“எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு கர்நாடக சங்கீதத்தில் உள்ளது”

டி. எம். கிருஷ்ணாவின் மகஸேசே விருது மற்றும் அதை பற்றிய ஊடக விமர்சனங்களை பற்றி ஊரூர் ஆல்காட் குப்பத்தின் தெளிவுபடுத்தல்

ச. பாளையம், கா. சரவணன், ரா. வேலன்

(மேலே குறித்த எழுத்தாளர்கள் ஊரூர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள், மற்றும் மீனவ கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகள். ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் ஒருங்கிணைப்பில் மூவருக்கும் முக்கிய பொறுப்புகள் மற்றும் பங்கு உள்ளன.)

நாங்கள் இந்த ஊரூர் ஆல்காட் குப்பத்து மக்களின் சார்பாக எழுதுகிறோம். ராமன் மகசேசே விருதுக்கு எழுத்தாளர் மற்றும் இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் எதிர்க்கருத்துக்களை The Newsminute -ல் வந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டோம். எங்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகனிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. உங்களின் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பலதரப்பட்ட கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிடுகிறீர்கள் என்பதுமகிழ்ச்சிக்குரிய ஒன்று. http://www.thenewsminute.com/…/jeyamohan-calls-tm-krishna-a…

ஊடகங்கள் தொடர்ந்து ஊரூர் ஆலகாட் குப்பம் விழாவை slum வாழும் மக்களுக்கு கர்னாடிக் இசை கொண்டு சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே வர்ணித்து வருகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஒதுக்கப்படும், இழிவான சொற்களால் மட்டுமே அறியப்படும் எங்களுடைய கிராமத்தைப் பற்றிய மகசேசே விருதுக்கான சான்று ஆவணத்தில் உற்சாகமூட்டும் வகையில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்கள். ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை நடத்திய எங்களுக்கு இது நெகிழ்வையும், நிறைவையும் ஒருங்கே தருகிறது. இந்த விருதை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பெறுவதும் அவருடைய முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. அதே சமயம், உங்களின் செய்தியாளர்கள் எங்கள் கிராமத்தை பற்றிச் சித்தரித்திருப்பவை அதிர்ச்சி தருகின்றன. அவை போகிற போக்கில், தவறான, பாரபட்சமான பார்வையோடு எங்கள் கிராமத்தைப் பற்றிய பார்வையை முன்வைக்கின்றன. அதிலும் குறிப்பாக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா “கர்நாடக சங்கீதத்தைக் குறிப்பிட்ட சில slum ப்பகுதி குழந்தைகளுக்குக் கொண்டு சேர்த்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது” என்கிற வரி மிகவும் வருத்தமளிக்கிறது.

அந்த வரி எங்களை ஏளனம் செய்வதோடு, சுயசிந்தனை இல்லாதவர்களாக, எங்களுக்குத் தேவையானதை தேர்வு செய்யும் திறனோ, எங்கள் ஒட்டுமொத்த எதிர்காலத்தைப் பற்றிய பார்வையோ இல்லாத தேவையற்ற பொருட்களைப் போல அந்த வரி எங்களைக் கையாள்கிறது. எங்களைப்பற்றி நிலவும் தவறான பொதுப்புத்தியை எதிர்கொள்வதில் உள்ள சவால்களை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக உங்களைப்போன்ற இதழியலில் எழுதுகிற படித்த மேன்மக்களுக்குக் கற்பிக்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். சீர்மிகுந்த சூழலில் வளர்ந்து வெளிப்படும் இவர்கள் தங்களின் சொகுசான வளர்ப்பின் பலிகிடாவாக மாறிவிடுகிறார்கள்.
1.ஊரூர் ஆல்காட் குப்பம் ஒரு மீனவக் கிராமம், அது slum அல்ல. சென்னை மாநகரைவிட எங்களின் ஊர் தொன்மையானது. Slum என்கிற சொற்பிரயோகத்தை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். அது ஆக்கிரமிப்புகள், குற்றங்கள், வன்முறை, பாதுகாப்பற்ற சூழல், ஆபத்தான மக்கள் ஆகிய முன்முடிவுகளை உண்டாக்கும் சொல்லாகும்.

எங்களைக் காயப்படுத்தவேண்டும் என்பது உங்களின் நோக்கம் இல்லை என்று உறுதியாக நம்புகிறோம். அதேசமயம் எங்களின் நிலைப்பற்றிய நேரடி புரிதல் இல்லாத உங்களின் சொகுசான நிலை இப்படி எழுத வைத்திருக்கலாம். இது ஒன்று தீரா வியாதி இல்லை. நீங்கள் எங்களை மேலும் புரிந்துகொள்ள எங்களின் கிராமத்துக்கு வரவேண்டும் என்று அன்போடு வரவேற்கிறோம்.

