முடிக்கிறாள்
அங்கம்மாள் இருக்கையில் அமர்ந்தாள்
அருகில் இருந்த ஒருவரைக் கேட்டாள்.
‘என்ன சாமி எனக்கும் வயது
நாளை வந்தால் ஐம்பதாகிறது
இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்
நினைக்காமல் போகக் காரணம் என்ன?’

ஞானக்கூத்தனின்அம்மாவின்பொய்கள்கவிதைகூடஇயல்புவாழ்வுச் சித்திரங்களிலிருந்து உருப்பெற்று ஒரு சமூகவிமர்சனச் செயல்பாடாய் நகர்கிறது. பெண்ணுடன் சிநேகம் கொண்டால் காதறுந்து போகும் என்பதும், தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்துமென்றதும், தவிட்டுக்காக உன்னை வாங்கினேன் என்றதுமான அம்மாவின் பொய்களை வரிசைப்படுத்திவிட்டு வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தை சார்ந்ததாகக் கருதினாயா என சந்தேகமெழுப்புகிறார். தாய்ப்பாலை நிறுத்தல் போலத் தாய்ப்பொய்யை நிறுத்தலாமா உன்பிள்ளை உன்னை விட்டால் வேறெங்கு பெறுவான் பொய்கள் என உரையாடிச் செல்லுகையில் அம்மாவின் பொய்கள் இன்றைய அரசியல்தளத்தில் வேறுஅர்த்தத்தைக் கூட உருவாக்கிச் செல்கிறது.

உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய் நகர்கிறது பக்கவாட்டில் என்பதாக போலிமைக்குள் சிக்குண்ட உலகியலை படிமங்களின் ஊடாக பேசும் ஞானக்கூத்தன் ஒரு விதமான அந்நியமாதலை ஊடறுத்துக் காட்டுகிறார்.
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.
என்ன மாதிரி உலகம் பார் இது.
தமிழ்சூழலில் வெகுவாக அறியப்பட்ட நகுலனின் ராமச்சந்திரனா என்றேன் கவிதையை இக்கவிதை நினைவூட்டாமல் இருந்தால் ஆச்சரியம்தான். சமகால எழுத்துப்பிரதிகளின் உள்ளடக்க ஒப்புமையும் வெளியீட்டுபாங்கில் வேறுபடுந்தன்மையும் கொண்டு இயங்குவது ஒரு ஆழ்ந்த புரிதலுக்கான வாசிப்பு வெளியை திறந்து விடாமல் இல்லை.
‘ராமச்சந்திரனா என்றேன் ராமசந்திரன் என்றான்
எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை
நான் சொல்லவுமில்லை ‘

சங்ககால தமிழ்கவிஞர் மோசிகீரனாரை தனது கவிதையில் மறுஉருவாக்கம் செய்கிறார் ஞானக்கூத்தன்
சேரமன்னன தகடூர் எறிந்த இரும் பொறையனைக் காண மோசிகீரனார் அரண்மனைக்கு வருகிறார். அங்கு மன்னனின் முரசுக்கு நீராட்டு விழா.. கோலாகலம்..நடந்துவந்த களைப்புமிகுதியால் மோசிகீரனார் முரசு வைத்திருந்த காலிக்கட்டிலில் அசதி மேலிட படுத்து தூங்கி விடுகிறார்.. திடீரென விழிப்புவந்து பார்த்தபோது பணிப்பெண்கள் எடுத்து வீசும் கவரியை எடுத்து மன்னன் இரும்பொறையன் மோசிகீரனாருக்கு வீசிக் கொண்டிருக்கிறான்.. தவறு செய்த என்னை உன் வாளால் இரு துண்டாக்கி போடாமல் இவ்வாறு கவரிவீசுகிறாயே என மோசிகீரா புகழ்ந்து பாடுகிறார்..
ஞானக்கூத்தனின் பகடி எழுத்து இவ்வாறாக உருமாறுகிறது

மோசிகீரா
மகிழ்சியினால் மரியாதையை நான் குறைந்ததற்கு
மன்னித்தருளவேண்டும் நீ

சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக் கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்

