ஓலா ஓட்டுனரை ‘பொறுக்கி” என்று திட்டினாரா விலாசினி?;அதுதான் பிரச்சனையின் மூல காரணமா: விமலாதித்த மாமல்லன் கட்டுரை…

பதிப்பாளர் விலாசினி ரமணி, அண்மையில் ஓலா ஓட்டுநர் தன்னை மிரட்டியதாக முகநூலில் பகிர்ந்துகொண்ட பதிவு, பரவலாகப் பகிரப்பட்டு, வெகுஜென ஊடகங்களிலும் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஓலா கார் ஓட்டுநர் மீது போலீஸ் நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலாசினி ரமணி, தனக்கு நேர்ந்ததை ‘மிகைப்படுத்தி’ சொல்வதாகவும் இதில் ஓலா ஓட்டுநர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்தாளர் விமாலித்த மாமல்லன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவருடைய பதிவு இங்கே…

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னுமாஜா ஹதீஸ் எண்: 2443

 

நேற்று மாலை நந்தம்பாக்கம் S4 காவல் நிலையம் சென்றிருந்தேன். விலாசினி ரமணி (விலாசினி) விவகாரத்தில் கைதாகி இருக்கும் OLA டிரைவர், புதன் கிழமையன்று பிணையில் வெளியில் வரக்கூடும். அதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் ஆவண ஆணவ ரீதியாக கிடைத்திருக்கும் ஆதாரங்களை உங்கள் முன் வைப்பது ஒரு எழுத்தாளனாக என் சமூகக் கடமை என்று நினைக்கிறேன்

 ஆவணம் -1

6 கிலோ மீட்டர் தூரத்தை ஓலா ஓட்டுனர் 8 நிமிடத்தில் கடந்திருக்கிறார். (வேகம் = தூரம் / நேரம் என்று பார்த்தால் 6 / 8 =75) சனிக்கிழமை இரவு 9:30-10:00 மணி என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் டிராபிக் நெரிசலற்ற சாலையில் 75 கிலோமீட்டர் வேகம் என்பது காருக்கு நார்மல் வேகம் என்பதை ரெகுலராகக் காரில் செல்வோர் ஒப்புக்கொள்வார்கள். எப்போதும் ஆட்டோவிலேயே போய் பழக்கப்பட்டவர்களுக்கு, ஒலா சீப்பாக ஆட்டோ ரேட்டுக்குக் கொஞ்சம் அதிக செலவில் கிடைக்கிறதே என்பதற்காகக் கார் சவாரி செய்வோருக்கு இதுவே படுபயங்கர வேகமாகத் தெரிவதும் ஆச்சரியமில்லை. ஆட்டோ செலவில் காரில் போக ஆசைப்பட்ட விலாசினி ரமணிக்கு இப்படித் தோன்றியதுதான் அந்த ஓலாக்காரரின் போதாத காலம்.

ஆவணம் – 2

கிண்டி பாலத்தில் ஏறி இறங்கியதும் வண்டியை ஓரங்கட்டச் சொல்லியிருக்கிறார் விலாசினி. வண்டியின் மீட்டர் கட் செய்யப்படுகிறது. இது பதிவாகி இருக்கிறது. விலாசினி ரமணி தம் பதிவில் பொய் சொல்வதுபோல் ஓலா ஓட்டுனர் வண்டியைத் தாமாகவே ஒரங்கட்டி நிறுத்தியிருந்தால் அவர் ஏன் மீட்டரைக் கட் செய்யப்போகிறார். பஞ்சாயத்து முடியும் வரை மீட்டர் ஓடிக்கொண்டு இருப்பது அவருக்கு லாபம்தானே. வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், வண்டியருகில் விலாசினியைக் காணவில்லை. இறங்கிப் பார்க்கிறார். நன்றாகக் கொஞ்சம் தூரம் தள்ளிச் சென்று போய் நின்றுகொண்டு கைபேசியில் ’யாருடனோ’ பேசிக்கொண்டு இருக்கிறார் விலாசினி. அவர் பேசி முடிக்கட்டும் என்று இடையூறு செய்யாமல், தமது ஒலா கார் அருகிலேயே நின்றுகொண்டு இருக்கிறார்.

