
தேசிய புதிய கல்விக் கொள்கை வரைவு – 2016 ஐ மத்திய அரசு வெளியிட்டு கல்வியாளர்களிடமும், கல்வி நிறுவனங்களிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களை கேட்டு வெகுநாளாகி விட்டன. கிராமப்புற குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கிற மிக ஆபத்தான வழிவகைகளும், நவீன குலக்கல்வி திட்டத்தையும் கொண்டிருக்கிற, கலாச்சார, பன்முகத் தன்மை, மொழி, இனம் மற்றும் வரலாற்று உரிமையை மறுக்கிற இந்த அறிக்கையின் மீது இப்போது விவாதம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை, தாய்த் தமிழ்ப்பள்ளிகள், மாதிரி குழந்தைகள் பள்ளிகள், சமூக அறிவியல் இயக்கம், தன்னார்வ அமைப்புகள் உட்பட சில அமைப்புகள் விரிவாக இது குறித்து விவாதித்து தங்கள் கருத்தை மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு முன் வைத்திருக்கின்றன.
கிறிஸ்தவ திருச்சபைகளின் சார்பில் பெருமளவு கல்வி நிறுவனங்களை வைத்திருக்கிற தமிழ்நாடு கத்தோலிக்க கல்விக் கழகம் மட்டுமே தனது ஆய்வுப்பூர்வமான அறிக்கையையும், கண்டனத்தையும் மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை வைத்திருக்கிற சி.எஸ்.ஐ, லுத்தரன் போன்ற ப்ராட்டஸ்டன்ட் திருச்சபைக்குச் சொந்தமான நிறுவனங்களிடமிருந்து ஒரு அறிக்கையோ, ஆய்வோ, மறுப்போ, கண்டனமோ இது வரை வெளியானதில்லை. காலக்கெடு விதித்து, மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது அறிக்கையை தமிழகத்தில் இருந்து அனுப்பியதில்லை. குறைந்த பட்சம் விவாதங்களை நடத்தியதில்லை. இது எவ்வளவு பெரிய பொறுப்பற்றத் தன்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த திருச்சபைகளின் உறுப்பு நிறுவனமான என்சிசிஐ, எஸ்சிஎம் மட்டுமே எதிர்வினையாற்றி இருக்கிறது.
இந்த மெத்தனமும், மௌனமும் எதைக் காட்டுகிறது என்றால் ஒன்று எங்கள் கல்வி நிறுவனங்களை அரசே பொறுப்பெடுத்துக் கொள்ளட்டும் அல்லது தமிழக அரசு மூட முடிவெடுத்திருக்கிற 1200 பள்ளிக் கூடங்களின் பட்டியலில் அடுத்த பட்டியலாக ப்ராட்டஸ்டன்ட் நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகளையும் சேர்த்துக் கொள்ளட்டும் என்பதை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. தங்களது நிறுவனங்களுக்காகவும், சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும் யாரோ ஒரு சிவில் சமூகமும், கத்தோலிக்க சபைகளும் போராடுவார்கள் வழக்கம் போல வெறும் ஊதியக்குழு பரிந்துரைக்காகவும், வெளிநாட்டு – உள்நாட்டு காணிக்கை வசூலுக்காகவும், அரசியல் அதிகாரத்துக்காகவும் சுகமாக நிறுவனம் நடத்தலாம் என நினைத்தால் அது இப்போதிருப்பதை விட மிக துயரமான முட்டுச்சந்துக்கு இட்டுச் செல்லும். எனவே காலதாமதான போதிலும் குறைந்த பட்சம் புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தை இந்த நிறுவனங்களின் ஆசிரியர்களாவது முன்னெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர் அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com