பத்தி: மாற்றமடையும் மகசேசே விருது – கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்
கௌதம சித்தார்த்தன்

தெற்காசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர், ‘ரமோன் மகசேசே’ நினைவாக, ஆண்டுதோறும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஆசிய அளவில், ‘நோபல் விருது’ என்று கொண்டாடப்படுகிறது. இந்த 2016ம் ஆண்டுக்கான விருதுகள் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெஜ்வாடா வில்சன் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கர்னாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா, மேல்தட்டு சார்ந்த மக்கள் மட்டுமே ரசிக்கக் கூடிய இசை என்ற படிமத்தைத் தகர்த்தெறிந்து, எளிய மக்களின் மனதிலும் இசை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கி, வெற்றி கண்டவர். ‘பறை’ குறித்து இவர் முன்வைத்த கருத்தியல் பார்வைகளும் இசைப் படிமங்களும் மக்களின் இசை வாழ்வில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் குறித்து இங்கு பெரியளவில் அறிமுகம் இருப்பதால், பெஜ்வாடா வில்சன் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மனிதக் கழிவை மனிதனே அள்ளும் முறைக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருபவர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தில் பிறந்த இவரது வாழ்வு சிறுவயதிலிருந்தே மிகப்பெரும் சாதிய ஒடுக்குமுறைகளுடனும், அவமானங்களுடனுமே இருந்து வந்தது. இவரது தந்தை மனிதக் கழிவை அகற்றும் துப்புரவுப் பணியாளராக பணி செய்யும்போது அதன் கொடூரத்தை நேரடிநிகழ்வாக அனுபவித்தவர். மனிதக் கழிவுகளை மனிதர்கள்தான் அகற்ற வேண்டுமா? வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் அதற்கு ஒரு மாற்று இல்லையா? என்று தனது தந்தை பொருமியது, தன்பிஞ்சு மனதிலேயே ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. தந்தையின் சொல்லுக்கான விடையே தமது வாழ்க்கை என்று அந்தப் பணியை எதிர்த்துப் போராடுவதே தன் வாழ்வின் அர்த்தம் என்று முடிவெடுத்தார்.

இருந்தும், வாழ்வின் தீராத நெருக்கடிகளில் வேலைக்குப் போக முடிவெடுத்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். அப்போது, விருப்பப்பணி என்ற கட்டத்தை பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தார். அங்கிருந்த அரசு ஊழியர், “வில்சனின் விருப்பப் பணி மனிதக் கழிவை அள்ளுவது” என பூர்த்தி செய்தார். இந்தச் சம்பவம் நீறு பூத்த நெருப்பாக இருந்த கங்குகளை பெருந்தீயாய் பற்றிவிட்டது.

இனிமேல், தான் அரசு வேலைக்குப் போவதில்லை என்று முடிவெடுத்து, தலித் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அந்த அடையாளத்தைப் போக்குவதே தன் பணி என்று செயல்பட ஆரம்பித்தார்.

முதலில் தான் சார்ந்த பல பகுதிகளுக்கும் சென்று, மக்களிடம் பேசினார். மெல்ல மெல்ல, அவரது பயணம், தலித் அமைப்புகள், தன்னார்வலர் அமைப்புகள், விளிம்புநிலை மக்கள் என்று விரிவடைந்து, 1993ம் ஆண்டில் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரக் குழு’ (எஸ்.கே.ஏ.,) என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டார்.

அவரது செயல்பாடுகள் ஊடகங்களிலும், மக்கள் திரளிலும் பெரிதாக கவனம் பெறலாயின.

மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் முறைக்கு எதிராக, மத்திய அரசு சட்டம் கொண்டு வந்ததற்கு, அவர் தொடர்ச்சியாக அரசுக்கு எழுதிய கடிதங்களை முக்கிய காரணமாகக் கொள்ளலாம்.

இப்படியான ஒரு எளிய மனிதனுக்கு ஆசிய கண்டத்தின் தலையாய விருதாக அடையாளப்படுத்தப் படுகின்ற ‘மகசேசே விருது’ கிடைத்ததற்கான பின்புலத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். விருதுகள் என்பவை ஆளும் வர்க்கத்தினரின் நலனுக்காகவும், அவர்களது விருப்ப அடிப்படையிலும் வழங்கப்படுவதை நாம் அறிவோம்.

பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாக1957இல் நிறுவப்பட்டஇந்த விருது, ஆசியளவில் சிறந்த துறை போகிய ஆளுமைகளுக்காக, ஆறு பிரிவுகளில் வழங்கப்படுவது.

தங்கள் சுற்றுப்புறத்தில் சமூக மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பாக பணியாற்றிய, அதே சமயத்தில் வெளியே அதிகம் அறியப்படாத, நாற்பது வயதிற்கு குறைவான தனிநபர்களே இதன் விருதாளர்கள்.

இதுவரை வழங்கப்பட்டுள்ள இந்த விருதுகள், மிக மேலோட்டமான தேர்வின் அடிப்படையிலும், சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ள நபர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் கொடுக்கப்பட்டு வந்தன.

இந்த ஆண்டு ஆகப் பெரிய அதிசயமாக, எந்தவிதமான அதிகாரப் பின்னணியும் இல்லாத, ஒரு எளிய விளிம்புநிலைப் போராளியை, ஆறு விருதுகளிலும், முதன்மை விருதாளராக, விருதுக் குழு தேர்வு செய்திருக்கிறது.

தற்போது, பிலிப்பைன்ஸ் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும், திரு Rodrigo Duterte, இடதுசாரி மற்றும் மாற்று அரசியல் பார்வை கொண்டவர். பிலிப்பைன்சின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த புரட்சிகர மாணவர் குழுவில் இருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .

இவர் குடியரசுத் தலைவராக பதவிப் பொறுப்பேற்றதும், மாற்று அரசியல் பார்வையை முன்வைத்து இயங்கிய, நாடு கடத்தப்பட்ட புரட்சிகர மாணவர்தலைவரான José María Sison ஐ மீண்டும் தாயகத்திற்கு வருமாறும், தனது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் நல்கி, நாட்டின் புதிய அத்தியாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் திறந்த மனதுடன் அழைப்பு விடுத்த செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இவரது எளிய மனிதர்களைப் போற்றும் மாற்றுப் பார்வையில், இந்த விருதுத் தேர்வு நிகழ்ந்திருக்கலாம் என்பதை நுட்பமாக உணரலாம்.

சமீபத்தில் கபாலி படத்தின் கதையாக்கமும் காட்சிப் புலங்களும் தலித்தியம் சார்ந்த விளிம்புநிலையாக்கத்தை முன்வைத்து பெரும் கவனத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தருணத்தில்,

இந்த நாட்டின் தூய்மைக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் மல வரலாற்றை உலகுக்கு உணர்த்திய இந்த எளிய மனிதனுக்கு, ‘மகசேசே’ விருது கிடைத்ததை, நாம் கொண்டாட வேண்டும்!

கௌதம சித்தார்த்தன், எழுத்தாளர்; ஊடகவியலாளர்அண்மையில் வெளியான இவருடைய நூல்கள்: முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல், சங்க கால சாதி அரசியல். இரண்டும் எதிர் வெளியீடுகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.