 

நேரில் பார்த்த சாட்சியம் – 1

ஆட்டோ வருகிறது. விலாசினி கை காட்டி நிறுத்துகிறார். விலாசினி அருகில் வந்து, அதுவரை சவாரி செய்ததற்கான பணம் 127 ரூபாவைக் கேட்கிறார். அதற்கு, M.A. English Liturature படித்தவரான அவரைப் பார்த்து,  பொறுக்கி என்கிறார் இலக்கியப் புத்தகங்களின் பதிப்பாளரான விலாசினி ரமணி அவர்கள். இதற்குக் கழுத்தை அறுத்துடுவேன் என்கிறார் அவர்.

 இவை அனைத்தையும் சொல்கிறார் அந்த ஆட்டோக்காரர். 

 எப்போது ?

 விலாசினி ரமணியை வீட்டில் கொண்டுபோய்ப் பாதுகாப்பாய் விட்டுவிட்டு திரும்பி வருகையில் கூடப்போன போலீஸ்கார் என்ன நடந்தது என ஆட்டோக்காரரை விசாரிக்கையில். 

இப்போது புரிகிறதா, சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சியமான ஆட்டோ டிரைவரை ஏன் போலீசிடம் விசாரித்துப் பார்க்கச் சொல்லவில்லை விலாசினி ரமணி என்கிற அப்பாவி அபலையான உத்தமசிகாமனி என்று.

அதுமட்டுமில்லாது தாம்தான் முதலில் அந்தக் கார் டிரைவரைப் பொறுக்கி எனச் சொல்லி அவனைக் கழுத்தை அறுத்துடுவேன் எனச் சொல்லத் தூண்டியது என்கிற உண்மையைச் சொன்னால் எங்கே தன் ஆகாத்தியப் பசப்பல் எடுபடாதோ என்கிற பதற்றத்திலேயே  அதை மறைத்துவிட்டார். தூ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

தாம் அந்த ஓலா காரோட்டியைப் பொறுக்கி என்று சொன்னதை, தம் பேஸ்புக் பதிவு உட்பட பத்திரிகை நண்பர்கள், மீடியா என எங்குமே பதிவு செய்யாமல் சாதுரியமாய்த் தவிர்த்துவிட்டார் விலாசினி. வெள்ளையா இருக்கறவோ பொய் சொல்ல மாட்டா என அவரது கன்னங்கரேல் நண்ப நண்பிகள் பத்திரிகையுலக பரமாத்மாக்கள் உட்பட எவரும், கழுத்தை அறுத்துடுவேன் என அவன் சொல்லும் அளவுக்கு நீ என்ன சொன்னே என எவருமே கேட்கவில்லை. தூத்தெறி தெரு நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.

கழுத்தை அறுத்துடுவேன் என்று சொல்லவில்லை என் குடும்பமே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கவேண்டியதுதான் என்றுதான் சொன்னேன் என்று போலீசிடம் பொய் சொல்லியிருக்கிறார் ஓலா வண்டியோட்டி.

தம்மால் இவ்வளவுதான் முடியும் என்பதால் 3600 ரூபாய் வாடகையில் எங்கோ முடிச்சூரில் வசிக்கும், தமது வியர்வையான 127 ரூபாயையும் கொடுக்காமல் அடாவடித்தனம் செய்யும் ஒரு பொறுக்கிப் பெண்மணி, தன்னை மோசம் செய்ததோடு அல்லாதுத் தன்னைப் பொறுக்கி என்று வேறு திட்டுவதா என்கிற கோபத்தில், தாம் சொல்கிற வார்த்தையின் விபரீதம் உணராது, கழுத்தை அறுத்துடுவேன் என்று சொன்னதும் அப்படித் தான் சொல்லிவிட்டது எவ்வளவு பெரிய விபரீதாய்த் தனக்கு எதிராக ஆகிவிடும் என்பதை உணர்ந்ததும், அதற்கு சாட்சியமாய் ஆட்டோ டிரைவர் இருக்கிறார் என்பதை மறந்து பொய் சொல்வதும் இயல்புதானே.

