தினமணி எழுதிய ‘கபாலி’ விமர்சனத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் முதல் தொகுப்பை இங்கே காணலாம். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள சில பதிவுகளை இங்கே தந்திருக்கிறோம்…
பகுத்தறிவு-பெண்விடுதலை-சாதியொழிப்பு அரசியலாகக் கொலோச்சிய தமிழக அரசியல் இயக்கம் உருப்படியாக சீரிய அரசியல் சினிமாவை உருவாக்கியதா? இல்லை எனில் ஏன்? அவர்கள் உருவாக்கிய வெகுஜன சினிமா எத்தகையது? ரஞ்ஜித் உருவாக்க விரும்பும் சினிமா எத்தகையது? இது குறித்த தீவிரமான விவாதங்கள் எழ வேண்டும். சினிமா என்பது இயக்குனரின் மீடியம்தான். ரஞ்ஜித் அப்படியான இயக்குனராக உருவாகி வருகிறார். சினிமா என்பது அதன் சமூக அர்த்தத்தில்-ஒரு சாதிய சமூகத்தில் அதற்குள் மட்டும் நின்றுவிடுவதில்லை. ரஞ்ஜித் மீதான தினமணியின் வன்மத்தை நான் இவ்வாறுதான் புரிந்துகொள்கிறேன்.
கபாலி எனும் திரைப்படம் குறித்த விமர்சனம் விகாரமான திசையில் செல்கிறது. இது ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினை. உணர்ச்சிகரமான ஒரு தருணத்தில் நாம் நிதானமாகச் சொல்வது கூட விகாரமான தடத்தில் மடை மாற்றப்படலாம். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஓயும்போது, அடுத்தொரு வெள்ளியில் இன்னும் 4-5 படங்கள் வெளியாகும்போது, யதார்த்ததுக்கு யாரும் திரும்புவார்கள். அப்போது நிதானமாப் பேச முடியும் என நினைக்கிறேன்..
மிக நிதானமாக….. பார்த்து பார்த்து…..
மேலோட்டமாக இல்லாமல் மனசுக்குள் ஊற வைத்து அசைபோட்டு திரும்ப திரும்ப காட்சிகளில் உறைந்து… கபாலியின் கட்டமைப்பில் திரைக்கதையில் அதன் உருவாக்கத்தில் இருக்கும் அனைத்தையும் உருக்கி ஒரு வார்த்தையை உருவாக்கினால் அதை இப்படி வேண்டுமானால் சொல்லலாம்
‘ரஞ்சித்தியம்’
ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்திடம் எதையும் சமரசம் செய்துகொள்ளாமல் தன் கதைக்கும் கருத்தியலுக்கும் தன் அரசியலுக்கும் மிக நியாயம் செய்திருக்கிறார்.
நான் மீண்டும் அட்டகத்தியையும் மெட்ராஸையும் பார்த்தேன். ரஞ்சித் தனது படிகளில் ஏறிக்கொண்டேதான் இருக்கிறார்.
ஜாதி வன்மம் மிக்க ஒரு சமூகம் அதை எதிர்கொள்ள முடியாமல் அல்லது தாங்கிக் கொள்ளமுடியாமல் தவிக்கும் தவிப்பின் வெளிப்பாடே எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம்.
ரஜினியைப் பார்த்த ஒற்றைத் தன்மையும் அதையே வேண்டும் நாஸ்டாலஜிக்கல் மனமும் ஊறிக்கிடக்கும் ஜாதியமும் கபாலியாகப் பார்க்க மறுக்கிற தன்மையை ஏற்படுத்துகிறது என்பதே உளவியலாக இருக்க முடியும்.
தமிழ் ரசிகரை வெறும் சிகரெட்டு ஜாலங்களுக்கும் “ஹேர்ல பறந்து பறந்து அடிக்கிற” ஜாலங்களுக்கும் தென்மாவட்ட ஜாதி நிலக்காட்சிக்கும் பழக்கி இருக்கிற மேற்படி சினிமா ஜாம்பாவன்களுக்கு இடையில் மலேசிய கதைக்களத்தை ரசிக மனத்தில் இருக்கும் மற்றமைகளைத் துடைத்து எழுதுகிற அல்லது அதைப் புரிய வைக்கிற தளத்தில் தன் பார்வையாளரை ஒரு கௌரவமான இடத்திற்கு உயர்த்தி இருக்கிறார் ரஞ்சித்.
