
“கிவின்டின் டராண்டினோ தமிழில் தொழில்நுட்பம் சார்ந்து மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிமொழியாளர். ஆனால் ஜாங்கோ அன்செயின்ட் (2013), இன்க்ளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் (2009) இரண்டின் காட்சிவழி வழக்காறு, அரசியல் நடத்தையியல் இரண்டையும் தமிழின் திரைக்கதைக்காரர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். அதன் வன்முறை, கையை வெட்டுதல், காலை ஒடித்தல் எல்லாம் களிப்புக்கானவையாக இங்கு மாறும். ஆனால் அதில் உள்ள அரசியல்- அச்சுறுத்தல் இங்கு கவனமாகத் தவிர்க்கப்படும்.” என “தமிழில் பேசினாலும் தமிழ் பற்றிப் பேசாத படங்கள்” என்ற தலைப்புடன் நான் பகிர்ந்துகொண்ட பதிவில் (9-06-2016) குறிப்பிட்டிருந்தேன்.
இன்று அந்தக் குறை ஒரு பகுதி தீர்ந்தது. ஆம், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி படம் பார்த்தோம்.
ஜாங்கோ அன்செயின்ட் வகை படங்களை உருவாவக்குவதற்கென ஒரு மனநிலை உண்டு, அது பழிவாங்கப்பட்ட மக்கள், காயம் பட்ட மனிதர்கள் பற்றிய நினைவில் உருவாகும் வன்மம், அதன் அழுத்தத்தை உள்வயமாக உணரும் நிலை. மிகத்தெளிவான அழுத்த நீக்கம் செய்யும் திரைப்படங்கள்தான் அவை.
அந்த வகைப்படங்களைப் பார்க்கும் போது உருவாகும் மனநிலை, பார்ப்பதற்கான மனநிலை இரண்டும் முற்றிலும் வேறானது. அதில் உள்ள வரலாற்று வலிகளை, அடையாளத் துயரங்களை ஒப்புக்கொள்ளுதல், மற்றும் அதில் நிகழும் தலைகிழாக்கத்தை ஒப்புக்கொள்ளுதல். இது ஒரு வலிநீக்கச் செயல்பாடு, அதனை வலி உள்ள மனங்கள் அதிகம் உணரும்.
காய்ச்சல், தலைவலி என படிக்க எழுத முடியாத அளவு நோயுறும் பொழுதுகளில் நான் எதையும் சிந்திக்காமல் “ஜாங்கோ அன்செயின்ட்” படத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இது பல முறை நிகழ்ந்திருக்கிறது. மனதில் முட்டும் கருத்தியல் சிக்கல்கள், அரசியலில் உள்ள நடப்பியல் குழப்பம் என்னை இந்தப் படத்தை பலமுறை பார்க்க வைத்துள்ளது.
ஒடுக்கப்பட்டோர் அரசியல் மீதான “சாதிய வெறுப்புகள்” ஒன்று திரள்கிற இன்றைய நிலையில், சாதி ஒடுக்குதலில் வதையுறும் சமூகத்தின் உளவியல் சிக்கல்களை பொய்யான பொதுமை பேசும் பிற குழுக்களால் புரிந்துகொள்ள முடியாது. உள்ளிருந்து உணரும் கலை மனம் அதனைப் பல்வேறு மொழியமைப்பில் வெளிப்படுத்தத் தவிக்கும்.
அந்தத் தவிப்பின் வெளிப்பாடாக தமிழ்த் திரைமொழிக்குள் இருந்தபடி மாற்றுத் திரைப்படங்களை உருவாக்கியவர் பா.ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரு படங்களும் தலித் இருப்பை திரையில் படிய வைத்த படங்கள். தமிழ் அடையாளத்தின் மறைக்கப்பட்ட பெரும் பக்கத்தைக் காட்சி மொழியில் கொண்டுவந்த அந்தப் படங்களை முதல் முறை பார்த்த போது இன்னும் வெளிப்படையான அரசியல் வந்திருக்க வேண்டும் என்று சொல்லிக் குறைத்தே மதிப்பிட்டேன். ஆனால் மறுமுறை பார்த்தபோது மிக முக்கியமான படங்கள் அவை என்பது உறைத்தது. மெட்ராஸ் திரைப்படத்தையும் நான் சோர்வான நேரங்களில் பலமுறை பார்க்க நேர்ந்தது. சற்றே குழந்தைத் தனத்துடன் ஆறுதல் தேடும் அரசியல் மனதிற்கு அந்தப்படம் உகந்ததாக இருந்தது.