இதைத் தவறல்ல என்று எந்த மடையனும் சொல்ல மாட்டான். அதே நேரம் இதைத் தம் கழுத்தை அறுக்க கையில் ஆயுதத்தோடு நெருங்கினான் என்பதைபோல் ஃபேஸ்புக்கில் பதிவு போட்ட விலாசினியின் சதிராட்டம் அயோக்கியத்தனமானது இல்லையா. அதைத் தீர விசாரிக்காத பத்திரிகைப் பன்னாடை நண்பர்கள் ஊதிப் பெருக்கி அச்சிட்டு ஒளிபரப்பியது அக்கிரமம் இல்லையா.

 

ஆவணம் – 3 

 

ஆட்டோவின் பின்னாலேயே அந்த ஒலா தொடர்ந்து வந்ததைப் பார்த்து விலாசினி பயந்தது பேரனாய்ட் என்றால் அதைப் படித்து இணையம் பதறியது எந்த நாய்டு என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

இந்த சம்பவம் நடந்த உடனேயே ஒலா காரோட்டிக்கு சவாரி கிடைத்து விடுகிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் விலாசினி இறங்கியதும் ஓலா மீட்டர் குளோஸ் செய்யப்படுகிறது. வெளியில் வந்து ஓட்டுன இளைஞர் நிற்கையில், விலாசினி கார்த்திக்குடன் பேசி முடித்ததும் உடனேயே அடுத்த சவாரி ஓலாவுக்குக் கிடைத்துவிடுகிறது.

ஆனால் விலாசினியோ ஆட்டோ வர பத்துப் பதினைந்து நிமிடம் ஆனது என்று புளுகுகிறார். அயோக்கியர்கள் ஆயிரம் கெடுதல் செய்தாலும் ஆண்டவன் இருக்கிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த அப்பாவி இளைஞனுக்கு உடனே சவாரி கொடுத்து ஆதாரத்தை உருவாகிக்கொடுக்கிறான் ஆண்டவன்.

//பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான். நானும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இறங்கிவிட்டு வேறு வாகனத்திற்காகக் காத்திருந்தேன்.

இதற்கிடையில் கார்த்திக்கை அழைத்து நடந்ததை விவரித்து ஓலா அப்ளிகேஷனில் ‘சேவை மோசம்’ என்று புகார் அளிக்கச் சொன்னேன். இதெல்லாம் நடந்தபொழுதும் அந்தக் கார் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும் எனக்கு லேசாக பயமெழ ட்ரைவர் காரிலிருந்து இறங்குகிறானா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும் அவருடன் சவாரி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அந்த ட்ரைவர் என்னருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. வந்தவன் எந்த மரியாதையுமின்றி ‘காசு எவ தருவா’ என்று ஆரம்பித்தான். நான் அவனிடம் சற்று கடுமையாக ‘இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,’ என்றதற்கு அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான். உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள் , ‘கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?’ என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல், ‘அப்படி எதுவும் செய்துவிட முடியாது, நான் நேராக போலீசிடம் புகார் அளிக்கப்போகிறேன்,’ என்றதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்துகொள், போடி என்று அசிங்கமாக சைகை காண்பித்தான். அதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன்.//

இவ்வளவு நடக்க வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் பிடிக்கும்.

விலாசினியே கூறுகிறார். வண்டியிலிருந்து ‘இறக்கிவிடப்பட்டபோது மணி பத்து. பத்துப் பதினைந்து நிமிடம் கழித்து ஆட்டோ வருகிறது. அதற்குப் பிறகு சர்ச்சை தாக்குதல் எக்செட்ரா எக்செட்ரா. அதன் பிறகு ஆட்டோவில் ஏறி ஆயுதம் ஏந்திய ஒலா பின் தொடரச் செல்கையில் என்ன மணி. விலாசினி ரமணியே சொல்கிறார்.