டிக்கட் வியாபாரம், ரஜினிபடமாக இல்லை என்று புலம்பும் தினமணி பாலிமர் போன்ற ஊடக ஜாதிக்காரர்கள் படத்திலிருக்கும் பாத்திரங்களின் ஆழங்கள் குறித்தும் அவரவர்களுக்கான வாழ்வில் இச்சமூக அமைப்புத் தந்த இழிமைகள் அதிலிருந்து அவர்கள் விடுபடச் செய்யும் போராட்டங்கள் குறித்த பார்வையைப் பார்க்கும் மனமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்ட பெண், தாய் தந்தையை இழந்த ஒருபெண் குழந்தை, தன் மனைவியையும் குழந்தையையும் இழந்த ஓர் அறம் பேசும் போராட்டக்காரன் அவன் கேங்ஸ்டராக மாறுவது, தன் கணவனை குழந்தையை இழந்த ஆனால் நம்பிக்கையை இழக்காத குமுதவள்ளி, இவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட சமூகக் கொடுமைகளுக்கானப் பின்புலம் இவற்றில் ரஜினி என்ற ஆளுமையின் கண்கூசும் வெளிச்சம் இவற்றிற்கான அரசியல் செயல்படும் புள்ளி என எல்லாவற்றையும் தன் திசையில் கபாலி பேசியிருக்கிறது.
ரஞ்சித் என்னும் படைப்பாளியின் அரசியலையும் அவர் முன்வைக்கும் படைப்பின் அரசியலையும் சமூகப் பார்வையையும் கவனிக்காமல் சிகரெட் புகை மூட்டத்தில் வெளிப்படும் முந்தைய படங்களின் ரஜினியின் முகத்தைப் போல ஜாதியின் புகை மூட்டத்தில் ரஞ்சித்தை அணுகுவது மிகவும் மோசமான அப்பட்டமான பிற்போக்குத்தனமன்றி வேறென்ன சொல்ல முடியும்?
ரஞ்சித்,முரளி, சந்தோஷ் நாராயணன்,அதியன், ராமலிங்கம், கபிலன், உமாதேவி, அருண், மற்றும் நடிப்புக்கலைஞர்கள் ரஜினி, ராதிகா ஆப்தே, ரித்விகா, தன்ஷிகா, ஜான் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
இன்னும் கபாலி குறித்து நிறைய பேசுவதற்கும் எழுதுவதற்கும் இருக்கிறது. பேசுவோம் எழுதுவோம்.
கபாலி : ரஜினி குறித்தல்ல..
கேங்ஸ்டார் படம் என்றதும் வழக்கமான பாட்சா, தளபதி போன்றோ அல்லது சிவாஜி, எந்திரன், லிங்கா போன்றோ இருக்குமென ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து அது இல்லை என்பது வேறு..இது ரஜினி ரசிகள் பிரச்சனை. ஆனால் அதைத் தாண்டி இந்தப்படம் விமர்சனங்களை மட்டுமல்ல எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது அதற்கு காரணம் படத்தில் பேசப்பட்டுள்ள அம்பேத்கர் அரசியல்தான்.
1. எங்கிருந்து வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘’திண்டிவனம் பக்கத்திலுள்ள கிராமத்தில் பண்ணையடிமையால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தோம்” என்ற பதில் முக்கியமானது. பண்ணையடிமை என்பது தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய சாதிய கொடுமைகளின் அடையாளம்.
2. நாம் என்ன உடை போடவேண்டும் என்பதை யாரோ ஒருவன் எப்படி தீர்மானிக்க முடியும்.
3. இறுதியில் கிஷோர் பேசுவது, ‘’யார்றா நீ.. வெறும் சோத்துக்காக இங்க வந்தவன்தானே.. தின்னுட்டு அமைதியா இருக்கவேண்டியதுதானே.. மத்தது எல்லாம் எதுக்கு நீ செய்ற.. செய்றதுக்கு நீ யாரு.. அதெல்லாம் பிறப்பிலேயே இருக்குடா.. உனக்கு என்ன தகுதி இருக்கு… கோட்டு, சூட்டு, கண்ணாடி போடா சமமா ஆயிடுவியா” (இதற்கெல்லாம் விளக்கம் ஒன்றும் தேவையில்லை என நினைக்கின்றேன்)
4. இளைஞர்களை நெறிபடுத்துகின்ற, சமூக அக்கறையுள்ள மனிதனாக மாற்றுவதற்கான பள்ளியை நடத்திக்கொண்டு, நேர்மையாகவும், உண்மையாகவும் படைக்கப்பட்டுள்ள அமீர் என்கிற இசுலாமிய கதாபாத்திரம் மற்றும் தமிழ்நேசன், தமிழ்மாறன், ஜீவா, குமரன், யோகி போன்ற தமிழ் அடையாளப்பெயர்கள்.