2. இந்தத் விழாவை, “சில slum-ப்பகுதி குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு செல்வது” என்று குறிப்பிட்டதன் மூலம் கர்நாடக சங்கீதம், எங்களின் கிராமம், சென்னையின்
பல்வேறு பகுதிகளில் இருந்து இதில் பங்கேற்ற ஆர்வலர்கள், எங்கள் குழந்தைச் செல்வங்களின் திறன், கனவுகள் ஆகிய எல்லாவற்றையும் ஏளனப்படுத்தி உள்ளீர்கள்.

உங்களுக்குக் கர்நாடக சங்கீதம் புனிதமான, உயர்ந்த கலையில் ஒன்றாக இருக்கலாம். அது எங்களுக்கு இன்னுமொரு கலைவடிவம் மட்டுமே. எங்களுடைய வலைகளைக் இழுக்கும்பொழுது நாங்கள் பாடும் பாடல்களில் உள்ள அதே அழகு இந்தப் பாடல்களிலும் உள்ளது. எங்களில் சிலர் கர்நாடக சங்கீதத்தை விரும்புகிறோம், சிலர் அந்தப் பெயரைக் கேட்டாலே பல மைல் தூரம் ஓடிப் போவார்கள். இந்த விழாவை எங்கள் ஊரில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டதற்கு எங்களுக்கே உரிய காரணங்கள் இருந்தன, எங்களுடன் நிபந்தனைகளும் இருந்தன. அந்த விழாவில் ஒரு அம்சமாகக் மட்டும் தான் கர்நாடக சங்கீதம் இருந்தது. அவ்வளவு தான்.

3. இந்த விழா ஒரு தனிநபரால் நடத்தப்படவில்லை. டி.எம்.கிருஷ்ணா அந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் முன்னணி ஆர்வலர். இசைத்திறம் மிகுந்த அவரை எங்களின் ஆர்வலர்களில் ஒருவராகக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழா கர்நாடக திருவிழாவும் இல்லை. இதில் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், கூத்து, வில்லுப்பாட்டு, ராக் இசை, பறை ஆட்டம், பல்வேறு மொழிகளில் இருந்து பாடல்கள் ஆகியவையும் நிகழ்த்தப்பட்டன.

எங்களின் கிராமங்கள் நோக்கி வருவதற்கு எங்கள் இடத்தைப் பற்றி எழுப்பப்பட்டிற்கும் தவறான கற்பிதங்களால் பலர் யோசிப்பார்கள் என்பதால் எங்கள் குப்பத்தினர் கர்நாடக சங்கீதம், பரத நாட்டிய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தி ரசிகர்களைத் திரட்ட முடிவு செய்தோம். எனவே இது “சில slum ப்பகுதி குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு செல்வது” இல்லை. அதற்கு மாறாக, எங்களைச் slum-ப்பகுதி பிள்ளைகளாகப் பார்ப்பவர்களை வரவேற்று எங்களின் விருந்தோம்பலால் நிறைக்கும் எளிய முயற்சியே இது.

உங்களுக்குத் தூண்டில் வீசும் கொக்கியாக நாங்கள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவற்றைக் காணவில்லை. எங்களின் பிள்ளைகள் கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் ஆகியவற்றைச் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், பறை ஆட்டம் ஆகியவற்றைக் கற்பது போலக் கற்பிக்கவே இதை முன்னெடுத்தோம். எங்கள் பிள்ளைகளைத் தங்களின் மீனவக்குடிகள் எனும் மகத்தான அடையாளத்தை இழந்துவிடாமல் புதிய அனுபவங்களுக்குத் தயார்படுத்துகிறோம். எங்களின் மீனவக்குடி கடல் வேட்டைக்காரர்கள், ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுக்கும் பண்பாளர்கள். இப்படிப்பட்ட எங்களின் பாரம்பரியத்தை, பெருமைமிக்க அடையாளத்தை எங்கள் பிள்ளைகளுக்கு நினைவுபடுத்துகிறோம். எங்களைத் தட்டிக் கழிக்கும் உங்களின் எழுத்து எங்களின் முயற்சிகளை, எங்கள் பிள்ளைகள் பெருமைப்பட வேண்டிய அடையாளத்தைக் காவுவாங்க முயற்சிக்கிறது. எங்களிடம் இந்தக் கருத்துக்களைப் பதிப்பிப்பதற்கு முன்னால் பேசியிருக்கலாம்.