//மணி பத்தரை போல் இருக்கும்.//

அந்த இளைஞன் ஓலா மீட்டரைக் கட் செய்த நேரமும் அடுத்த சவாரி கிடைத்த நேரமும் என்ன என்பது இந்த வழக்கின் முக்கியமான ஆவணம். விலாசினியின் பொய்களைப் பசப்பல்களைத் தகர்த்து எறிவதற்கான மிக முக்கியமான ஆதாரம். இதைத்தான் அநாதைகளுக்கு ஆண்டவன் இருக்கிறான் என்றேன்.

ஆவணம் – 4

சரி ஓலாவுக்கான அடுத்த சவாரி எங்கே.

 

சைதாப்பேட்டை கோர்ட் அருகில்.

 

அண்ணா பல்கலையில் இருந்து, விலாசினி ஆட்டோவில் வளசரவாக்கம் செல்லவும் இவர் அடுத்த சவாரிக்காக சின்னமலை வழியே சைதாப்பேட்டைக் கோர்ட்டுக்குச் செல்லவும் செல்லம்மாள் கல்லூரி வரை இருவரும் ஒரே சாலையில் அல்லவா சென்றாக வேண்டும். இதைத்தான்

//பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான்.//

ஆட்டோவைப் பின் தொடர்ந்து ஒலா காரில் தம் கழுத்தை அறுக்க அவன் வந்துகொண்டு இருந்ததாய் எண்ணவைத்து, நம்மைப் பதற வைக்கிறார் அம்மையார். பெண்களுக்கு என்றால் பிரத்தியேக ஆர்வத்துடன் மருத்துவம் பார்க்கும் எனக்குத் தெரிந்த நல்ல மனநல மருத்துவரிடம் சிபாரிசு செய்யவா.

 

இந்துப் பத்திரிகையின் பொறுப்பின்மை -1

 

அன்றாடம் ஆயிரம் வெட்டுக்குத்து ரத்தம் எனப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு, விலாசினி பிரச்சனை சல்லி பெறாத சாதாரண வாய்த்தகறாரு சப்பை மேட்டர் என்றுதான் தோன்றியிருக்கிறது. அதிக பட்சம் இருவரையும் நேரில் அழைத்து மன்னிப்பு கேட்க வைப்பதோடு முடிந்திருக்க வேண்டிய சமாச்சாரம், கைது வரை சென்றதற்கு முக்கியக் காரணம் எங்கு பார்த்தாலும் இறைந்து கிடக்கும் அரைவேக்காட்டு விலாசினிகள்தாம். என்ன ஏது என்றே தீர விசாரிக்காமல், அந்த ஒலா டிரைவர் என்னதான் சொல்கிறார் என்று கேட்டுதான் பார்ப்போமே என்று ஓலாவைத் தொடர்புகொள்ளும் சிறு முயற்சியைக்கூட எடுக்காமல், விலாசினியின் பதிவில் ஸ்வாதி சூப்பர் இம்ப்போஸ் செய்யப்பட்டுத் தெரிய, அதிதீவிர சமூகப் பிரக்ஞையுடன், விலாசினி ஃபேஸ்புக்கில் எடுத்திருந்த வாந்தியை அப்படியே வழித்து ஆங்கிலமாக்கி அச்சில் வைத்துவிட்டார் இந்துவில் நிருபராயிருக்கும் இன்னொரு விலாசினியான S. Poorvaja.

 

இந்துப் பத்திரிகையின் பொறுப்பின்மை -2

 

சனிக்கிழமை நடந்த சம்பவத்தை சண்டே என்று எழுதி வைத்திருக்கிறது இந்தப் பூர்வஜா சுந்தர் என்கிற முண்டம்.