இப்படி இவையெல்லாமே ஒடுக்கப்பட்டோரின் அரசியலை மையப்படுத்துகின்றன.
ஏற்கனவே மிகமோசமான குப்பைக்குச் சென்ற ரஜினி படங்கள் பல உள்ளது. அவைகள் எல்லாம் விமர்சனத்திற்கு ஆளானதே தவிர எதிர்க்கப்படவில்லை.
ஆனால் இந்தக் கபாலி படம் வழக்கமான ரஜினி படங்களைப்போல் இல்லாததுடன் அம்பேத்கர் அரசியலை குறிப்பாக இயக்குநர் ரஞ்சித் மூலமாக அம்பேத்கர் அரசியலை பேசுவதுதான் பெரும்பாலோனருக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பலவாறாக புலம்புகின்றனர்.
இரண்டு விசயங்களை நான் முக்கியமானதாக நினைக்கின்றேன்.
1. Free Life Foundation பள்ளியை அம்பேத்கர் மன்றங்களால் நடத்தப்படுகின்ற மாலை நேரப் பள்ளியாக நினைத்துப்பாருங்கள்.
2. பண்ணையடிமை முறையால் பாதிக்கப்பட்டு, சமூக கொடுமைகளிலிருந்து விடுதலைபெற முயல்கின்ற ஒருவன் பாடுகின்ற ”நெருப்புடா.. நெருங்குடா பார்ப்போம்.. நெருங்குனா பொசுக்குற கூட்டம்…’’ என்று எதிர்ப்பு அரசியலை முன் வைப்பதை இந்தச் சாதிய சமூகத்தால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
லஞ்சம்-ஊழல்-வாக்கு அரசியல் என பொதுவான வணிக விற்பனைக்கு போதுமான மசாலத்தனங்களை மட்டும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் எல்லோரும் ரஞ்சித்தை தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்பார்கள்.
மாறாக இந்துத்துவ – சாதிய சமூக அரசியலைப் பேசுவதால் அதுவும் திரைத்துறையில் நட்சத்திர முகமான ரஜினி மூலமாக பேசவைத்ததில்.. தாங்கிக்கொள்ளமுடியாமல் எதிர்ப்பினை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் ஒடுக்கப்பட்டோர் அரசியலை படைப்பாக்குகின்ற ரஞ்சித் பக்கம்தான் நாம் நிற்கவேண்டும். நிற்கமுடியும்.
தினமணியை யார் வாசிக்குறா?
ஒரு “சாதாரண” சினிமா இவ்வளவு அதிர்வை ஏற்படுத்தும் என்றால் இதைப் போல இன்னும் 100 படங்கள் வரவேண்டும்.
ரஞ்சித் போல இன்னும் பல இயக்குநர்கள் வர வேண்டும்!
மாறாத ஒரு சமூகத்துக்கு தேவை மாற்று சினிமா இல்லை.. தேவை சவுக்கடி சினிமா தான்!
திரை விமர்சனம் என்ற பெயரில் தினமணியில் வந்துள்ள தலித் விரோத, ரஞ்சித் மீதான அப்பட்டமான தாக்குதலுக்கு முடிந்த வரை கண்டனத்தை தெரியப்படுத்துங்கள்.
முன்னாடி எல்லாம் read between lines என்கிற வகையில் , அரசியல் புரிந்தவர்களுக்கு மட்டும் விளங்கும்படி, பிற்பட்டோர், தலித் விரோத கட்டுரைகளை வெளியிடுவார்கள் தினமணியும் தினமலரும்.
ஜெ- மோடி தலைமைப் பதவியில் வந்ததில் இருந்து , இந்த நாளேடுகள் .எதற்கும் அஞ்சுவதில்லை . வெளிப்படையாக நரிகள் ஊளையிடுகின்ற்ன.. நடுநிலை, ஊடக தர்மம் எல்லாம் காற்றில் பறந்த காலத்தில் நிற்கிறோம்..
