காஷ்மீரில் 15 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டங்களால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேர் பெல்லட் எனப்படும் குண்டுகளால் பார்வையிழப்பை சந்தித்துள்ளனர். போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துகிறது இந்திய ராணுவம். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் குழந்தைகளும் இளைஞர்களுமாகவே உள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசும் ஊடகங்களும் பிரபலங்களும் பாராமுகமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் ‘நெவர் ஃபர்கெட் பாகிஸ்தான்’ என்கிற மனித உரிமை குழு தனது முகநூல் பக்கத்தில் உருக்கான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது. அதில் அரசியல்வாதிகளையும் பிரபலங்களையும் பெல்லட் குண்டுகளால் துளைக்கப்பட்டவர்களாக சித்தரித்து, அவர்கள் செய்யத் தவறியவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறது இந்தக் குழு.
உதாரணத்துக்கு, முகநூலில் காஷ்மீர் தொடர்பான பதிவுகளை கட்டுப்பாட்டு விதிகள் என்ற பெயரில் தணிக்கை செய்து நீக்கிய அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க்கை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அன்புள்ள மார்க்,
உறுதியுடன் நாங்கள் நிற்பதற்கும் எங்கள் உணர்வுகள் எழுச்சியடையவும் நீங்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறீர்கள். எப்படியோ, உங்களை கைவிட்டதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். காயப்பட்ட உங்களுடைய படத்தையும் உங்களுடைய நேர்காணலையும் முகநூலில் பதிவிட நாங்கள் முயற்சித்தோம். ஆனால், ‘கட்டுப்பாட்டு விதிகள்’ அதைத் தொடர்ந்து நீக்கிக் கொண்டே இருந்தன.
செல்பேசியில் இணைய பயன்பாட்டையும் செய்தித்தாள்களையும் அரசு தடை செய்துவிட்டது. தொடர் கலவரங்களால் நாங்கள் வெளியே செல்ல முடியவில்லை. சர்வதேச இதழலாளர்கள் எங்களை வந்தடையும் வரை நாங்கள் காத்திருந்தோம். இந்தியாவுக்கு கிடைத்திருக்கலாம், ஆனால், காஷ்மீர் டிஜிட்டல் யுகத்தில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. விரைவில் நலம் பெற்று வாருங்கள், சகோதரா..
இப்படிக்கு
காஷ்மீரி இளைஞர்கள்.
இதுபோன்று, பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், இந்திய பிரதமர் நரேந்திரமோடி என பலரும் பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்பட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது.