வார இதழான குமுதம் கடந்த இரண்டு வாரங்களாக குமுதம் லைஃப் என்ற இணைப்பு புத்தகத்தை குமுதத்துடன் சேர்த்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஊடகவியலாளர் கே. என். சிவராமன் தனது முகநூலில் ‘#குமுதம்லைஃப் #kumudamlife (விகடன் தொலைத்த விகடன்)’ என்ற பெயரில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில்,
1980கள் நினைவுக்கு வருகிறது. தமிழ் வார இதழ்களின் வரலாற்றிலேயே அதிகபட்ச சர்க்குலேஷனை அப்போதுதான் ‘குமுதம்‘ தொட்டது. எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு., புனிதன் என நால்வர் அணி ரவுண்டு கட்டி அடித்து உச்சம் தொட்ட காலகட்டம் அது. ‘ஜெமினி பிக்சர்ஸ்‘ பிரச்னைகள் முடிந்து இனி பத்திரிகைதான் – ‘விகடன்‘ மட்டும்தான் – என எஸ்.பாலசுப்பிரமணியம் முடிவு செய்ததும் ஏறக்குறைய அப்போதுதான். மதனும் ராவும் அவரது இரு கரங்களாக மாறி ‘ஆனந்த விகடனை‘ தூக்கி நிறுத்த போராட ஆரம்பித்தார்கள். என்றாலும் ‘விகடனு‘க்கு என்று ஒரு முகம் இருந்தது. அதனால் ‘குமுதம்‘ போல் மாற முடியாது. எனவே ‘குமுதம்‘ இதழுக்கு மாற்றாக புதியதாக ஒரு பத்திரிகையை தொடங்குவது என்று முடிவு செய்தார்கள். அதற்கு ‘ஜூனியர் விகடன்‘ என்றும் பெயர் வைத்தார்கள். ஆரம்பகால ‘ஜூவி‘ இதழ்கள் அனைத்தும் A4 சைஸ் ‘குமுதம்‘ போலவே இருக்கும். அந்த பத்திரிகைக்கு என்று ஒரு முகம் கிடைக்கவில்லை. வாசகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் ‘மாணவர் நிருபர் திட்ட‘த்தை மீண்டும் ‘விகடன்‘ அமல்படுத்தியது. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவ நிருபர் – பெயர் மறந்து விட்டது – ஒரு ஸ்டோரியை அனுப்பினார். பெண் சிசுக் கொலையா அல்லது பஸ்ஸின் பேஸ்மெண்ட் ஓட்டையாக இருந்ததால் அதில் விழுந்து மரணமடைந்த ஒரு குழந்தை குறித்த உலுக்கும் கவரேஜா என்பதும் நினைவில் இல்லை. இந்த ஸ்டோரியை அட்டைப் பட கட்டுரையாக வெளியிட்டார்கள். வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த அட்டைப் படமே ‘ஜூவி‘க்கு என்று ஒரு முகத்தை கொடுத்தது. வலு சேர்ப்பதுபோல் ‘ஆந்தையாரும்‘, ‘கழுகாரும்‘, பிறந்தார்கள். கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, நிறைய மாவட்ட செய்திகள் – சிறு தெய்வ வழிபாடுகள் – அந்த சாமியார் இந்த சாமியார்… – என ‘ஜூவி’ களை கட்ட தொடங்கியது. 1991 – 96ல் முழு நீள அரசியல் பத்திரிகையாக அது மாறியது. இப்படிதான் நிகழும். தங்களுக்கான பத்திரிகையை தாங்களேதான் வாசகர்கள் வடிவமைப்பார்கள். அது பெரும்பாலான வாசகர்களின் விருப்பமாக இருக்கும்போதே அவை வெற்றி அடையும்.
இப்போது – 2016ல் – வரலாறு திரும்புகிறது. ஆகஸ்ட் 15 அல்லது விநாயகர் சதுர்த்தி அல்லது சரஸ்வதி பூஜை அல்லது தீபாவளி அன்று ‘குமுதம் லைஃப்‘ என்ற புதிய பத்திரிகை பிறக்கப் போகிறது. அதற்கான டீசர்தான் ஒரு வாரம் விட்டு ஒருவாரம் இப்போது ‘குமுதம்‘ இதழுடன் வெளிவரும் ‘குமுதம் லைஃப்‘ இணைப்பு. ‘ஆனந்த விகடன்‘ தொலைத்த ‘ஆனந்த விகடனை‘ கச்சிதமாக ‘குமுதம் லைஃப்’பில் கொண்டு வருகிறார்கள்.
இன்று ‘விகடன்‘ எதை எதை தொலைத்திருக்கிறது?
