எங்கே பார்த்தாலும் ‘கபாலி’, யார பார்த்தாலும் ‘கபாலி’.. யார்ரா அந்த ‘கபாலி’ ? ‘கபாலி’ – பெயர் காரணம் ‘கபாலி’ பெயர் காரணத்தை பேரா.செல்வக்குமார் அவர்கள் தான் ஒரு முறை என்னிடம் சொன்னார். புத்தர் உணவு வாங்குவதற்காக பயன்படுத்திய திருஓட்டின் பெயர் தான் ‘கபாலம்’. அதை தான் பூர்வீக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘கபாலி’ என்று பெயர் சூட்டினர் என்றார். பௌத்தத்தின் மீதான வெறுப்பு தான் தீண்டாமைக்கு காரணம் என்பார் அம்பேத்கர். இன்று கபாலி பெயர் சாலையோரத்தில் குடிசையில் லுங்கி கட்டிருக்கும் தீண்டாமை கொடுமையை அனுபவித்த மக்களுக்கு இயல்பாய் உள்ளதை புரிந்து கொள்ளலாம். மயிலாப்பூரில் கூட கபாலீஸ்வரன் கோவில் உள்ளதே! ஆனால் மைலாப்பூரில் கபாலீஸ்வரனை வணங்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் ‘கபாலி’ என்று தன் குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்?
ஒரு பெயருக்கு இவ்வளவு அக்கப் போரா? சபாஷ் நாயுடு என்று சாதிப்பெயரை வைத்து படம் வரும் இச்சூழலில் தான் எளிய மக்களின் பெயரை சூட்டி ஒரு படம் வருகிறது. அது உண்மையில் அக்கப்போர் இல்லை. அதுவும் அரசியல்! ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்? எப்போதுமே ஒரு கருத்தையும், நீதியையும் மக்களுக்கு படம் மூலம் போதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம். யதார்த்தத்தில் உள்ளதை நேர்மையாக பதிவு செய்து பிரதிபலிப்பதே உண்மையான திரைப்படம். கிராமத்து கதை என்றால், ஆண்டையர்களின் வள்ளல் தன்மை என்று உண்மைக்கு மாறாக சொல்வதாகவோ, அல்லது அவர்கள் நிகழ்த்தும் தீண்டாமை என்னும் உண்மையை மறைத்து கதை பேசுவதாகவோ இருந்தால் அது அயோக்கியதனமானது. என்ன யதார்த்தத்தில் இருக்கிறதோ அதை பிரதிபலிப்பதே உண்மையான படம். ஆண்டைகளின் அராஜகத்தையும், உழைப்பாளரின் உழைப்பு சுரண்டலையும் பேசினால் தான் அது கலை நேர்மை!
என்னய்யா இது? காமெடி, ஆக்சன் போன்ற படத்திற்கு கூட இது தான் விதியா? ஆம், அது தான் விதி. அந்த கட்டகத்திலிருந்தே தான் நகைச்சுவை, ஆக்சன், குடும்பப்படங்கள் யதார்த்தோடு வெளிப்படவேண்டும். தொழிலாளர்களை முன்வைத்து ஆண்டைகள் அவர்களை காமெடி செய்து காமெடி படமாக சித்தரித்தால் அது வக்கிரம். நகைச்சுவைப்படம் கூட யதார்த்ததிலிருந்தே முளைக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணங்கள்: சார்லின் சாப்ளின் படங்கள். என். எஸ்.கே படங்கள்.. சில வடிவேல் படங்கள். கபாலி அப்படி யதார்த்தத்தில் நிலவும் சமூக சூழலை பேசுகிறதா என்றால் ஆம்., நிச்சயமாக பேசுகிறது.
