“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?” என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், அதிமுக எம்பி சசிகலா புஷ்பா நா தழுதழுக்க குற்றம்சாட்டினார்.
சனிக்கிழமையன்று டெல்லி விமானநிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததால் திருச்சி சிவாவை கன்னத்தில் நான்கு அறைவிட்டதாக சசிகலா ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு அறையல்ல, ஒரு அறைதான் விட்டார் என திருச்சி சிவா விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய சசிகளா புஷ்பா, “இந்த அரசு பாதுகாப்புத் தருமா? என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. நான் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். ஒரு கட்சியின் தலைவர் எம்பியை அறைய முடியும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். நேற்று என்னை அழைத்து என்னை அறைந்தார் என் கட்சியின் தலைவர். என் வீட்டில்கூட என்னால் பாதுக்காப்பாக வாழ முடியாது.
இந்தப் பதவியைக் கொடுத்தது ஜெயலலிதா அவர்கள் தான். அதற்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது என்னை பதவி விலக கட்டாயப்படுத்துகிறார். நான் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழகத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை” என அழுதார்.
முன்னதாக திருச்சி சிவாவை அறைந்ததற்காக அவரிடமும் திமுக உறுப்பினர்களிடமும் மன்னிப்புக் கேட்டார் சசிகலா புஷ்பா. சசிகலா பேச ஆரம்பிக்கும்போதே அதிமுக எம்பிக்கள் கூச்சலிட்டு பேசவிடாமல் தடுத்தனர். எம்பி நவநீதகிருஷ்ணன், அவை தலைவர் குரியன் இருக்கை அருகே சென்று சசிகலாவை பேச அனுமதிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
அவை தலைவர் குரியன், இந்த அவைக்கு வரமுடியாதவர்கள் பற்றி இங்கே பேசவேண்டாம். உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்தார்.
அதே நேரத்தில் கட்சிக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, சசிகலா புஷ்பாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.