முதலாவது நகைச்சுவை. ஒரு காலத்தில் ‘விகடன் ஜோக்ஸ்‘ என்பது ஃபேமஸ் ஆக இருந்தது. இன்று அது காணாமலேயே போய்விட்டது.
அடுத்து, கதைகள். நன்றாக நினைவில் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்வில் பல சூறாவளி பிரச்னைகளை அனுபவித்த ஒரு பெண், அதிலிருந்து மீண்டு எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார். கல்லூரி / ஹாஸ்டல் கட்டணங்களுக்கு வழியில்லை. அவருக்கு கதை எழுத வரும். எனவே ஒரு சிறுகதையை எழுதி, வாசனை சந்தித்து கொடுத்தார். தன் நிலையையும் விளக்கினார். கதையை படித்துப் பார்த்த வாசன், அவருக்குள் அபாரமான எழுத்தாளர் இருப்பதை புரிந்து கொண்டார். விளைவு? தொடர்ந்து ‘ஆனந்த விகடனில்‘ அந்தப் பெண்ணின் சிறுகதைகளும், நாவல்களும் வெளியாக ஆரம்பித்தன. இதன் மூலம் வந்த வருமானத்தை வைத்தே அந்தப் பெண் தன் மருத்துவக் கல்லூரியை முடித்தார். அந்த பெண்தான், எழுத்தாளர் லட்சுமி.இது ஒரு சோறு பதம்தான். எண்ணற்ற உதாரணங்களை பட்டியலிட முடியும். ‘சாவி‘யில் ‘மெர்குரிப் பூக்கள்‘; ‘கல்கி’யில் ‘இரும்புக் குதிரைகள்‘ என்று எழுதிய பாலகுமாரனை பரவலாக கொண்டு போனது ‘ஆவி‘தான். ‘கரையோர முதலைகள்‘, ‘பயணிகள் கவனிக்கவும்‘… என அடுக்கிக் கொண்டே செல்லலாம். பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ‘தொட்டால் தொடரும்‘, தேவிபாலாவுக்கு ‘மடிசார் மாமி‘ என நீளும் பட்டியல் இப்போது வெறும் நினைவு மட்டுமே. 98ல் மலரோன் எழுதிய சிறுநகர காதல் தொடருக்கு பிறகு இந்த ஜானரை முற்றிலுமாக ‘விகடன்‘ விட்டுவிட்டது.
இப்போது ‘ஆவி‘யில் சிறுகதை அல்லது தொடர்கதை எழுத வேண்டுமென்றால் ஒன்று அந்த எழுத்தாளர் புலம் பெயர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது சிறுபத்திரிகை சார்ந்த ‘இருண்மை‘ லொட்டு லொசுக்கு வார்த்தைகளை / சொற்களை தூவி வாக்கியங்களை அமைப்பவராக இருக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் ‘விகடனால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்கள்‘ என்பது போய், அறிவுஜீவிகளின் பின்னால் அலையும் பத்திரிகையாக அது மாறிவிட்டது.
மூன்றாவது சினிமா. ஒரு காலத்தில் திறமையான புதியவர்களை அடையாளம் காணும் பத்திரிகையாக ‘ஆவி‘ இருந்தது. சிறு படங்கள் வெளியானதும் அதில் பணிபுரிந்தவர்களை ஓர் இடத்தில் அசெம்பிள் செய்து பேட்டி எடுப்பார்கள். இப்போது முன்னணி நடிகர்களின் அதிகாரப்பூர்வமான அச்சு ஊடக PRO ஆக ‘விகடன்‘ செயல்படுகிறது.
நான்காவது, கன்டென்ட். இன்றைய தேதியில் வரும் ‘விகடனின்‘ செய்திகளை ஒரு சட்டகத்துக்குள் அடக்கி விடலாம்.
1. டெஸ்க் ஓர்க். ஆப்ஸ் அல்லது வீடியோ கேம் ஃபேமஸ் ஆக இருக்கிறதா… நெட்டில் தகவல்களை திரட்டி இரண்டு பக்கம்.
2. சோஷியல் இஷ்யூ. அந்த வாரத்தில் எது பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதைக் குறித்த ஒரு கட்டுரை. கூடவே இரண்டு அல்லது மூன்று பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘கோட்ஸ்‘ வாங்குவது. அதை கட்டுரையின் இடையே இணைப்பது.
3. நிகழ்வுகள் சார்ந்த analytical கட்டுரை. திமுக ஜெயிக்குமா… கல்விக் கொள்ளை… etc etc.