நமக்கு நாமே என்பது போல் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் நிற்கிறோம்.
இந்த நேரத்தில் பெரியார்- அம்பேத்கர் என்று பிரிந்து நின்று வாள் வீசுவது நம்மை நாமே அழித்துக் கொள்ளத் தான் உதவும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டிய காலம்.
ஆடத் தெரியாத லம்பாடி தெரு கோணலுண்டு சொன்னாளாம். எங்குட்டு வச்சிப் பாத்தாலும் மொச்சப்பயிறு சாப்புடற பயலுதாம்பிள நீ? எப்படி ஏத்துற பாரு சத்தமே இல்லாம வாழப்பழத்துல ஊசிய? ஏன் அம்புட்டு அரிப்பெடுத்தா இதே ரஜினிய உங்க சங்கர வச்சி ‘அந்நியன்’ மாதிரி ஒரு ..ன்னியன்னு படத்த எடுத்து ஓட்டிக்க.. என்ன கெட்டுட போகுது?
கீழேயேதான் கெடக்கணும். தலைய செத்த தூக்கிக்கூட பாத்துடப்படாது. ஒடனே கால தலயில வச்சி அமுக்கியே நச்சுப்புடுவிய. அப்படி கால வச்ச மேனிக்கே ஒரு சாமியவும் உருவாக்கி கொடுத்துடுவிய. அத வச்சிக்கிட்டு நாங்க ஊருக்கு வெளியே கும்புட்டுக்குடனும். ஒரு எட்டு உள்ளக்க வந்துட்டோம்ண்டா ஒடனே அருவா வெட்டுதாம், இல்ல!
இதே ஊருக்கு எல்லைலகூட இல்லாம, டவுனுக்கும் அந்த பக்கம், உங்களுக்குண்டே உங்க அரசாங்கத்துவுக மாடிவூடா கட்டிக் குடுக்கும். அதுக்குள்ளாற பூந்து அசையாம வாழ்ந்துக்குடுவீய. சுத்தி முத்தி பாக்க சன்னல் கூட இல்லாம, டிவியையும், அந்த அது என்ன, கம்பூட்டரும் வச்சி உலகத்த பாத்து வாழ்ந்துப்பீய. அப்புறம் இந்த உலகம் எப்படி தட்டையா இருக்குண்டு உங்களுக்கான கருத்த உருவாக்கி பரப்பிப்பீய.
ஊர்க்கார பயலுவ நீங்க எழுதிக் குடுக்குற அருவாள தூக்கியாந்து எங்க புள்ளையள வெட்டி போட்டுக்கிருப்யான். நாங்க இங்க உக்காந்துட்டு எங்க பெண்டு புள்ளைகள படிக்க வக்க முடியாம, வெளியவும் விட முடியாம வாழ்ந்துக்கிருக்கணும் இல்ல?
எங்களுக்கு உங்க சிசில் பி.டெமிலி தெரியாது. வில்லியம் வைலரா பென்ஹரா ஜம்பரா சத்தியமா எங்களுக்கு தெரியாதுதேன். ஏதோ ஒரு அஜித் படத்துக்கு காட்பாதருண்டு பேரு வச்சு, பின்னால மாத்துனதான் நியாபகம். இப்படித்தான் இருக்க வச்சிருக்கீய எங்கள. அப்படியாப்பட்ட நாங்க ரஜினிய வச்சி சொன்னாத்தானயா ஓம் பஞ்சடச்ச காதுக்குள்ளாறல்லாம் கேக்கும்.
அது என்ன… என்னவோ லோ பட்ஜெட்டு… அடியில தட்டுற சிந்தனண்டு என்னவோ… இந்த அடியில தட்டு, ஓரமா டம்பளரு, பக்கத்துல ஜாலராங்கற கதையெல்லாம் கண்டுபிடிச்சவுக நீங்கதான். நாங்க இல்ல. எங்க சிந்தனயே அடித்தட்டு சிந்தனைதான்டு நினைக்கிற உங்க சிந்தனை எந்த தட்டுல இருக்கு தொரமாரே! நீங்க முன்னாடி குனிஞ்சதும் பின்னாடி பொளந்து தெரியுது பாருங்க. அத மூடுங்க மொதல்ல.