ஆனால் உன்மீது அளவிறந்த
அன்பு தோன்றிற்று இன்றெனக்கு

அரசாங்கத்து கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் எனும் காரணத்தால்…
இக் கவிதைப் பகடியின் குறிப்பீட்டாக்க அரசியல் விரிவான தளத்தில் தமிழ்மரபையும், சங்க இலக்கியத்தையும் எதிர்மறைஅர்த்தங்களைக் கூட பிரதியிலிருந்தே உற்பத்தி செய்து விடுகிறது.. கவிதையை பொருள்கொள்ளலில் மேலோட்டமான புளகாங்கித வாசிப்பு நமது காலத்தில் போதாமை சார்ந்தே வெளிப்படுகிறது..
.
தோழர் என்ற சொல் தமிழ்ச் சூழலில் இடதுசாரிகளை குறிக்கும் ஒரு சொல்.. மாற்றானின் தோளுக்கடியில் அண்டிப்பிழைக்கும் அடையாளம் போல இடதுசாரிகள் மீது எரிச்சலை உமிழும் வரிகளும் ஞானக்கூத்தனிடம் உண்டு

தோழரே நீங்கள் எங்கே வாழ்கிறீர்
நாங்களெல்லாம் குழியிலே
அந்தக் குழியும் தோழரே
மாற்றான் தோளுக்கடியிலே..

ஞானக்கூத்தனின் குரலில் சமூகம் கெட்டுப்போய்விட்டது. சோடாப்புட்டி வீசுவோம் வா என்கிறது. புனித மதிப்பீடுகளோடு சாதீய அதிகாரத்தில் வீற்றிருந்த பார்ப்பனீயத்தின் வீழ்ச்சி ஒருவேளை இந்த சமூகம் கெட்டுப்போனதற்கு காரணமாய் இருந்திருக்கக் கூடும்.
இதனால்தானோ என்னவோ பார்ப்பனீய வீழ்ச்சிக்கு காரணமான திராவிட, தமிழ் அடையாளத்தின் மீதான வெறுப்பின் அரசியலை ஞானக்கூத்தன் ஒரு பார்ப்பனீய சார்புநிலையோடு வெளிப்படுத்தவும் செய்கிறார் என்பதான விமர்சனமும் உண்டு.

எனவேதான் எனக்கும் தமிழ்தான் மூச்சு ஆனால் பிறர்மேல் விடமாட்டேன் என பகடி செய்கிறார். தமிழ் பேச்சை அவரால் தவளைக்கூச்சல் என்று எதிர்மறையாகவும் வருணிக்கமுடிகிறது. தவளைகளோடுள்ள பிற வாழ்வியல் அனுபவத்திலிருந்து விலகிய தொடர்கவிதையின் முதற்பகுதி ஒரு குறியீட்டியல் நோக்கில் தமிழ் அடையாள அரசியலை விமர்சிக்கிறது…
தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்
ஆயிரம் வருஷம் போச்சு
போயிற்றா தவளைக் கூச்சல்

கொல்லையில் க்ராக்,க்ராக் என தொந்தரவு தந்து கொண்டிருக்கிறது சாக்கடை மூடியாச்சா என அப்பா கேட்கிறார்,படிக்கட்டில் வந்தமரும் சுப்பராமனுக்கு வீட்டுவரிக் கட்டவில்லையென்றால் படிக்கட்டை பெயர்த்துவிட்டு போவானென எச்சரிக்கைசெய்கிறது,கொல்லையிலே என்ன சப்தம் என அம்மா கேட்கையில்போய் பார்க்கும் போதுதான் தவளைகளின் விசுவரூபம் தெரிகிறது..
ஒவ்வொன்றும் ஆளுயரம் முன்கால் தூக்கிப்
பின்காலில் நின்றிருக்கும் வயிறு மூட்டை
ஒவ்வொன்றும் விரகத்தால் என்னைத் தீண்டி
முத்தமிடக் கூச்சலிட்டு ஓடப்பார்த்தேன்
ஒருதவளை பாடிற்று. ஒன்றென் தோளைத்
தட்டிற்று. மற்றொன்று ஆடை நீக்கி
அதிசயமாய்த் தேடிற்று. கூச்சலிட்டேன்
அம்மாவின் காதுகளில் விழவே இல்லை.

