கௌதம சித்தார்த்தன்

தமிழ்மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்களில் ஒன்றான அண்ணமார் கூத்து நிகழ்ச்சியை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. தமிழகத்தின் மேற்குப்பகுதியான கொங்குமண்டலத்தின் செழுமையான மரபில் காலூன்றி நடக்கும் கதைப்போக்கும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக் காட்சிகளும் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கில் இந்த நாட்டுப்புறச் சொல்கதை, முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தக் கதைப்பாடலை பலமுறை பாடல் வடிவத்தில் கேட்டிருக்கிறேன். சமீபத்தில், கூத்து வடிவத்தில் நிகழ்ச்சியைப் பார்க்க வாய்த்தபோது பிரமித்துப் போனேன். அதுவும் படுகளக் காட்சி உலகக் காவிய வடிவங்களில் போற்றக் கூடியது.
இரு இனக்குழுக்களுக்கு இடையிலான போரை அதன் பண்பாட்டுக் கூறுகளுடன் முன்வைக்கும் இந்த கதைப்பாடலின் மையத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் கதையின் அழகியல் காட்சிகள் ஒரு பெரும் தத்துவ தரிசனத்தை முன்வைக்கின்றன.
தற்கால நவீன நாடகவியலாளர்கள் வியந்து சொல்லும், பிரேசில் நாட்டு நாடகக்காரர் அகஸ்டோபோவால் உருவாக்கிய ‘புலனாகா அரங்கு’ (Invisible theatre) என்கிற நவீன நாடக உத்தியை இங்கு பார்க்கலாம். அதாவது, நாடகத்திற்கான அரங்கு என்று எதுவும் இல்லாமல், பொதுவெளியில் (தேநீர் கடை, பூங்கா போன்ற இடங்கள்) எவ்வித ஒத்திகையும் இல்லாமல் நிகழும் ஒரு கருத்து விவாதமானது, கண்களுக்குப் புலனாகாத நாடக அரங்கமாக மாறுகிற நுட்பத்தையும், இதில் பங்கு பெறும் ஒவ்வொரு நபரும், தங்களையும் அறியாது கதாபாத்திரங்களாக உருமாறுகின்ற விதத்தையும் தனது அரங்கக் கோட்பாடாக பல பரிமாணங்களில் முன்வைக்கிறார் போவால்.
தற்காலங்களில் நடக்கும் டிவி டாக் ஷோவில் கலந்து கொள்ளும் பார்வையாளனின் பாத்திரத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம்.
இந்த நவீன நாடகக் கோட்பாடு உலகம் முழுமைக்கும் புகழ் பெற்ற கோட்பாடு. இந்தப் பார்வையின் நுட்பத்தில் நாம் இந்த அண்ணன்மார் படுகளக் காட்சியை அணுகும்போது, ஒரு அபூர்வமான அரங்கு, முற்றிலும் புதிய பரிமாணத்தில் உருக் கொண்டிருப்பதை உணரலாம்.
பொன்னர், சங்கர் என்கிற அண்ணன்மார் போரில் இறந்துபோகிறார்கள். தகவல் அவர்களது இரு மனைவிமாருக்கும் வந்து சேர்கிறது. கூடியிருக்கும் சுற்றத்தார் தாலியறுக்கும் சடங்குக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், மனைவியர் இருவரும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். “நாங்கள் அண்ணன்மார் முகத்தை இதுவரை பார்த்ததில்லை. கல்யாணம் செய்யும் போதும் அவர்களது முகத்தைப் பார்த்து மாலையிடவில்லை. கத்தியைத்தான் பார்த்து மாலையிட்டோம். கத்திதான் எங்களுக்குத் தாலி கட்டியது. அதனால் கத்தி எப்போது சாகிறதோ, அன்றைக்குத்தான் நாங்கள் தாலியறுப்போம்…” என்கிறார்கள்.