பத்திரிகையின் செய்தித் தலைமையை இம்ப்ரஸ் செய்து தான் எழுதிய ஸ்டோரியை எப்படியாவது வெளியிட வைக்க,  இது போன்ற பொய்கள் வேறு இடையிடையே. புதன் கிழமை மதியம்கூட 700ஐத் தாண்டாத ஷேர்களை, செவ்வாய் மாலையே 1000த்தைத் தாண்டிவிட்டதாய் புளுகி இருக்கிறது இந்தப் புண்ணாக்கு. இதுகளிடமிருந்துதான் நாம் அறத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதோ அடுத்த வார செவ்வாய்க் கிழமை. இன்றுதான் 1150 ஷேர்களைத் தொட்டிருக்கிறது இந்தப் பதிவு.

போதுமா பூர்வஜா சுந்தரின் புருடாவுக்கான ஆதாரம். தன் பெயரில் பரபரப்பான ஒரு செய்தி வெளிவர எந்த அப்பாவி ஜெயிலுக்குப் போனால் என்ன. ஒலா ஒலா என்று உரக்கக் கத்துபவர்களே இப்படி ஒரு பக்கத்துச் செய்தியை மட்டும் வெளியிட்டு ஒரு அப்பாவியைச் சிறைக்கு அனுப்பக் காரணமாக இருந்த இந்தப் பூர்வஜா என்கிற இன்னொரு போலி விலாசினியை இந்துவை விட்டு நீக்கச் சொல்லிக் கேட்பீர்களா.

ஈவு இரக்கம் என்றால் என்னவென்று அறியாத விளம்பர வெறிகொண்டு திரியும் சின்மயி / விலாசினிகளுக்கு வேண்டுமானால் ஒருவனை ஜெயிலுக்கு அனுப்புவது சும்மா காப்பி குடிப்பதைப் போல சாதாரண விஷயமாக இருக்கலாம் The Hindu போன்ற பத்திரிகைகளுக்கு, உண்மையில் என்ன நடந்தது என்று ஆழ விசாரிக்கும் எந்த சமூகப் பொறுப்பும் இல்லையா.

ஏன் இதைப் பண்ணிப்பண்ணி சொல்ல வேண்டி இருக்கிறதென்றால், நேற்று இரவு நான் நந்தம்பாக்கம் சென்று மரம் செடி கொடிகளிடமெல்லாம் பேசி சேகரித்துக் கொண்டு வந்தவற்றைச் சொல்லி எழுதப்போகிறேன் என்று கூறியதும், என்ன அநியாயம் என்று ரத்தம் கொதித்தார் ஒரு பெரிய பத்திரிகையாள நண்பர். எழுதி முடித்ததும் அனுப்பி வைக்கிறேன், எவ்வளவு வேண்டுமானாலும் எடிட் பண்ணி சுருக்கி வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றேன்.

அவரோ, சார் உங்க ப்ளாக்லயே வெளியிடுங்க. கண்டிப்பாப் படிக்கிறேன். ஆனா இப்ப பப்ளிக் இருக்கிற ஸ்வாதி மூட்ல இதையெல்லாம் பப்ளிஷ் பண்ண முடியாது சார் என்றார்.

இதைத்தான் விலாசினி ரமணி கேடியாய் தமக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார் என்று இப்போது புரிகிறதா.

இதுபோன்ற ஒரு செய்தி இந்துவில் வந்துவிட்டால் மற்ற ஊடகக்காரர்களுக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்படும் என்பதை நெருக்கமாய்க் கன்கூடாகக் காணும் வாய்ப்பும் அனுபவம் இருப்பவர்களால் மட்டுமே உணரவும் எடுத்துச் சொல்லவும் முடியும்.

மூன்று நாட்களாய் இதைச் செய்தியாய் வெளியிட, இந்துவில் வந்ததையும் தாண்டி அப்டேட்டடாய் இன்னும் ஏதாவது கிடைக்குமா எனத் தவியாய்த் தவித்துக் கொண்டு இருக்கும் இன்னொரு இண்டர்நேஷனல் பத்திரிகையின் கரஸ்பாண்டண்ட், இன்று மதியம் செல்போனில் வந்து, என்ன சார் நந்தம்பாக்கம் போய்ட்டு வந்தீங்களே என்னாச்சு என்றார்.

