நான் தனிமையில் இருக்கும்போதெல்லாம் என் அருகே அமர்ந்திருக்கும் எனக்குப் பிரியமானவர்களிடம் பேசுவது பழக்கம். அவர்கள் என் கண்களுக்கு மட்டுமே தெரிவார்கள். சக மனிதர்கள் பார்வையில் இது மனநோய் போல் தெரியலாம். எனக்கு இது வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. அப்படித்தான் உங்களோடு பேசினேன். அதன் வரிவடிவம்தான் இந்தக் கடிதம் என்று கருதிக்கொள்ளலாம்.
#அட்டக்கத்தி எனும் அற்புத சினிமாவைக் கண்டு ரசித்த நாள் முதல் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்… ரவுடிகளையும், சமூகப் பின்னணித் திமிர் பிடித்தவர்களையும் ப்ரொட்டாகனிஸ்டுகளாகக் காட்டும் தமிழ் சினிமாவில், இயல்பான மனிதர்களை நாடிய மிகச் சில படைப்பாளிகளுள் நீங்களும் ஒருவர் என்பதால். ஒரு நாட்டின் – மாநிலத்தின் – வசிப்பிடத்தின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள சினிமாவை நாடுபவர்கள், தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கினால் அவர்களுக்கு எந்த மாதிரியான ரிசல்ட் கிடைக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால், உங்களின் அட்டக்கத்தி, #மெட்ராஸ் இரண்டுமே மக்களின் வாழ்வியலை சினிமா எனும் கலையின் வழியாக துருத்தாமல் கச்சிதமாக பதிவு செய்திருந்தது. இவற்றை விட இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பல துறைகளிலும் போராடி முன்னுக்கு வந்தவர்களில் பலரும் தங்கள் அடையாளத்தை மறைத்து போலி முகத்துடன் போலி கவுரவம் நாடும் நிலையில், தன்னைப் போல் போராடி வருபவர்களை கரை சேர்க்கத் துடிக்கும் பலரில் நீங்களும் ஒருவர் என்பதை அறிவேன்.
அறிவுசார் – படைப்பாற்றல் துறைகளில் இயங்கும் பெரும்பாலானோரும் தங்களை பொது மனிதராக போலியாகக் காட்டிக்கொண்டு வர்த்தக நோக்கத்தில் இயங்குவதைக் கண்கூடாகப் பார்த்திருக்கேன். அதேபோல், ‘கம்ஃபர்ட்’ வாழ்க்கையில் தங்களைப் பொருத்திக் கொண்டு பொத்திக்கொண்டு வாழ்பவர்களையும் அறிவேன். ஏதோ ஒரு வகையில் இவர்களில் நானும் ஒருவன்தான் என்பதைச் சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கம் துளியும் இல்லை. ஏனென்றால், நான் வாழ்வது இதைவிட வெட்கக் கேடான சமூகத்தில். ஆனால், நீங்கள் அப்படி இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கையையும், அவர்களின் விடியலுக்கான வழிகளையும் சினிமா எனும் கலை வழியே தொடர்ச்சியாகத் தேடி வருகிறீர்கள்.
புகழும் பணமும் நாடி வரும் வேளையிலும், மக்கள் மீதான அக்கறை மட்டும் துளியும் குறையவில்லை என்பதை #கபாலி பார்த்த பின் உணர்ந்தேன். ரஜினி படத்துக்காக நீங்கள் சமரசம் ஏதும் செய்யவில்லை. உங்களுக்காக ரஜினி படம் சமரசம் செய்துகொண்டது என்பதுதான் உண்மை.
ஒரு சிறு இடைவெளியாகக் கருதி, தீபாவளி போனஸ் போல நினைத்து, #கபாலி டீஸர் போல் ரஜினிக்காக ரஜினி படம் மட்டுமே எடுத்து இருந்தால் உங்கள் மீதான மதிப்பு வெகுவாக குறைந்திருக்கும். அப்படிச் செய்யாததில் மிக்க மகிழ்ச்சி.