தவளைக்கூட்டம் தமிழ்க்கூச்சல் போடுகிறது, ஆளுயர உருவெடுத்து விரகத்தால் தீண்டுகிறது.தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.இங்கு வெறும் தவளைக்கூட்டமாக இக்கவிதை இயங்கவில்லை. இந்தவகை பார்ப்பனீய உளவியல் சிதைவின் நனவிலி வெளிப்பாடுதான் பல்லியின் மரணப்பிடிக்குள் சிக்கிக் கொண்ட கரப்பானின் துயரமாக கூட வெளிப்பட்டிருக்கக்கூடும்.
மாட்டுத்தோல் உலரும் , ஆடு கோழிகள் நாய்கள் வாழும் சூத்திரர் தெருக்களில் , கடவுளின் துணையில் சாமி வலம் வர வேதம் பாடி அங்கே வருகிறான் பார்ப்பான் என்கிற ஞானக்கூத்தனின் கவிதைச் சித்திரத் தோற்றம் அனைத்துவாசகர்களுக்கும் ஒரே விதப் புரிதலை கொடுப்பதில்லை. சுத்தத்தாலும், புனிதங்களாலும் கட்டமைக்கப்பட்ட பார்ப்பான் சூத்திர தெருக்களுக்குள் வரவேண்டிய நிர்பந்தத்தின் மீதான எரிச்சலாக வெளிப்படவும் கூட வாய்ப்பிருக்கிறது.சூத்திர தெருவுக்குள் பார்ப்பான் வருவது ஒரு மாற்றமாக கொண்டால்கூட கோயிலுக்குள்ளும், கருவறைக்குள்ளும் சூத்திரன் எப்போது கால் பதிப்பான் என்ற கேள்வி எழாமல் இல்லை. சூத்திரனைத் தாண்டி தலித்துகளின் உரிமை எப்போது என்கிற குரலும் அருகாமையில் கேட்கவே செய்கிறது.

அன்றைய தஞ்சாவூர் நிலவுடைமை சாதீய வாதிகள் அரங்கேற்றிய சாணிப்பால் சவுக்கடி கொடுமைகளிலிருந்த மீண்ட தலித் விவசாயக் கூலிகள் மீண்டும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். 1968 டிசம்பர் இருபத்தைந்தாம் நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒருபடி நெல் அதிகமாக கூலி உயர்வு கேட்டதற்காக நிலவுடமையாளன் கோபாலகிருஷ்ணநாயுடுவும் அடியாள்படைகளும் வெண்மணிக்கிராமத்தில் இருபது பெண்கள் 19 குழந்தைகள் உட்பட 44 தலித் விவசாயக்கூலிகளை குடிசைக்குள் உயிரோடு எரித்து படுகொலை செய்தனர். இது தமிழக வரலாற்றையே உலுக்கிய ஒரு நிகழ்வு. இதனை கீழவெண்மணி என தலைப்பிட்டு ஞானக்கூத்தன் ஒரு கவிதையாகவும் எழுதியுள்ளார். ஆனால் அந் நிகழ்வின் கொடுந்துயரம் வாசகனின் இதயத்திற்கு உணர்ச்சிபூர்வமாகவோ அறிவுபூர்வமாகவோ கடத்திச் செல்லப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியாக எழாமலும் இல்லை.

மல்லாந்த மண்ணின் கர்ப்ப
வயிறெனத் தெரிந்த கீற்றுக்
குடிசைகள் சாம்பற்காடாய் ஆயின
புகையுடன் விடிந்தபோதில்
ஊர்மக்கள் வந்துபார்த்தார்
குழந்தைகள் இவையென்றார்
கன்று காலிகள் இவையென்றார்
இரவிலே எரிந்துபோன
அனைத்துக்கும் அஸ்தி கண்டார்
நாகரிகம் ஒன்று நீங்கலாக
ஞானக்கூத்தனின் இக்கவிதை வானம்பாடி இயக்க கவிஞர்கள் , இடதுசாரிக் கவிஞர்கள் வெளிப்படுத்திய கவிதையாக்கமுறையிலிருந்து வேறுபட்டே நின்றது. இயல்புவாத எழுத்துச் சித்தரிப்பு முறையிலேயே பெரும்பாலும் பயணித்திருந்த ஞானக்கூத்தனின் இக்கவிதை அடையாளக்குரலாக ஒலிக்காமல் ஏன் உள்ளடங்கிய பொதுக்குரலாக, இன்னொன்றாக இதில் வெளிப்பட்டுள்ளது என்பதுவும் உளவியல் பகுப்பாய்வுக்கு உட்பட்ட ஒன்றுதான்.