எழுதிக்கிட்டு இருக்கேங்க என்றேன். உங்க, ’சங்கூதப்படும்’ ஸ்டேட்டஸ் பாத்துட்டுதான் சார் கேக்கறேன் என்னாச்சு என்றார். ’எல்லாவற்றையும்’ கூறினேன். நீங்களாவது ஊடகம் மூலமாக எதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். சார், இப்ப மீடியா இருக்கிற மூட்ல இதையெல்லாம் நெகட்டிவா ஒன்னும் செய்ய முடியாது சார் என்றார்.

மீடியாவுக்கு, என்ன நடந்து என்கிற உண்மையைச் சொல்வது நெகட்டிவ், விலாசினி என்கிற பெண்ணியப் போராளியின் பொய்யை மெய்ண்ட்டென் பண்ணுவது பாஸிட்டிவ்.

அறச்சீற்ற முதத்தின் அற்பத்தனத்தின் அடையாளங்கள் – 1

தமது அறச்சீற்ற முகத்தின் அற்பத்தனத்தின் அடையாளமாக நிற்கும் இதுவே போலீசின் மேல் மட்டம் வரை அவருக்கு எதிராகத் திருப்பியிருக்கிறது என்பதை அறிய, விலாசினியின் மண்டை வீக்கம் குறைய வேண்டும்.

//துணைக்கு ஒரு ஏட்டை வீடு வரை அனுப்புகிறோம் என்று கடைசியாகக் கூறிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் ஏட்டை மறுபடியும் ஸ்டேஷனில் கொண்டுவந்துவிட கட்டளையிட்டார்கள்.//

இரவு பதினோரு மணி பக்கமாக ஆகிவிட்டதே பாவம் தனியாக எப்படி இந்தப் பெண்மணி ஆட்டோவில் வளசரவாக்கம் வரை போகும் என்று துணைக்கு ஆளை அனுப்பி வைக்கிறது போலீஸ். அதை ரொம்ப நுணுக்கமாய் விவரிப்பதைப் போல நக்கலடிக்கிறாராம் அம்மையார்.

உங்கள் வீடுவரை உங்கள் பாதுகாப்புக்காக வரும் போலீஸ்காரர் அந்த அகாத இரவில் திரும்பிவர வளசரவாக்க நாய்க் குலைப்பின் நடுவே வண்டி தேடிக்கொண்டு இருப்பாரா அல்லது அவர் ஓரு ஓலா புக்பண்ணிக்கொண்டு வரத்தான் முடியுமா. உங்களுடைய பாதுகாப்புக்காகக் காவலரைத்தான் கொடுக்க முடியும், அதற்கான செலவையும் அரசே ஏற்க நீங்கள் என்ன முதலமைச்சர் அம்மாவா.

ஆனைமேல குதிரை மேல அம்பாரி என காரில் வர ஆசைப்பட்டு ஏறி, வழியில் டிரைவரிடம் சும்மானாச்சுக்கும் எதாவது வம்பிழுத்து பாதியில் இறங்கி 127 ரூபாயையும் கொடுக்காமல் ஏமாற்றி சுருட்டி முடிந்து ஒசியில் சவாரி செய்து சொத்து சேர்க்கும் அல்ப்பங்களுக்கு, ஆட்டோவில் உதவ வந்த போலீசைக் கொண்டுவிடும் செலவை ஏற்பது கழுத்தை அறுப்பதைப் போன்ற வாதையாகத்தான் இருக்கும்.

இவ்வளவு நுட்பமாய் எழுதத்தெரிந்த இலக்கிய பராக்கு பப்ளிஷருக்கு, தாம் பொறுக்கி என்று அந்த 28 வயதேயான ஓலா இளைஞனைத் திட்டியதுதான் அனைத்துப் பிரச்சனைக்கும் மூலகாரணம் என்பது மட்டும் மண்டையில் உறைக்காது.