பாபா படம் என்ன… அடாடாடா… எப்பிடி சொறிஞ்சி விடறீய பாருங்க.. பாட்டுங்க நல்லாதேன் இருந்துது… அட நாங்கூட ரசிச்சேங்கறேன். தோத்த படமுண்டா, அதுவும் நல்லா இல்லாத படமெண்டுதான அர்த்தம்? ஆனா, பாபா பாட்டும் வரியும் மட்டும் நல்லா இருக்குன்றீய. கபாலி பாட்டும் வரியும் நல்லா இல்லங்கறீய. நான் சொல்லட்டுங்களா காரண கெரகத்த. ரகுமான கூட “ஷக்தி குடு”ண்டு எச போட வச்சுட்டோம்ற மெதப்பு உங்களுக்கு.
அட, எனக்கும் ரஜினி எங்கூட்டத்துக்கு பாடறதால புடிக்குதுங்கறேன். ஆனா சாமி செத்தியமா உங்காளுகளுக்கு புடிக்காது. புடிக்கணும்டு நெனச்சியள்னா வாங்க. எங்ககூட ஒரு தலைமுறைக்காவது தங்கிப் பாருங்க. அப்புறம் பாருங்க. “அடக்குனா அடங்குற ஆளா நீ”ண்டு பாடும்போது புடிக்கும்.
கொறஞ்ச பட்ஜெட்தான் இவருக்கான களம். புது நடிக புள்ளைகதான் செட் ஆவும். மனிதக்கடவுள் ரஜினிக்கு செலவு பண்றது தப்பில்லண்டு ரஞ்சித் சொன்னாப்பள. அல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிப்பிய இல்ல? ரஞ்சித் அப்படி எங்க சொன்னாப்ள? நீங்க பாத்தியளா இல்ல கேட்டியளா?
சாமிக்கு முன்னாடி மணியாட்டுனா எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிப்பியளா? இல்ல கேக்குறன். நான் என்னத்த சாப்டணும், ஊர்க்காரன் என்னத்த சாப்டணும், எவன் எவள கட்டணும், எவ கூட படுக்கணும் இன்னும் எதெயல்லாம் அந்த ஒத்த கூட்டுக்குள்ளாற உக்காந்து உங்க சாமியோட முடிவு பண்ணுவிய?
இன்ன வரை, வலி மறக்காப்ல எங்கள அல்லாரும் போட்டு அடிச்சப்ப வராத நீங்க, இப்ப அடியில பத்த வச்சா மாறி ஒடனே ஓடியார்றியள்னா, சரியான எடத்துலதாம்ல அடிச்சிருக்கோம் ரஞ்சித்து.
நீங்க எழுதுற உங்க பேப்பர கிழிச்சி நீங்க பேண்டத தொடச்சிப் போட்டுக்கிடுங்க. உங்கதுதான. மணமாத்தேன் இருக்கும். நாங்க ஊருக்குள்ளாற வந்துட்டோம். வேலைக கெடக்கு.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!.
மைன்ட் வாய்ஸ்:ஆமாம்டா தூரமா நின்னு கையெடுத்து கும்பிட்டு ஓடுங்க; உள்ளே வந்துடப் போறீங்க.
(கபாலி இயக்குநரை மட்டம் தட்ட மட்டுமே விமர்சனம் எழுதறவங்க மைன்ட் வாய்ஸ் பதற்றம் கூட நல்லா புரியுதுங்கய்யா)
Inigo Pious
லோ பட்ஜெட் அடிதட்டு சிந்தனை கொண்டவர் ரஞ்சித்
பா. ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கக் கூடாது
மேற்கூறிய கருத்து கூந்தல்களை உதிர்த்திருப்பது தினமணி
இது என்ன தெரிமா அவன் கீழ் சாதி தெருவுக்குள் ஊருக்குள் கோவிலுக்குள் விடக்கூடாது என்ற ஒரே ஆதிக்க பார்ப்பன சாதி வெறி தான். அதே மனுதர்மம் வர்ணாஸ்ரம எண்ணம் தான்.
ரஞ்சித் சினிமா எடுக்குறது உனக்கு புடிக்கலனா ரஞ்சித் சினிமா எடுப்பான்டா உனக்கு புடிக்கலனா சாவுடா.
