நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கருப்பு நிறத்துக்காக அறியப்பட்டவர். அண்மையில் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, கருப்பான நடிகர் இந்தளவுக்கு எப்படி ஸ்டாராக முடிந்தது என்று எழுதியிருந்தார்.
‘கபாலி’ தென்னிந்தியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் படம். தென்னிந்தியர்களின் நிறமே கருப்புதான். தலித் அரசியலை பேசும் படம் எனவும் விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு ஸ்பான்ஸர் செய்துள்ளது இமாமி ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம். நெருப்பாக உள்ள ஆண்களுக்கான க்ரீம் என விளம்பரத்தில் சொல்லப்படுகிறது.
ஆண்கள் ஃபேர்னஸ் க்ரீம் விற்பனையில் 65 சதவீதத்தைக் கொண்டுள்ள இமாமி, தென்னகத்தில் தன்னுடைய விற்பனையை அதிகரிக்கும் விதமாக ‘கபாலி’ மூலம் ரஜினியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ‘நம்ம தலைவருக்கு ஃபேர்னஸ் க்ரீம் வேண்டுமென்று சொல்ல நீங்கள் யார்? #கருப்புநெருப்புடா’ என களமிறங்கியிருக்கிறது Dark Is Beautiful என்கிற நிற எதிர்ப்பு பிரச்சாரக் குழு.
“இமாமி நிறுவனம் மக்களை புண்படுத்தும்படியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. கபாலி நிறவெறிக்கு எதிராகப் பேசுகிறது. நாம் இணைந்து அக்கறையில்லா இத்தகைய விளம்பரங்களை எதிர்ப்போம். ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்கக்கூடாது என்பதை விளம்பர கட்டுப்பாட்டு அமைப்பு கடுமையாக விதிமுறைப்படுத்த வேண்டும். நிறத்தை வைத்து ஒரு மனிதரின் குணங்களை மதிப்பிடும் விஷமத்தனமான பிரச்சாரம் தடுத்து நிறுத்தப்படவேண்டும்” என இந்தக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.