4. உங்களின் கட்டுரை ஊரூர் ஆல்காட் குப்பம் தன்னுடைய பெயரை தந்ததைத் தவிர இந்த நிகழ்வில் எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை என்கிற கருத்துத் தொனிக்கிறது. எங்களின் பிள்ளைகள், நாங்கள் எல்லோரும் ஒரு உச்சக் கலையின் ஆனந்தத்தை அனுபவிப்பவர்கள் போன்ற தொனி அதில் வெளிப்படுகிறது. எங்களை ஒரு சமூகமாகக் கருத மறந்துவிட்ட நகர்ப்புற மக்களின் போக்கை உங்களின் யூகிப்பு நினைவுபடுத்துகிறது.

ஒரு விழாவை ஒரு கிராமத்தில் ஆயிரம் பேரை கூட்டி நடத்த எவ்வளவு உழைப்புத் தேவைப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா? எந்தச் சம்பவமும் நிகழாமல், தீவிபத்து ஏற்படாமல், எந்தத் தள்ளுமுள்ளும் இல்லாமல் இதை நடத்த எவ்வளவு மெனக்கெட வேண்டும்? எங்கள் ஊரின் J5 காவல் நிலையம் இந்த விழாவை எந்த மோதலும் இல்லாமல் சிறப்பாக நடத்த முடியும் என்று உறுதியாக நம்பியது உங்களுக்குத் தெரியாது. எங்களுடன் போலீஸ் கான்ஸ்டபிள் இணைந்து விழாவை ரசித்ததோ, குடிநீர் வாரியத்துடன் இணைந்து அவ்வப்பொழுது நிரம்பி வழியும் சாக்கடைகள் வருகிற ரசிகர்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என்று சாக்கடைகள் அடைப்புகளை நீக்கியதும் தெரியுமா?

எங்களின் கிராமத்துக்கு யாரோ ஒருவர் எங்களின் விருப்பம், பங்களிப்பு இல்லாமல் வந்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது அறியாமையின் உச்சம். இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எங்கள் ஊரின் எல்லாரும் பங்குகொண்டோம். எங்கள் கிராமத்தை சுத்தப்படுத்தினோம். இது ஒன்றும் லேசுப்பட்ட காரியமில்லை. இந்தப் பகுதியின் தனியார் ஒப்பந்ததாரர் பணக்காரர்கள் வாழும் தெருக்கள், பொது இடங்கள் ஆகியவற்றையே சுத்தம் செய்வார்கள். ஒரு வருடம் தேங்கிக்கிடந்த குப்பையை நாங்கள் சுத்தம் செய்தோம். நகரத்தில் இருந்து வந்து உதவி செய்த நூற்றுக்கணக்கான ஆர்வலர்களை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.

4. எங்களிடம் கலை காணக்கிடைக்காத ஒன்று இல்லை. கடலில் படகு பாய்கிற பொழுது கம்பீரமாக எங்களின் மக்கள் அமர்ந்திருப்பதை நீங்கள் கண்டுள்ளீர்களா? அந்தப் படகுகளை அலங்கரிக்கும் வரிகள், வண்ணங்கள், ஓவியங்கள் உங்கள் கண்ணில் பட்டுள்ளதா? எங்கள் பெண்கள் வரையும் கோலங்களின் அழகு தெரியுமா? கடல் நோக்கி கட்டுமரம் தன்னுடைய பாய்கள் படபடக்க கிளம்புகிற காட்சி இந்த விழா மேடையின் பின்புறம் செம்மாந்து நின்றது. எங்களின் கலையின் பெருமிதத்தைத் தாங்கி அந்த விழா நடந்தது. அந்தக் கட்டுமரத்தின் அழகில் வந்தவர்கள் மயங்கிப்போனார்கள். அந்தக் கட்டுமரத்தை யார் உருவாக்கினார்கள்? slum -ப்பகுதி சிறுவர்களா? இல்லை. துடிப்பு வலித்து, வலித்துக் காப்பு காய்த்துப் போன மூத்த மீனவர்கள் ஐவரின் கைவண்ணம் அது.

இந்தப் பெரிய மேடைக்குப் பின்னால் மணல் மீது ஒரு சிறிய மேடை இருந்தது. அது ஒரு மீனவரின் வீட்டு முன்னால் எழுப்பப்பட்ட கான்கிரீட் மேடை. அந்த வீட்டின் பால்கனி, சுவர்கள் ஆகியவையும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இன்னுமும் எங்களுக்கு இந்த விழாவில் எந்தப் பங்களிப்பு இல்லை, இதில் நாங்கள் செய்தது ஒன்றுமில்லை என்று எண்ணுகிறீர்களா? எங்கள் ஊரின் கோயில்களின் சுவர்களில் சென்னையின் பல்வேறு பகுதி இளைஞர்கள் சுண்ணம் பூசினார்கள். உள்ளூர் மெக்கானிக்கின் வாடிக்கையாளர்களின் கார்களை விழா நடத்த அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