கபாலியாக வரும் ரஜினி, கோட் சூட் போட்டா உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேட்பது சரி, அதற்காக மகாத்மா காந்தியை ஏன் ஏளனப்படுத்திக் கொச்சைப்படுத்த வேண்டும் என்று புரியவில்லை. – தினமணி
விமர்சனம் எழுத சொன்னா, கலவரத்த தூண்டி உடறாய்ங்க.. கபாலியாக வரும் ரஜினி வெளிநாடு வெளிநாடா போறாரு, இதன்மூலம் மோடியை கொச்சைப்படுத்தி இருக்கிறார்.
தினமணி தான் போட்டிருக்கிற நூலை ரெண்டு கட்டைவிரலுக்கிடையிலயும் குடுத்து முதுகு சொறிஞ்சிக்கிட்டே பேனா மூடியக் கழட்டும் போது குடுமியிலிருந்து உதிருகிற கூந்தல் மாதிரி எழுதுனதுதான் கபாலி விமர்சனம் போல. வாங்கப்பா நடுநிலை வேடத்தையெல்லாம் கலைத்து அப்பட்டமாகவே வெளியில் வாங்க… அப்பத்தான் களம் தெளிவாகும்… எதிர்நிலை தெளிவாகும்… காதுல ஊத்துறதுக்கு ஈயத்தக் காய்ச்சிக்கிட்டே இருக்கீங்களப்பா… சம்பூகனின் தலையை வெட்ட ராமனின் வாளைக் கிளப்பி விட்டுக்கிட்டே இருக்கீங்களே…
கபாலி – மிச்சமிருக்கும் நம்பிக்கை
கடந்த இருபத்தைந்தாண்டுகளாக வெளிவந்த ரஜினியின் படங்களில் அவரின் மிகச்சிறந்த நடிப்பை, உடல் மொழியை, அரசியலை கொண்ட படம் ‘கபாலி’ தான்.
பொதுவாக அவர் நடித்த படங்களின் விமர்சனங்கள் நல்லாயிருக்கு நல்லாயில்லை என்பதனை தாண்டி அதில் விவாதிக்க ஒன்றும் இருந்ததில்லை. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பொழுது போக்கு வடிகாலின் உச்சகட்ட வணிக பிம்பம் என்றால் அது ரஜினி தான். அவரும் சரி , அவருடன் இருந்தவர்களும் சரி இதனாலேயே இந்த வட்டத்தில் இருந்து ரஜினியை வெளியே வராமல் பத்திரமாக பார்த்து கொண்டனர்.
அவரின் முந்தய படம் கூட அவரின் வயதை கணக்கில் கொள்ளாமல் தமிழர்கள் அவரை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையில் அவரின் நாயக ஆளுமையை மட்டுமே நம்பி அவரை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படமாகவே இருந்தது.
இந்நிலையில் முதல் முறையாக ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி கூட்டணி எப்படி இருக்கும். அது இதுவரையில் அவர் ஏற்படுத்தி பாதுகாத்த அவரின் நாயக அரசியலின் தொழுகைக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமா என்றால் இல்லை தான்.
தமிழில் அரசியல் சினிமா என்ற வகைமையே கிடையாது. தேவர் மகன், சின்ன கவுண்டர், எஜமான் போன்ற சாதிய மனோபாவத்தை காப்பற்றி ஆதரிக்கும் படங்களை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் இச்சமூகத்தில் கபாலிக்கு வரும் எதிர்ப்புகள் ஏன் எங்கிருந்து வருகின்றன என புரிந்து கொள்ள கூடியதே.
ஆனாலும் ரஜினிக்கு இங்குள்ள வணிக கட்டமைப்பு, அவை கோரும் வியாபார வெற்றி போன்ற நெருக்குதல்களை தாண்டி மாற்றத்திற்கான துவக்கத்தை ரஞ்சித் ரஜினியிடம் தொடங்கி வைத்து விட்டார் என்றே கொள்ளவேண்டும் . இதை இப்படியே தொடர்வதா இல்லை ஷங்கர்களிடம்
சென்று பழையபடி புதைந்து கொள்வதா என்பதை ரஜினி தான் தீர்மானிக்க வேண்டும்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாயினும் இம்மாதிரி படங்களில் நடிப்பது என்று அவர் தேர்ந்தெடுத்திருந்தால் நிச்சயமாக ஒரு versatile ரஜினியை இந்திய சினிமா தரிசித்திருக்கும்.