இரண்டு மூன்று இடைநிலைச் சாதிகளின் சாதி வெறியையும் ஆணவ அறிவீனத்தையும் கொண்டாடித்திரியும் தமிழ்த் திரையிலிருந்து வெளியேறும் முயற்சிகள் அவை. மனதில் படியும் மனிதர்களைக் கொண்ட காட்சி உலகம்.
“கபாலி” ஒரு தலைகீழாக்கம், சமூகத்தை மாற்ற நினைப்பவர்கள் மெதுவாக மாற்றட்டும் தமிழ் திரைப்படத்திற்குள் உள்ள சாதிச் சட்டகத்தை இந்தப் படம் மாற்றியிருக்கிறது.
தமிழக மக்கள் தலைவணங்கி கொண்டாடும் ஒரு நடிகரை, தான் உருவாக்க நினைத்த மாற்றுத் திரை உருவமாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
“வெள்ளை மனம்” கொண்ட பார்வையாளர்களுக்கு எதுவும் புதிது இல்லை என்று தோன்றக்கூடும். ஆனால் தமிழில் இது புதிது.
அடிமையில்லை நான் என்று சொல்லத் துடிக்கும் மனதில் பதிந்துவிடும் காட்சிப் புனைவுதான். ஆனால் மிகத்தேவையான ஒரு தாக்குதல்.
“ஜாங்கோ அன்செயின்ட்” உளவியல் தலித் கலைஞர்களுக்கு இருந்தே ஆகவேண்டும். அது தயக்கமின்றி திமிருடன் வெளிப்பட்டே ஆகவேண்டும். இது என்னைப் பொருத்தவரை ரஞ்சித் படம்தான். நடிகருக்காக பார்ப்பவர்கள் அதனை அப்படியே கொண்டாடட்டும், அதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
இது வரலாற்றை மாற்றும் திரைப்படம் அல்ல, வரலாறு என்று படிந்துவிட்ட ஒன்றை மாற்றியிருக்கிறது.
சாதி உளவியல், சாதி மறைக்கும் உளவியல் இரண்டும் இந்தப் படம் பற்றிக் “கண்டதை” பேசும், ஆனால் காணாததைக் காட்சிக்குள் கொண்டு வந்ததைப் பற்றித்தான் முதலில் நாம் பேச வேண்டும்.
“நாங்க கொஞ்சம் நல்லா வாழறது பிடிக்கலன்னா சாவுடா” என்ற வாசகத்துடன் வெடிக்கும் துப்பாக்கிகள் கற்பனையானவைதான், ஆனால் சாதிய மனதிற்குள் மிக ஆழமாகத் துளைத்துச் செல்லக்கூடியது.
கபாலி தலைகீழாக்க எடுத்துரைப்பின் ஒரு தமிழ் வடிவம். இது ஒரு குறியியல் சிக்கிச்சை. (Semiotic Therapy) எங்கள் இளைஞர்களுக்கு இது வேண்டும், இன்னும் பல வேண்டும்.
(குஜராத்தில் நான்கு இளைஞர்களைக் கட்டி வைத்து துடிக்கத்துடிக்க அடித்து போது அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறிக்கொண்டு நின்றனர். அவர்கள் கையில் மாடு உறிக்கும் கத்திகள் இருந்திருக்கும், அவை என்ன ஆனது? சாவு மனதில்தான் தொடங்குகிறது. இதற்கான சிகிச்சையை மொழியில் இருந்துதான் தொடங்கவேண்டும்.)