மாபெரும் பிரமிப்பு என்னைக் கவ்விக் கொண்டது. என்ன ஒரு அபூர்வமான தரிசனம். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் லூயி போர்ஹேஸின் கதை ஒன்றைப் படிப்பது போல அந்நாடகத்தின் புதிர்ச்சுழலில் ஆழ்ந்து போனேன். புதுவகை எழுத்தின் சொல்லாடலாக அந்தக் காட்சிப் படிமம் கண்முன்னே விரிந்து கொண்டேயிருந்தது.
ஆண் என்பவனால் கட்டமைக்கப்பட்ட மரபுகளும், நியதிகளும் அவனுக்கானவை. தான் இறந்துவிட்டால், தனது மனைவியும் இறந்துவிடவேண்டும் என்று கொடூரமாகச் செயல்பட்டதன் விளைவு, உடன்கட்டையேறுதல். அந்த மரபை காலக்கறையான் அரித்துத் தின்று விட்டதை ஆணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதற்கு இணையான ஒருநியதியாக, தான் செத்துப்போய் விட்டால், தனது மனைவியும் மனரீதியாக செத்துப்போய் விடவேண்டும் என்று ஆண் ஏற்படுத்திய குரூரமான சடங்குதானே விதவைக் கோலம்..? இந்தக் கேடுகெட்ட குரூரமான அவலத்திலிருந்து, பெண் எப்படி மீள்வதென காலங்காலமாய் அடைபட்டுக் கிடந்த தங்களது அற்புதத்தை இதுவரை அறியப்படாத மொழியில் சொல்கிறாள் பெண்.
பொன்னர் சங்கரின் இரு மனைவியரும் பார்வையாளர்களுடன் விவாதம் செய்யும் காட்சிப்புலத்தில், பார்வையாளர்கள் கதாபாத்திரங்களாக உருமாறும் தரிசனத்தில், புலனாகா அரங்கு பலத்த ஓசையுடன் திறந்து கொள்கிறது.
இந்தக் காட்சியை நுட்பமாக அவதானிக்கலாம்:
சமூகம் சார்ந்த பொதுவெளியில், விதவைக்கோலம் என்னும் கருத்துருவம் கொண்ட கண்களுக்குப் புலனாகும் அந்தக் காட்சியில் கணவன் இறந்து போகிறான். ஆனால், அந்தப் படிமத்தைத் தலைகீழாகத் திருப்பியடிக்கிற காட்சியான புலனாகா அரங்கில், கணவன் உயிரோடிருக்கிறான்.
நான் இங்கு உருவகப்படுத்துவது அகஸ்டோபோவால் சொல்கிற ‘புலனாகா அரங்கு’ பற்றிய பார்வை அல்ல. அந்தப் பார்வையை முற்றிலும் வேறு ஒரு புதிய சிந்தனையில் பார்க்கவல்ல ஒரு தரிசனம்.
நாங்கள் ஆண் என்கிற சதைப் பிண்டத்துக்கு மாலையிட வில்லை, அது அழிந்துபோனதும் நாங்களும் சேர்ந்து அழிந்துபோக. நாங்கள் மாலையிட்டது வீரம், விவேகம் போன்ற புலனாகா அறங்களுக்கு. கத்தி என்பது சாகாவரம் பெற்றது. அதற்கு எப்படி அழிவில்லையோ, அதுபோல எங்கள் வாழ்வியற்கூறுகளுக்கும் அழிவில்லை என்கிற பெண்மொழி இங்கு தனக்குத்தானே கட்டமைத்துக் கொள்கிற புதிய பரிமாணம் புலனாகிறது.
புலனாகும் அரங்கில் உள்ள ஆண்சமூக மரபைக் கேலிக்குள்ளாக்குவதும், கேள்விக்குள்ளாக்குவதுமான ஒரு சொல்லாட்சி, அந்த நாடகத்தில் அற்புதமாகப் பிணைந்திருப்பதை உணர்ந்தபோது, நமது நாட்டார் கலைகளின் மீது ஒருவிதக் காதலே ஏற்பட்டுப் போனது.
கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்; ஊடகவியலாளர். அண்மையில் வெளியான இவருடைய நூல்கள்: முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், சங்க கால சாதி அரசியல். இரண்டும் எதிர் வெளியீடுகள்.
முகப்புப் படம்: www.jiaurrahman.com