அறச்சீற்ற முதத்தின் அற்பத்தனத்தின் அடையாளங்கள் – 2

வாய்க்கொழுப்புல இவ திட்டினா, காசும் கொடுக்காம திட்டவேற செய்யிதே சனியன்ங்கற கடுப்புல அவன் மிரட்டினான் என்கிற சப்பைப் பஞ்சாயத்து மேட்டர் இந்து பத்திரிகையில் படுபயங்கரக் கொலை மிரட்டல்போல வெளியனதும், அது, சமூக அந்தஸ்து அதிகார மட்டங்களின் மனக்கண்ணில் நுங்கம்பாக்கக் காட்சியாய் விரிய மேலிடத்திலிருந்து கடுமையான அழுத்தம். அதன் காரணமாய் புகார் எடுத்துக்கொள்ள போலீஸ் விலாசினி வீட்டுக்கே செல்கிறது. அப்போதுதான் புதியதலைமுறை வந்து சென்றிருக்கிறது.

புகாரெல்லாம் எடுத்து முடிந்ததும் விலாசினி சொன்னதுதான் ஹைலைட்.

கேசு கீசெல்லாம் வேண்டாம். கோர்ட்டு கீர்ட்டுனுல்லாம் என்னால அலைய முடியாது. அந்தப் பையனைக் கூப்ட்டு சும்மா மிரட்டி விட்டுடுங்க போதும்.

என்னவொரு இரக்க குணம் என்று தோன்றுகிறதா.

 

இணையத்தில் இதை இரண்டாவது முறையாய் பார்க்கிற துர்பாக்கியத்துக்கு ஆளாகியுள்ளோம். இரண்டு சமயங்களிலும் ஊடகங்கள் மேலோட்டமாகவே இதை அணுகி இருக்கின்றன என்பது அதைவிட துரதிருஷ்டம்.

ஆனால் இன்னமும் சில மனிதர்கள் அற்புதமானவர்களாகவே இருக்கிறார்கள். இந்தக் காரோட்டியைத் தெரியவந்து பத்து நாட்களே ஆகியிருக்கும்  அந்தக் கார் முதலாளி காஜா ஷெரிஃப் சொன்ன வார்த்தைகள் என்னைக் கண்கலங்க வைத்துவிட்டன.

ஏதோ கோவத்துல அந்தத் தப்பான வார்த்தையை சொல்லிட்டானே தவிர, அந்தத் தகப்பனில்லாத பையன் பாவம் ரொம்ப இன்னொசண்ட்டு சார். அவனைப் போயி ஜெயிலுக்கு அனுப்பி கிரிமினல் உலகத்தை அவனுக்குக் காட்டிட்டதை நினைச்சாதான் ரொம்ப கஷ்டமா இருக்கு சார். இந்த நாலு நாள்ல அவன்கிட்ட யார் யாரு என்னென்ன பேசினாங்களோ எப்படியெப்படி வெறுப்பேத்தினாங்களோ தெரியல. போனமாதிரியே அவன் அதே மனுஷனா திரும்பி வரணுமேன்னுதான் சார் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு.

இவர் இப்படி என்றால், இன்ஸ்பெக்டர் அருள் சந்தோஷ் முத்து அதற்கும் ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

சார் அந்தப் பையன் ஓட்டின காரோட ஓனர் முஸ்லீம் சார். ரொம்பக் கடவுள் பக்தியுள்ள ஆளுங்க. வரச்சொன்ன இடத்துக்கு வண்டியோடவும் அந்தப் பையனோடவும் வந்து நின்னாரு சார். வக்கீல்லேந்து எல்லா செலவையும் அவருதான் பாத்துகிட்டு இருக்காரு. ஒரு சாதாரண மனுசரா அவர் இவ்ளோ செய்யும்போது இவ்ளோ அதிகாரம் இருந்தும், இந்துல வந்துடுச்சிங்கிறதால உண்டான பிரஷர்ல நம்மளால எந்த உதவியும் செய்ய முடியிலையேனு நினைச்சாதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு.

