126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடத் திரண்டதால் திங்களன்று (ஜூலை 25) சென்னை பாரிமுனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இரவில் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில்சில திருத்தங்களைக் கொண்டு வந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளதுஎன்று வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சட்டவிதிகள் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனபல போராட்டங்களை கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஆனாலும் விதிகள் திருத்தத்தை முழுவதுமாக திரும்பப்பெற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், உயர்நீதிமன்ற விதிகள் குழுவில் உள்ள 5 நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து இந்தக் குழு மீண்டும் வரும் 29ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 25 திங்களன்று தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

போராட்டத்தால் உயர் நீதிமன்ற வளாகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்க உயர் நீதிமன்ற அனைத்து வாயில்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு மற்றும் போராட்டங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்றும், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.

கொதிப்பை ஏற்படுத்திய உத்தரவு

அந்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் தொடர்பான பட்டியலை அனுப்பியது. அதனடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் போராட்டக்குழு தலைவர் திருமலைராஜன் உட்பட 126 பேரை நீக்கம் செய்து ஞாயிறன்று (ஜூலை 24) உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் திங்களன்று உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சிலை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவிருந்த நிலையில் அகில இந்திய பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.அறிவித்தபடி திங்களன்று காலை தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை ராஜா அண்ணாமலை மன்றம், பல் மருத்துவக் கல்லூரி அருகே திரண்டனர்.

போலீஸ் குவிப்பு

போராட்டம் நடைபெறும் மேடை அருகே மட்டும் சுமார் 500 போலீசார் குவிக்கப்பட்டனர். அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். உயர்நீதிமன்றத்தின் 7 நுழைவு வாயிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இரு்சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தை நோக்கி பேரணியாக வழக்கறிஞர்கள் செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தின் 4 புறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு தடுப்பு அமைக்கப்பட்டதால், பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டன. அங்கிருந்த கடைகளும் மூடப்பட்டன. பாரிமுனை பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னை பாரிமுனை ஸ்தம்பித்தது.

நன்றி: தீக்கதிர்.

One thought on “126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.