அதாவது விழா நடந்த நான்கு நாட்களும் அவர் தன்னுடைய வருமானத்தை இழக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். எனினும், விருப்பத்தோடும், மகிழ்வோடும் அவர் அதனைச் செய்தார். நீங்கள் அந்தக் கார் மெக்கானிக்கை அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இவற்றைச் செய்ய மக்களின் விருப்பமும், ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகிறது. இதற்குச் சமூகம் என்று தேவைப்படுகிறது. எங்களுக்கு நீங்கள் அதைக் கற்பிக்க வேண்டியதில்லை. எது உண்மையில் சமூகம் என்று உங்களுக்கு நாங்கள் பாடம் நடத்துகிறோம். கர்நாடக சங்கீதம் இதில் ஒரு அங்கமே அன்றி அதுவே இந்த நிகழ்வின் பேசுபொருள் அல்ல.

நாங்கள் குறிப்பிடும் சமூகம் எங்களின் கிராமத்தின் சமூகம் மட்டுமில்லை. ஊரூர் ஆல்காட் குப்பம் விழா எங்கள் கிராமத் திருவிழா போன்ற ஒன்றல்ல. இப்படிப்பட்ட பண்புகொண்ட ஒரு விழாவை, பல்வேறு கலைவடிவங்களின் சங்கமத்தை, பலதரப்பட்ட சமூகப் பின்புலத்தைச் சேர்ந்த மக்களின் முன்னால் இவற்றை நிகழ்த்த எங்கள் ஊரைச் சேராத பல மக்களின் பங்களிப்புத் தேவைப்பட்டது. திருவள்ளுவர் நகரின் இளைஞர்கள் இந்த விழா சிறப்பாக நடக்க அயராது பாடுபட்டார்கள். சென்னை குறிப்பாகப் பெசன்ட் நகரை சேர்ந்த பல்வேறு ஆர்வலர்கள் குழந்தைகள் முதல் முதியோர் வரை இங்கே அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்கள் கூட ஆர்வத்தோடு இந்த விழா நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற உழைத்தார்கள். இவர்களோடு இணைந்து நாங்கள் பணியாற்றினோம். கற்றலும், கற்பித்தலும் கைகோர்த்துக் கொண்ட அற்புதம் இங்கே நிகழ்ந்தது.

நீங்கள் இழிவாக “Slum ப்பிள்ளைகள்” என்று விளிக்கும் குழந்தைகள் பயிற்சி செய்து, பல்வேறு பரதநாட்டிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு பெசன்ட் நகரை சேர்ந்த பதின்பருவ இளைஞர் ஒருவர் பயிற்சியளித்தார். இங்கே பரதநாட்டியத்தை விட இப்படிப்பட்ட பிள்ளைகளிடையே மலர்ந்திருக்கும் பந்தத்தைக் கொண்டாட வேண்டும். இந்த விழா அப்படிப்பட்ட வாய்ப்பை அளித்ததற்கு நெகிழ வேண்டும். சென்னை பெருநகரத்தின் விளிம்புநிலை குழந்தைகளான எங்களின் பிள்ளைகள் ஒன்றாக இணைந்து பாடி முடித்த பொழுது ரசிகர்கள் உணர்ச்சி ததும்பக் கண்ணீர் வடித்தார்கள். இத்தனையையும் நீங்கள் “சில Slumப்பகுதி குழந்தைகளுக்குக் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு செல்வது” என்கிற வரியில் கடந்து விட்டீர்கள்.

மக்கள் சுயலநலமும், வெறுப்பும் மிக்கவர்களாக உள்ளார்கள் என்பது இயல்பு. அது எங்களிடமும் இயல்பாகக் காணப்படுகிறது. விழாக்கள் சுயநலத்தை, வெறுப்புகளை ஓரமாக வைத்துவிட்டு நம்பிக்கைமிகுந்த எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவும், அதற்கான சாத்தியங்களைக் கொண்டாடவும் உதவுகிறது. அந்தக் கணத்தில் நாங்கள் பெருமிதத்தோடு நிற்கிறோம். முடிந்தால் ஊர்கூடி தேர் இழுப்போம் வாருங்கள்!

குறிப்பு: மேற்கண்ட பதிவுக்குப் பிறகு நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தியை திருத்தியதோடு, அவ்வாறு எழுதியமைக்காக வருத்தங்களையும் மன்னிப்பையும் கேட்டுள்ளது.

முகப்பில் ஆல்காட் விழாவில் குழந்தைகளுடன் பாடகர் டி. எம். கிருஷ்ணா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.