மெட்ராஸ் வெளிவரும் முன்பு வரை அந்தப் படத்தில் பேசிய அரசியல் குறித்து நீங்கள் (எனக்குத் தெரிந்து) ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்தப் படம் வெளியாகி, வணிக வெற்றி உறுதியாகிவிட்ட பிறகு, அதில் நீங்கள் முன்வைத்திருந்த அரசியலை பகிரங்கமாக பேசத் தொடங்கினீர்கள். அப்போது, உங்கள் மீது எனக்கு கொஞ்சம் வெறுப்பு வந்தது. ஆனால், அந்த அணுகுமுறை வியூகம் கூட இல்லையென்றால், இந்த கேங்க்ஸ்டர் வாழ் கோடம்பாக்கத்தில் குப்பைக் கொட்டுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். தங்கள் சமூகத்தின் வறட்டு கவுரங்களைப் பறைசாற்றவும் வெற்றுக் கெத்து காட்டவும் சினிமா எனும் அற்புத ஊடகத்தை அணுகும் சினிமாக்காரர்கள் மத்தியில் உங்களது செயல்பாடுகள் கட்டியணைத்து நெற்றி முத்தமிடத்தக்கது.
சினிமா எனும் ஃபார்மட் ரீதியில் நான் பார்க்கும்போது, நான் கழுவியூற்றத்தக்க படைப்பு ‘கபாலி’. அதில், இடம்பெற்ற உறவுத் தேடல் பயணம் இடம்பெறும் அந்த 30 நிமிடங்கள் மட்டுமே எனக்கு முழு நிறைவு தந்தன. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. காட்சி ரீதியிலாக வைக்க முடியாமல் போனாலும், வசனம் மூலமாக நுழைத்த அரசியலும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், மெட்ராஸ் போல் இயல்பாக அல்லாது துருத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடிந்தது.
குறிப்பாக, ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரை நடிகராக பார்க்கும் வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தித் தந்தது, வேறு வழியின்றி வெற்றுக் கொண்டாட்டங்களுக்காக தலைவரை அனிச்சையாக ஆராதிக்கும் என்னைப் போன்றோருக்கு பேராறுதல்.
திடீர் வாய்ப்பு. வணிக இலக்கும் மிக முக்கியம். திரைக்கதையை செதுக்க போதிய நேரமில்லை. ஆனாலும், குறைந்த நேரத்தில் கள ஆய்வுகள் செய்து தரத்துக்காக நீங்கள் போராடியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மலேசிய கதைக் களம், கேங்ஸ்டர் உலகம், சிறுபான்மையினரின் நிலை, வாழ்க்கை முறையை குறுகிய காலத்தில் கச்சிதமாக பதிவு செய்ய முன்றிருக்கிறீர்கள். இதற்கான தெளிவை அறிய இந்த நோட் உதவும் > Detailed Explanation of Kabali Movie by VISITHRA MANIKAM https://goo.gl/M5fGqG
ஆனாலும், ‘ரஜினி படமாகவும் இருக்க வேண்டும்; ரஞ்சித் படமாகவும் இருக்க வேண்டும்’ என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஏற்பட்ட பதற்றத்தால் முழு நிறைவு தர முடியாத நிலை உண்டானதை மறுக்கவே முடியாது.
இது எனக்குக் கவலையை ஏற்படுத்தவில்லை. தனிப்பட்ட முறையில், என்னிடம் மிக நெருங்க நண்பர்கள் ‘கபாலி எப்படி இருக்கு?’ என்று கேட்டால், முழு உரிமையுடன் ‘ரொம்பக் கேவலமா இருக்கு’ என்று சொல்கிறேன். ஆனால், பொதுவெளியில் என்னிடம் எவரேனும் கபாலி குறித்து கேட்கும்போது, #மகிழ்ச்சிஎன்று சொல்கிறேன். ஏன் மகிழ்ச்சி என்பதற்கான காரணங்களை மேலே உள்ள பாராக்களில் சொல்லியிருக்கிறேன். இதோ இனிவரும் பாராக்களிலும் சொல்வேன்.
ரஞ்சித்தின் ‘கபாலி’ வெற்றிதான் என்பதை என்னால் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும். ரஜினி ஒரு பேரிழப்புப் படத்தைக் கொடுத்திருந்தார். அந்தச் சூழலில், ஒரு நிமிட டீஸரைக் காட்டி, சூப்பர் ஸ்டார் ரஜினி மீது மீண்டும் தாறுமாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது உங்களது பங்களிப்பு. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரஜினி படம் உலக அளவில் பேசப்பட்டதற்கு காரணம், இது ரஜினி படம் என்பது மட்டுமல்ல; ரஞ்சித் இயக்கும் ரஜினி படம் என்பதால்தான். அதுவே நான் கொண்டாடத்தக்க வெற்றிதான்.