இங்குள்ளவர்கள் கபாலி படத்தை பற்றி எதிர்மறையாக பல விமர்சனங்களை முன்வைத்தாலும் மலேசிய தமிழர்கள் மிகப்பெரும்பாலோனோர் படத்தை பாராட்டுவதை நாம் அவதானிக்கலாம். காரணம் அவர்களுக்கு தான் தெரியும் இந்தப் படம் மலேசிய தமிழரின் பிரச்சனையை பிரதிபலித்ததா இல்லையா என்று! நமக்கு அங்குள்ள சூழல் தெரியாததால், நம்மை விட்டு படம் அன்னியமாக பயணிப்பதாக தெரியலாம். ஆனால் படம் பற்றி மலேசிய மக்களின் கருத்து என்ன? உண்மையில் மலேசிய மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பத்தாக அதுவும் ஒருபக்கம் மறைத்து இன்னொரு பக்கம் மட்டும் பேசுவதாய் இல்லாமல், தமிழர் பிரச்சனையையும் அதே நேரத்தில் தமிழ் இளைஞர்கள் சீரழியும் பண்பாட்டு சீரழிவையும் குறிப்பிடும் படமாக ‘கபாலி’ இருக்கிறது. இயக்குனர் துணிச்சல் வசனங்கள் மிக அருமை! ரசிக்க வேண்டிய கவிதைகளாய் வசனங்கள். படத்தில் இடம் பெற்ற வசனங்களை பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம் என்பதால் அந்த வசனங்களை தவிர்க்கிறேன். இப்படிப்பட்ட வசனங்களை வணீக ரீதியான படத்தில் வைப்பதற்கு கூட தயங்கிய கூட்டத்திற்கு நடுவில் வணிக லாபத்திற்காகவே இருந்தாலும் கூட அதை படத்தில் இடம் பெற செய்த இயக்குனர். பா.ரஞ்சித்தின் தைரியம் மிகப்பெரியது. பாராட்டுதற்குரியது.
அதுவும் ஆண்டவன், ஆன்மீகம், உள்ளுணர்வு, வெளியுணர்வு, ஆணாதிக்க வசனங்களை பேசி பேசியே நடித்து கைத்தட்டல் வாங்கிய ரஜினியை அதிலிருந்து விடுத்து, தனக்கான வசனங்களை அதுவும் ஆதிக்கத்துக்கெதிரான வசனங்களை பேச வைத்தத்தில், ஒரு இயக்குனரின் படைப்பின் மீதான கறார் தன்மையும் கண்டிப்பும் தெரிகிறது. ரஜினியிடம் சென்று, உங்கள் மேனரிசத்தை மாற்றி நாம் எடுக்க வேண்டும் என்று சொல்வதில் பழம் தின்று கொட்டைப்போட்ட எத்தனை இயக்குனர்களுக்கு அந்த மன தைரியம் இருக்கிறது. ஓப்பனிங் காட்சியில் பாட்சா மாதிரி வேகமாக நடக்கும் காட்சிகள் இல்லாமல், எஸ்.பி.பி பாடி ஓப்பனிங் பாடல் இல்லாமல், கையை சுழட்டினால் சத்தம் வருவது போல் இல்லாமல், அப்பப்ப பன்ச் வசனங்களை பேசி நம்மை இம்சிக்காமல், இப்படியெல்லாம் இருந்தால் தான் ரஜினி படம் என்ற இலக்கணத்தை மாற்றி தனக்கான கதைக்கு எது வேண்டுமோ, அதை மட்டும் ரஜினியிடம் வேலை வாங்கிய இயக்குனரின் துணிச்சலும் திறமையும் அபாரம்!
ஓர் இயக்குனரின் அரசியல் அறிவு எப்படி இருக்கிறதோ அப்படித்தான் படைப்புகளும் இருக்கும். அப்படி தான் தனக்கான அரசியலை கருத்தினூடே இப்படத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். பாபாசாகேப் சொன்ன ‘கற்பி’ என்ற ஒன்றைத்தான் முந்தைய மெட்ராஸ் படத்திலும் இப்படத்திலும் மையமாக சொல்லி இருப்பதை காணலாம். மற்ற இயக்குனர் போல், தன் சமூக உணர்வை வெளிப்படுத்த, கதாநாயகன் அரிவாளை தூக்கி, மீசை முறுக்கி வீர வசனங்களை பேசி வீரத்தை மட்டுமே..வீரம் மட்டும் தான் எங்கள் மரபு என்று உசுபேத்தி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டும், சக தமிழனை ஒடுக்குவதற்கு பயன்படும் ‘வீரம்’ பற்றி பாடத்தை இயக்குனர் போதிக்கவில்லை. மாறாக, நாகரீகத்தோடு தன்னை வெளிப்படுத்தி கண்ணியமான வாழ்வை மற்றவர்களுடன் சமத்துவமாக பகிர்ந்து வாழ தன் மக்களுக்கு ‘கல்வி’ விழிப்புணர்வு அவசியம் பற்றி பேசுகிறார் இயக்குனர்.