மற்றபடி சாதாரண மனிதர்களின் அசாதாரணமான செயல்கள் குறித்த ground work பேட்டிகளை ‘விகடன்‘ வெளியிட்டு ஆண்டுகளாகிறது. தச்சு வேலையில் சாதனை புரிபவராக இருந்தாலும் அவர் ஐஐடி ஸ்டூடண்ட் ஆக இருந்தால் மட்டுமே ‘விகடனில்‘ இடம் பெறுவார் என்ற நிலை.
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நீச்சல் குளம், சூப்பர் மார்கெட், ஜிம்… என சகலமும் உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபடி உலகில் இருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு சில ஆயிரம் பேர் தனி தீவாக வசிக்கிறார்களே… அதுபோன்று ஒரு சாராருக்கான / அறிவுஜீவிகளின் பொழுது போக்கு வார இதழாக ‘விகடன்‘ மாறிவிட்டது. 70 ஆண்டுக்கால தனது முகத்தை வேரோடு தொலைத்துவிட்டது.
இன்று ‘விகடனில்‘ பணிபுரியும் ஆபிஸ் பாய் கூட ‘காலச்சுவடு‘, ‘உயிர்மை‘ பதிப்பக ‘இலக்கிய‘ நூல்களைதான் படிப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு அங்கு வேலை பார்க்கும் அனைவருமே கஞ்சி போட்டு துணி துவைத்தது போல் விரைப்பாக இலக்கியம், ஈரானிய, கொரிய, தென் அமெரிக்க உலக சினிமா என நேர் பேச்சில் கூட கபடி ஆடுகிறார்கள். இந்திய அளவில் சினிமா என்றாலும் அனுராக் காஷ்யப், மலையாள நியூ வேவ் என கடகடவென்று ஒப்பிக்கிறார்க்ளே தவிர மருந்துக்கு கூட ‘ஒருநாள் கூத்து‘ மாதிரியான தமிழ் படங்களை குறித்து உச்சரிப்பதே இல்லை. சாதாரணமாக இருக்கவும், வெகுளியாக வாழவும் முடியாதோ… நாம் எல்லாம் வாழவே தகுதியற்றவர்களோ என்ற அச்சம் சூழ்கிறது.
இந்நிலையில்தான் தொலைந்து போன அந்த ‘விகடனின்‘ முகத்தை – ‘குமுதம் லைஃப்‘ கச்சிதமாக மீட்டுருவாக்கம் செய்கிறது. இன்றைய (27.07.2016) ‘குமுதம்‘ இதழுடன் வெளியாகி இருக்கும் இணைப்பிதழ் அதை ஆயிரம் சதவிகிதம் நிரூபித்திருக்கிறது. இளம் இயக்குநர்களின் சந்திப்பு, ஜெயமோகன், மாலன் கட்டுரைகள் – பேட்டிகள்… இதை நிரூபிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு பின் ப்ரியா கல்யாணராமன் எழுதியிருக்கும் சிறுகதை -டிபிகல் ‘குமுதம்‘ + ‘விகடன்‘ கலவை. வெகுஜன எழுத்துக்களில் தான் ஒரு ராட்சஷன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தொலைந்து போன ‘விகடனின்‘ முகத்தை தேடுபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரப்பிரசாதமாக ‘குமுதம் லைஃப்‘ அமையும் என உறுதியாக நம்பலாம். தனி பத்திரிகையாக அது வரும் நாளுக்காக காத்திருக்கிறோம். வாங்க பாஸ்
இந்தப் பதிவுக்கு பின்னூட்டங்களில் வந்துள்ள சில கருத்துக்களும் அதையொட்டி எழுந்த விவாதங்களும்:
Azeez Luthfullah நிகழ்வுகளை அலசுகின்ற ஆழமான அதே சமயம் பாமரனையும் உள்ளிழுக்கின்ற வகையில் எழுதப்பட்ட ஆக்கங்கள் தமிழில் எந்தக் காலத்தில் வெளியாகி இருக்கின்றன?
நீங்கள் குறிப்பிடுகின்ற அந்த 80களிலும் 90களிலும்கூட சினிமா, சினிமா, சினிமா என்றுதானே குமுதமும் சரி, ஆ.வி.யும் சரி சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டிருந்தன! 2002-இல் குஜராத்தில் மிகப் பெரும் அளவில் முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது கமல்-சரிகா விவாகரத்து தொடர்பான செய்திகள்தானே அடுத்தடுத்து முகப்புக் கட்டுரைகளாய் வெளியாயின..!
ஆசிரியர் பீடத்திலும் தரம் பற்றிய அக்கறை இல்லை.
தண்ணிப் பார்ட்டி வைத்தால் தங்கள் பேட்டி வரும் என்ற பேச்சும் உண்டு.
