சவுக்கு இணையதளத்தில் தன் மீது அவதூறான கட்டுரை வெளி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் வழக்கறிஞரான மகாலட்சுமி காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் கழித்து, சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சவுக்கு தளம் சார்பாக யாரோ ஒருவர் போனில் மிரட்டியதாக மற்றொரு புகாரை கொடுத்தார். காவல்துறை இதன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மகாலட்சுமி, இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றம் முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.
சிபிஐ இரண்டு வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மகாலட்சுமி மீது அவதூறான கட்டுரை எழுதிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் மகாலட்சுமி, ஒரு ஒலிநாடாவை சமர்ப்பித்திருந்தார். அந்த ஒலிநாடாவில் யாரோ அடையாளம் தெரியாத ஒருவர் சவுக்கு தளத்தில் கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறினார் மகாலட்சுமி.
வழக்கில் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் குரலையும் பதிவு செய்து, டெல்லிக்கு சோதனைக்கு அனுப்பியது. அந்த பரிசோதனையின் முடிவில், மகாலட்சுமியின் தம்பி சதீஷ்தான், தொலைபேசியில் மிரட்டியுள்ளார் என்பது வெளியானது. இதையடுத்து, பொய்யான புகாரை அளித்ததற்காகவும், போலியான ஆதாரங்களை தயார் செய்ததாகவும், சன் டிவி செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி மீது சிபிஐ சென்னை எழும்பூர், கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மகாலட்சுமி மற்றும் அவரது தம்பிக்கு ஆகஸ்ட் 1 அன்று ஆஜராக வேண்டுமென்று, சம்மன் வழங்கப்பட்டுள்ளது.