சென்னை குரோம்பேட்டையில் வசிப்பவர் வசந்த்பால். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, தி.நகர் ஏ.ஜி.எஸ்.திரையரங்கில் ‘கபாலி’ பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுநீர் கழிப்பதற்காக கத்திப்பாரா அருகே ஒதுங்கியபோது, ஒரு பெண்ணின் முனகல் சப்தம் கேட்டது. என்னவென்று பார்த்தபோது மூன்று வடமாநில இளைஞர்கள் ஓர் இளம்பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றுக் கொண்டிருந்தனர்.
‘நெருப்புடா’ என்று முழங்கியவாறே, அந்த இளைஞர்களிடம் ஃபைட் செய்திருக்கிறார் வசந்த். இந்த சண்டையில் ஒருவன் அவரது கழுத்தை கயிறு போட்டு இறுக்கி காயமும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவழியாக அவர்களை அடித்துத் துரத்தி, அந்தப் பெண்ணைக் காப்பாற்றி ஆட்டோவில் ஏற்றி அனுப்பியிருக்கிறார் வசந்த்வேல்.
இந்த சம்பவத்தை அவர் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டிருந்தார். வழக்கம்போல “சாட்டையடிப் பதிவு சகோதரா” கமெண்டுகளும், ஆயிரக்கணக்கில் லைக்குகளும், நூற்றுக்கணக்கில் ஷேருகளுமாக ஒரே நாளில் கபாலியாகி விட்டார் வசந்த்வேல்.
அவருடைய ஸ்டேட்டஸை கண்ட பரங்கிமலை போலிஸார், தாமாகவே வழக்கு பதிந்து, வசந்த்வேலை அழைத்து சம்பவத்தை விசாரித்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தை காட்டச் சொல்லி வசந்தேவேலை கத்திப்பாராவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வசந்தால், எங்கே சம்பவம் நடந்தது என்பதை சரியாக சொல்ல முடியவில்லை. அவர் சொன்ன இடங்களில் சம்பவம் நடந்ததற்கு சாத்தியக்கூறே இல்லை. போலிஸார் மேலும் விசாரித்ததில், அன்றைய இரவு தான் முழுபோதையில் இருந்ததாகவும், இதனால் சரியானபடி எதையும் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே அப்படியொரு சம்பவம் நடந்ததா என்று போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நல்லவேளையாக இதுவரை அப்பாவி வடமாநில இளைஞர்கள் யாரும் அவசரம் அவசரமாக கைது செய்யப்படவில்லை.
யுவகிருஷ்ணா, ஊடகவியலாளர்.