இதிலும் விமர்சிப்பதற்கு ஆயிரம் ஓட்டைகள் உள்ளனதான். இவையெல்லாம் தாண்டி இதை கொண்டாடி வரவேற்க வேண்டிய காரணிகளை நிச்சயமாக புறம்தள்ளிவிட முடியாது.
இவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். ரஜினியின் உடலரசியல் மற்றும் அதுசார்ந்து அவர் உடுத்தியிருக்கும் உடைகள். அவை படம் நெடுகிலும் ஒரு குறியீடாகவே வருகிறது. எதை செய்யக்கூடாது என்று சொல்கின்றனரோ அதை செய்து பார்க்கும் அரசியல். அதை ஏன் அவர்கள் உடைகளாக பார்க்காமல் இத்தனை தூரம் கொதிப்படைக்கின்றனர். சாதியின் மீது உள்ள வன்மம், நம்மை விட கீழானவர்கள் என நம்பப்படும் மனிதர்கள் மீதான வன்மத்தின் நீட்சியே இவை. இது தான் அம்பேத்கர் மற்றும் காந்தியின் உடலரசியலை வசனமாக பேச வைக்கிறது. படம் நெடுகிலும் வரும் ஒரு குறியீட்டை பற்றி பேசப்படும் இந்த உரையாடல் எத்தனை கனமாக பொருந்தி போகிறது என்பதை கவனிக்க வேண்டும். பல இடங்களில் அவரின் உடையை ஏளனம் செய்வதிலேயே அவரின் எதிரிகள் குறியாய் இருக்கின்றனர். ரஜினியும் படத்தின் இறுதியில் உடையை பற்றித்தான் பெருமிதம் கொள்ள பேசுகிறார்.
சரி இவையெல்லாம் என் பிதற்றல் என நம்பினால் தயவு செய்து கபாலி படம் பற்றி இன்றய தினமணி விமர்சனத்தை படியுங்கள். ரஜினியை வைத்து இயக்கும் அளவிற்கு ரஞ்சித்துக்கு தகுதி உள்ளதா என்கிற கேள்வியை முதன்மையாக கொண்ட விஷத்தை கக்கும் விமர்சனம். தினமணி கொண்டுள்ள வன்மம் படத்தின் மீதா அல்லது படைப்பாளியின் மீதா என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஒரு சினிமா இங்கே எதையும் செய்து விடாது என கண்மூடித்தனமாக நம்பி விட வேண்டாம். ஏனெனில் அரை நூற்றாண்டு காலமாக நம்மையெல்லாம் இங்கே ஆள்வது அத்துறை சார்ந்தவர்களே.
எந்த ஒரு படைப்பின் மீதும் விமர்சனங்கள் எழலாம்,அது அவசியமானதே .ஆனால் அதன் மீதான தாக்குல் என்பதிலிருந்து தான் அந்த படைப் பு முக்கியமான இடத்துக்கு தள்ளபடுகிறது என்பதுடன். அந்த தாக்குதலே அந்த படைப்பின் வீரியத்தை கூட்டுகிறது.
கபாலிக்கு அதுவே நேர்ந்துள்ளது. அதன் மிரட்டலான பாய்சலை எதுவும் தடுத்து விட முடியாது என்பதை நிருபிக்கஅதற்க்கு அதிக நாட்கள் தேவைபடாது.
இன்று தினமணி கபாலிக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தில் வெளிப்படும் காழ்ப்பைக் கண்டபோது ரஞ்சித்தை ஆதரிப்பது அவசியம் என்று தோன்றிவிட்டது.
Vinayaga Murugan அந்த விமர்சனத்தில் ஜாதி வெறி வெளிப்படையாக தெரிகிறது. ஜாதிய கண்ணோட்டத்தில் படத்தை விமர்சனம் செய்துள்ளார்கள். இப்படிதான் அந்நியன் படத்துக்கு விமர்சனம் எழுதினார்களா?