ஆமாசார். இந்த விலாசினி ரமணியோட ஃபேஸ்புக்கைப் பாக்கற கொசு மூளைக் காரனுக்குக்கூட நல்லா தெரியும் இந்தம்மா எப்ப எப்படி மாத்திப் பேசும்னு அதுக்கே தெரியாது.

அதுதான் சார் எங்க பிரச்சனையே. இப்ப அவனை சும்மா விட்டுருனு சொல்லிட்டு, நாளைக்கே நான் கம்ப்ளெய்ண்ட் குடுத்தும் போலீஸ் எந்த ஆக்‌ஷனும் எடுக்கலைனு மீடியா வெளிச்சத்துல சொல்லிட்டாங்கன்னா எங்க கதி என்னா ஆவறது.

இந்தம்மாள் எந்த இழவும் தெரியாமல் கார்ப்பொரேட் கார்ப்பொரேட் என்று ஓஸி ஃபேஸ்புக்கில் கார்ப்பொரேட்டைப் பார்த்து போலீஸ் பம்முகிறது என்று உள்ளே என்ன நடக்கிறது என்பது புரியாமல் உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கிறது. ஓலா, காஜா ஷெரீஃபின் காரை விலக்கிவிட்டது. கார் டிரைவர் உள்ளே இருக்கிறார். எவ்வளவு நியாயமற்ற விரயங்கள் ஒரு பெண்மணியின் அரைவேக்காட்டுப் பெண்ணியப் பீற்றலுக்காக

இவ்வளவையும் மீறி, பத்து நாள் முன்பு யாரென்றே தெரியாதவனை சொந்தத் தம்பியைப் போல் புழல் சிறைவரைக் கூட்டிக்கொண்டு சென்று விட்டுவிட்டு வருகையில் காஜா ஷெரிஃப் சொன்னது இதுதான்.

எதைப் பத்தியும் கவலைப்பட்டு மனசை விட்டுடாதே. எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சுக்கோ. கடவுள் நமக்கு ஏதோ நல்லது செய்யிறதுக்காகதான் இதையெல்லாம் செய்யிறார்னு நினைச்சுக்கிட்டு தைரியமா இரு.

இவர் மனதார கவலைப் பட்டதைப் போலவே, நீதியற்ற முறையில் தான் தண்டிக்கப்பட்டதற்காக தன் எதிர்காலத்தை இழந்ததற்காக வன்மம் கொண்டு முரடனாகி வேறு எந்தப் பக்கமும் போய்விடாதிருக்க, உள்ளே சென்ற இளைஞன் செல்லும்போது எப்படி இருந்தானோ அதைப் போலவே திரும்பி வந்து புது வாழ்வு தொடங்க எந்த வகையிலேனும் சிறிய உதவியேனும் செய்யவேண்டியது ஒரு எழுத்தாளனாக மட்டுமின்றி ஒரு மனிதனாகவும் என் கடமை என்று நான் எண்ணுகிறேன்.

எனவே, நாளைக்கு பெயிலில் வெளியில் வரவிருக்கும் அந்த இளைஞனின் மறுவாழ்வுக்காக என்னால் இயன்ற ரூபாய் 5,000த்துடன் இந்த நிதியைத் தொடங்கிவைக்கிறேன். என் நாணயத்தின் மீது நம்பிக்கையுள்ளோர் இயன்றதைக் கொடுத்து உதவுங்கள். உதவியோர் கூடவே எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதை ஒரு SMSல் +91 9551651212 என்ற எண்ணுக்கும் தெரிவித்து கணக்கு வைத்துக்கொள்ள உதவுங்கள்.

Name: C. Narasimhan

Bank: State Bank of India

Branch: Karpagam Gardens

SB A/c no.31822208041

IFSC: SBIN0014625

MICR: 600002195

Bank Phone: 044 24460112

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.