கே. என். சிவராமன் கவிஞரே… இணைய பயன்பாடு ஒட்டுமொத்த தமிழகத்தில் – எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் – குறைவு. அப்படி பயன்படுத்துபவர்களும் தங்களுக்கான வாட்ஸ் அப், முகநூல் நண்பர்கள் என்றுதான் பரந்து விரிந்திருக்கிறார்கள். மற்றபடி ‘இணைய சூறாவளி‘ எல்லாம் பெரிதாக இல்லை. இந்த சதவிகிதம் 3%க்கும் குறைவு என்கிறது புள்ளிவிபரம்.
Saravanaganesan Paramasivam ஒரு காலத்தில் ‘விகடன் ஜோக்ஸ்‘ என்பது ஃபேமஸ் ஆக இருந்தது. இன்று அது காணாமலேயே போய்விட்டது.
Ravichandran Sai ரெட்டை வால் ரெங்குடு சிரிப்பு திருடன் சிங்காரம் இவர்களை மறக்க முடியுமா?
Subbu SJ எட்டு பத்து வருசத்துக்கு முன்ன வந்த லூசுப்பையனெல்லாம் செம கலாயா இருக்கும். இப்போ அதெல்லாம் யாரு எழுதுறான்னு தெரியல. சூர மொக்கையா இருக்கு. எழுதிட்டு அவர் மட்டுமே சிரிச்சுக்குவாரு போல.
Saravanan Thozhan K இது உண்மை என இப்பொழுது புரிகின்றது …4-5 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆவி படிப்பதை கடமையாக எண்ணிய காலம்,அந்தளவுக்கு அதில் ஏதோ ஒரு கட்டுரை,கதை ஈர்த்துக்கொண்டே இருக்கும். இப்போது மெதுவாக படித்துக்கொள்ளலாம் என்ற சலிப்பு வந்திருக்கிறது என்பது உண்மை.கடைசியாக ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ உயிரப்பாக இருந்தது. ஆயிரம் ஆயினும் விகடனை கைவிட மனம் வரவில்லை …இருந்தாலும் குமுதம் life முயற்சி செய்து பார்ப்போம் ..
சுருக்கமாக சொல்வதென்றால் ‘விகடனால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்கள் ‘என்பது போய், அறிவுஜீவிகளின் பின்னால் அலையும் பத்திரிகையாக அது மாறிவிட்டது.//. நெத்தியடி. முப்பது ஆண்டுகளாக விகடன் படிக்கும் எனக்குஇப்போது சோர்வுதான். மக்களை விட்டு விலகும் எதுவும் அதன் முடிவை சந்திக்கும்.
நண்பர்கே. என். சிவராமன் குமுதம் லைஃப் பை பாராட்டி விகடனை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவு எழுதியிருக்கிறார். எனக்கும் குமுதம் லைஃப் பிடித்திருக்கிறது. ஆனால் அது தமிழ் சிற்றிதழ் மற்றும் இடைநிலை இதழ் கலாச்சாரத்தின் ஒரு வெகுசன நீட்சியாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இதற்கும் விகடனுக்கும் சம்பந்தமில்லை. இதுவரவேற்கத்தக்க முயற்சி என்று ப்ரியா கல்யாண்ராமனிடமே தெரிவித்தேன்
ஆனால் விகடனை தாக்கி குமுதம் லைஃபை ஒரு புரட்சியாக கொண்டாடுவது நியாயமாகப் படவில்லை. தமிழின் புதிய நவீன இலக்கிய போக்குகளுக்கு விகடன் அளித்த பங்களிப்பிறகு நிகரான பங்களிப்பை வேறு எந்த வெகுசன இதழும் அளித்ததில்லை. ஜெயகாந்தன் காலம் தொட்டு இன்றுவரை நவீன எழுத்திற்கு விகடன் முக்கியமான ஒரு இடத்தை அளித்து வந்திருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல தீவிரமான எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய களத்தை தந்ததுமட்டுமல்ல, வெகுசன வாசகபரப்பில் ஒரு மாற்று ரசனையையும் அது உருவாக்கியிருக்கிறது. ரா.கண்ணன் பொறுப்பேற்றுக்கொண்டபிறகு நவீன இலக்கியத்திற்காக வெளி விகடனில் பெருமளவு அதிகரித்தை நான் மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறேன்.
எல்லாவற்றையும்விட பல்வேறு சமூக அரசியல் பிரச்சினைகளில் விகடன் தார்மீக ரீதியான ஒரு நேர்மையான நிலைப்பாட்டை சமரசமற்று எடுத்திருக்கிறது. அதற்காக அது பல நெருக்கடிகளையும் சந்தித்திருக்கிறது.
இதையெல்லாம் சேர்த்துத்தான் ஒரு பத்திரிகையின் இடத்தை மதிப்பிட வேண்டும்.
இதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள்…