“கபாலி” படம் அதிக விமர்சனங்களை பெற்றுள்ளதும்,,,
தினமணி வந்துள்ள விமர்சனமும் இயக்குனர் ரஞ்சித் என்பதால் எனும்போது
ரஞ்சித் செல்லும் பாதை சரியே…
தினமணி போட்ட “பீப் சாங்க்”
…………
கபாலி குறித்த சாதிய வன்மம் மிகுந்த தினமணி விமர்சனத்திற்குப்பிறகு இணையத்தில் ரஞ்சித்திற்கு கடந்த 24 மணி நேரத்தில் பெருமளவு ஆதரவு அதிகரித்திருக்கிறது. படம் தொடர்பான விஷயங்களை விமர்சித்து வந்த நானும் ரஞ்சித்தை ஆதரித்து பதிவிட்டேன். அப்படி செய்வது சரியானது என்று இப்போதும் நம்புகிறேன்.
ஆனால் இதில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது தினமணியின் அணுகுமுறைதான். ஜெயலலிதா விசுவாசத்தை நிரூபிக்க பல ஊடகங்கள் பலவிதமாக மண்டியிட்டாலும் அவற்றால் இந்த விஷயத்தில் தினமணியை நெருங்கக் கூட முடியவில்லை. அப்பேர்பட்ட தினமணி ஜாஸ் சினிமா வாங்கிய கபாலியை இவ்வளவு கடுமையாக தாக்குவதை நம்ப முடிகிறதா? மேலும் சினிமா விளம்பரங்களை நம்பியிருக்கும் நாளிதழ்கள் எந்த பெரிய பட்ஜெட் படத்திற்கும் எதிர்மறை விமர்சனங்களை எழுதியதில்லை. தினமணியும் எழுதியதில்லை. பிறகு ஏன் கபாலிக்கு மட்டும் இந்த தாக்குதல்?
இணையத்தில் கபாலி ஆதரவு மனநிலைக்கு இணையாக எதிர்ப்பு மனநிலையும் கடந்த சில தினங்களாக கடுமையாக வெளிப்பட்டு வருகிறது. படத்தின் வர்த்தக வழிமுறைகள், படத்தில் உள்ள பிரச்சினைகள் என பல நிலைகளில் இந்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் தலித் விரோதிகள் அல்ல.
இந்த எதிர்மறை விமர்சங்களை தணித்து கபாலி ஆதரவு மன நிலையை பெருகச் செய்யவேண்டும் என தினமணி போட்ட ” பீப் சாங்க்” தான் இந்த விமர்சனமா? சமூக வலைத்தளங்களின் trending எதுவோ அதுதான் இன்று பல விஷயங்களை தீர்மானிக்கும் சூழலில் இந்த விஷயத்தை யோசிக்கலாம்.
கபாலியை நியாயமான காரணங்களுக்காக விமர்சிப்பவர்களைக்கூட தினமணியின் அணுகுமுறையோடு இணைத்துப்பார்க்கக்கூடிய சூழலில் விமர்சகர்கள் பலருடைய சுருதி சட்டெனெ இறங்கிவிட்டது.
பொழுது விடிந்து பொழுது போவதற்குள் எத்தனை conspiracy theory கள்.
தினமணி கட்டுரையைப் படித்த பிறகு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ரஞ்சித்துக்காக ஒருமுறை நெருப்புடா என்று சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன்.
தினம ணி ஒரு வாசகனை இழந்து விட்டது . நடுநிலை தவறாத பத்திரிக்கை ஊடகம் என்று என்னுள் இருந்த ஒரு எண்ணத்தை கபாலி விமர்சனத்தில் சுக்குநூறாக்கிவிட்டது . மிகைப்படுத்த தேவையில்லை அப்படியே சொல்லியிருந்தால் கூட அடங்கிப்போயிருப்பேன். உன் விமர்சனத்தால் அடங்கா நிலை கொண்டு எழுதுகிறேன் . என் குரு இலக்கியபிதாமகன் ஜெயகாந்தன் போல எனக்கு எழுதத்தெரியாது.இப்போது எழுத முயற்சித்துள்ளேன். போட்டித்தேர்வுக்கு சிறந்த மூலம் தினமணி என்று எண்ணி என் மீதிருந்த நம்பிக்கையிழந்து இருந்த என்னை இந்த நடுநிலையற்ற விமர்ச்சனம் உயிர்த்திருக்கிறது . ஆம் ஆங்கில வழியில் படித்தாலும் கூட என் சொந்த முயற்சியில் தமிழாக்கத்தை போட்டித்தேர்விற்காக மீட்டெடுப்பேன் இதுவரையிலான உனதாதரவுக்கு நன்றி !
LikeLike