படம் வெளியாகிவிட்டது. கலவையான விமர்சனங்கள் வருகின்றன. வசூல் மட்டும் குறையவே இல்லை. வர்த்தக ரீதியில் மகத்தான வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. சில தரப்பினருக்கு உள்ளுக்குள் மட்டுமே மகிழ்ச்சி.
இந்தப் படம் குறித்து ஒரே மாதிரியான விமர்சனங்கள் வந்திருந்தால் என்னைக் கவலைத் தொற்றிக்கொண்டிருக்கும். படம் நல்லா இருக்கு… நல்லா இல்லை என்கிற ரீதியில் பேசி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், தொடர்ச்சியாக சில நாட்கள் பேசுபொருளாக கபாலியும் ரஞ்சித்தும் நீடிப்பது, பல வகைகளில் விவாதங்கள் எழுவது அனைத்துக்குமே இந்தக் கலவையான விமர்சனங்கள் வழிவகுக்கின்றன என்பதில் பெரும் திருப்தி.
எல்லாவற்றையும் தாண்டி, உள்ளூரிலும் உலக அளவிலும் தலைப்புச் செய்தியாகும் அளவுக்கான ஒரு படத்தில், நாட்டின் உச்ச நட்சத்திரம் ஒருவரை தன் சினிமாவில் ப்ரொட்டாகனிஸ்டாக வடிவமைக்கும்போது, அவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டியது ஒன்று மட்டுமே நான் கொண்டாடி மகிழப் போதுமானது.
வேறு வழியின்றி நகர்ப்புறங்களில் நிலை மாறிவிட்டாலும், இந்த போகிமான் கோ கேம் காலத்திலும் கூட, ஒடுக்கப்பட்டவர்கள் சந்திக்கும் இழிநிலை என்பது கிராமங்களில் இன்னமும் அப்படித்தான் இருக்கிறது. ஒரே பெயரிலான கிராமத்துக்கு இரண்டு கிராமங்கள். எவ்வளவுதான் கோடிகள் கொட்டினாலும், ஒரு தரப்பினரின் வாழிடங்களில் ஒரு துண்டு நிலம் கூட இன்னொரு தரப்பினரால் வாங்க முடியாது. மக்களின் அவலநிலைக்கு இதைவிட வேறு ஆழமானதும் எளிதுமான சான்று தெரியவில்லை. இப்போது முந்தைய பாராவை மீண்டும் படித்துக்கொள்ளலாம்.
உங்கள் படைப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை மட்டும் குறிப்பால் சொல்லாமல், அவர்கள் இன்னமும் ஒடுங்கிக் கிடப்பதற்கு அவர்களுக்குள் லாபநோக்கு அரசியல் பார்ப்பவர்களையும் குத்திக் கிழிக்கிறீர்கள். அத்துடன், மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் உண்மை மனிதர்களையும் குமுதவல்லிகள் மூலமாக ஆராதிக்கவும் நீங்கள் தவறவில்லை. உங்கள் சுயவிமர்சனத்திலேயே சமூக அக்கறை வெகுவாக விரவிக் கிடப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எப்போதும் உங்களை விட்டுப் பிரியாத எளிமையும் தெளிவும் உண்மையும் நேர்மையும் இனியும் மக்களுக்கான படைப்புகளை நோக்கி உங்களைப் பயணிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு சினிமா ஆர்வலனாக, உங்களை பத்து பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு அன்பு கலந்த சுவைமிகு அமுத உணவு சமைத்துப் பரிமாறும் அம்மாவாகப் பார்க்கிறேன். காலத்தின் கட்டாயத்தாலும், தவிரக்கக் கூடாத வாய்ப்பினாலும் ஒரு திடீர் திருமண நிகழ்ச்சியில் ஓராயிரம் பேருக்கு உடனடியாக சமைத்துப் போட வேண்டிய நிலைக்கு ஆளானீர்கள். எல்லாம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. உங்கள் குடும்ப உறுப்பினர்களாகிய நாங்கள் ஏக்கத்துடனுடம் பசியுடனும் மகிழ்ச்சி மாறாது காத்திருக்கிறோம். விரைந்து வாருங்கள்.
அன்புடன்,
கீட்சவன்