‘கபாலி’ எப்படி இருந்தால் போற்றப்பட்டிருக்கும்? ‘கபாலி’ தமிழர் பிரச்சனையை பேசக்கூடிய படம். அதுவும் நாடு கடந்து வாழும் மலேசிய தமிழரின் பிரச்சனையை பேசும் படம். இருந்தாலும், ஏன் சிலரால் கபாலியை ஏற்க முடியவில்லை. கபாலி எப்படி இருந்தால் இன்னும் போற்றப்பட்டிருக்கும்? ‘7ம் அறிவு’ படம் போல், தமிழர் வாழ்வில் எதற்கு சாணி தெளிப்பு வந்தது, கோலம் வந்தது, கோமியம் வந்தது, சாங்கிய சடங்குகள் வந்தது என்ற இந்துத்வத்திற்கு ஆதரவான பண்பாட்டை பேசி இருந்தால், வெளி நாட்டில் மொழி உருவாவதற்கு முன்னமே எங்கள் தமிழில் இலக்கியங்கள் உருவானது தெரியுமா என்று மொழியின் பெருமையை பேசி இருந்தால், ஆயிரத்தில் ஒருவன் படம் போல், உலகம் முழுதும் ஆண்டது எங்கள் சோழ மன்னர்கள், எங்கள் மன்னர் வென்ற போர்கள் இத்தனை, அவர் வைத்திருந்த யானைகள் இத்தனை, படைகள் இத்தனை இத்தனை என்று மன்னரின் பெருமைகளை பட்டியிலிட்டிருந்தால், இன்று ‘கபாலி’ எல்லா தமிழர்களாலும் பாராட்டின் உச்சத்தில் பேசப்பட்டிருக்கும்.
ஆனால் இப்படம் அதையெல்லாம் பேசவில்லை. மாறாக உழைக்கும் தமிழர் பற்றி பேசுகிறது. அதுவும் திண்டிவனத்தில் கூலி வேலை செய்து வெள்ளையரால் மலேசியாவிற்கு குடியேறிய உழைக்கும் மக்களை பற்றி பேசுகிறது. தமிழ் படங்களில் எல்லா கதாநாயகர்களும் மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என்றே வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ‘திண்டிவன’த்தை பூர்வீகமாகக்கொண்ட ஒரு தொழிலாளி கதாப்பாத்திரம் முதன் முதலாக வந்திருக்கிறது. எங்கள் உழைப்பு, ரத்தம், வியர்வையால் தான் இந்த மலேசியா உருவானது என்று தன் உழைப்பின் பெருமையை பேசுகிறது. அந்த உழைப்பை உறிஞ்சுபவர்களுக்கு எதிராக சமத்துவம் பேசுகிறது. பண்பாட்டில் தமிழ் இளைஞர்கள் சீர்கெடுகின்றன என்ற சுடும் உண்மையை பேசுகிறது.
தமிழ் இளைஞர்களை சீர்படுத்த கல்வி அவசியம் என்று பேசுகிறது. அதே நிலை தான் இந்தியாவிலும். சாராயம், போதை, ரவுடித்தனம் என்று அதிகமாக இருப்பது, பள்ளியை விட்டு இடையில் நின்ற இளைஞர்கள் தான். இப்படி உழைப்பின் பெருமையையும், தமிழருக்குள்ள சாதிய எண்ணத்தையும், கல்வியின் அவசியத்தையும் சொல்லும் படம் பலருக்கு அன்னியமாகவோ வெறுப்பாகவோ தோன்றுவதில் ஆச்சரியமில்லை தான். ஒரு திரைப்படத்தில் இவ்வளவு அரசியலா? இந்த அரசியலையெல்லாம் ரஜினியோ மற்றவர்களோ பேசுவதாய் கூட தெரிய தேவையில்லை. அந்த ஒற்றை ‘கோட்’ படம் முழுக்க நம்முடனே பேசுகிறது. அந்த கோட்டின் மொழி ‘உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன, ஒடுக்கப்பட்ட உள்ளக்குமுறலை’ அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்! உங்களுக்கு அந்த மொழி புரியவில்லையென்பதில் வியப்பேதும் இல்லை! கபாலி – மலேசிய தமிழ் உழைப்பாளர்களில் ஒருவர்!
வேந்தன். இல, சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.
ரஞ்சித் அவர்கள் இப்படத்தின் மூலம்
தமிழ்சமூகமே சாதிய சமூகம் தான் என்று உண்மையை கூறி இருப்பது
துணிச்சல் உள்ள இயக்குநர்!!
LikeLike