மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை அம்மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. இதற்காக பாரதிய ஜனதா தலைமை வருத்தம் தெரிவித்ததுடன், தயாசங்கரை கட்சியிலிருந்தும் நீக்கியிருப்பது சரியான நடவடிக்கையாகும்.
அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் போது கொள்கை அடிப்படையில் மட்டுமே விமர்சிக்க வேண்டும். மாயாவதியை பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் கொள்கை சார்ந்து விமர்சித்திருந்தால் அது சர்ச்சையாகியிருக்காது. அதை விடுத்து உத்தரபிரதேசத்தின் மாவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாயாவதியின் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் தயாசிங் கருத்து தெரிவித்தது தான் சர்ச்சைக்கு காரணமாகும். இது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.
மாயாவதி மிகவும் சாதாரண பின்னணியிலிருந்து அரசியலுக்கு வந்து, மிகக்கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு, முறியடித்து தான் இந்நிலைக்கு உயர்ந்துள்ளார். எனது இனிய நண்பர் கன்சிராம் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சியை தலைமையேற்று நடத்தி வருகிறார். இப்படிப்பட்டவரை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சித்தால் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அஞ்சுவார்கள். அது பெண்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும். பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் தயாசங்கர் சிங் பயன்படுத்திய இத்தகைய சொற்கள் இனி யாருடைய வாயிலிருந்தும் உதிராமல் இருப்பது தான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும்.
இது மாயாவதி மற்றும் தயாசங்கர் சிங்குடன் முடிந்து விடும் சர்ச்சை அல்ல. தமிழ்நாட்டில் கூட எதிர்க்கட்சித் தலைவர்களை பொதுக்கூட்ட மேடைகளில் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கலாச்சாரம் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களை பட்டியலிட முடியும். தமிழகத்திலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இத்தகைய அநாகரீக அரசியலுக்கு முடிவு கட்டி, கொள்கை அடிப்படையில் மட்டும் விமர்சிக்கும் நாகரீக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். இதுதொடர்பாக தங்கள் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கு அறிவுரையும், பயிற்சியும் அளிக்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.