இந் நிகழ்வைத்தான் உணர்ச்சிபூர்வமாக கவிஞர் இன்குலாப் மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா/ உன்னப்போல அவனப்போல எட்டுசாணு உசரமுள்ள மனுஷங்கடா என மக்கள் பாடலாக மாற்றினார்.இது நவீனகவிதையிலிருந்து வேறுபட்ட இசைப்பாடல் வடிவம்.
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே – உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில என்னெய ஊத்துதே
எதையெதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்க போனீங்க?

நமது வாழ்தல் வர்க்க முரண்களாலும் சாதீய முரண்களாலும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.இதில் சாதீய ஒடுக்குமுறைக்கு அதிகமும் ஆட்பட்ட, கழிவுகளை சுத்தம்செய்கிற தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாகிற அருந்ததியர்களும் உண்டு… தோட்டியென அடையாளப்படுத்தும் கழிவுகளை அகற்றும் தோழன் செத்துக்கிடந்த பெருச்சாளியை அகற்ற ரெண்டு ரூபாயை பறித்திருப்பான் என்பதும், பார்ப்பானை எப்படி பயமுறுத்தலாம் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன…. என்பதாக கேள்வி எழுப்பும் பார்ப்பனீய ஆதிக்க உளவியல் கலப்பும் இணைந்தே ஞானக்கூத்தனிடம் வெளிப்படுகிறது.. இது அவரது சார்பும் கருத்துநிலையும், நனவிலிமன தெறிப்பும் சார்ந்தது.. ஒரு வாசகன் இதோடு உடன்பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை..

ஞானக்கூத்தனின் மற்றுமொரு கவிதையில் பார்ப்பான் தெருவில்எறிந்த எச்சிக்களைக்காய் நாய்கள் ஒன்றையொன்று சண்டையிட்டு தாக்கிக் கொள்கின்றன. குரைக்கின்றன.அயல்தெருநாய்களும் ஒரு விவசாயப் பின்புலம் சார்ந்த நஞ்சைப் புஞ்சை வயல்கள் நிறைந்த பகுதிதாண்டி ,நகரநாய்களும்,சிற்றூர்நாய்களும் ,வேற்றூர் நாய்களும் ஒன்று சேர்ந்து குரைக்கத் தொடங்குகின்றன. சுயமற்று, மந்தைத்தனமாய் மாறிவிட்ட நாய்களின் குரைப்பாக ஞானக்கூத்தன் குறிப்பீட்டாக்கம் செய்யும் குரல்கள் யாருடையது..?

சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
காரணம் எதையும் கூறவேண்டியதில்லை..வேட்டை நாய்களின், வெறிநாய்களின் குரைத்தல்கள் யார் யாருக்கோ அச்சமூட்டுகிறது. அந்த எதிர் அரசியலே இப்போது நமக்கும் முக்கியமானது.
(ஞானக்கூத்தன் தோற்றம் அக்டோபர் 7, 1938 – மறைவு ஜுலை27, 2016)

1938ல் மயிலாடுதுறையில் பிறந்த ரங்கநாதனின் எழுத்துலகப் பெயர் ஞானக்கூத்தன்.
1968ல் கவிதைகளை எழுத ஆரம்பித்தவர்.
அன்று வேறு கிழமை,
சூரியனுக்குப் பின்பக்கம்,
கடற்கரையில் சில மரங்கள் இவரது கவிதை நூல்கள்
ஞானக்கூத்தன்
கவிதைகள் இவரது தொகுப்புநூல்
டிசம்பர் 1998 இல் விருட்சம் வெளியீடு.
ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களில் இயங்கியவர்.

ஹெச். ஜி. ரசூல், கவிஞர்; விமர்சகர்.  மைலாஞ்சி, உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள், பூட்டிய அறை உள்ளிட்ட ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. பல முக்கிய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, மற்றும் மலாயா மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெண்ணியம், தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல், சூபி விளிம்பின் குரல், ஜிகாதி பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.