லெனின் மரணம்:அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் சேர்ந்து நடத்திய படுகொலை!

பொறியியல் மாணவர் லெனின் மரணம் தொடர்பாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயலாளர் த.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கொத்தனார் கதிரேசன் என்பவரது மகன் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான லெனின், பாரத ஸ்டேட் வங்கியின் கடன் வசூல் அடியாளாக நியமிக்கப்பட்ட ரிலைன்ஸ் நிறுவனத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மாணவன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும், 100% கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு என்று கல்லூரிகள் உத்திரவாதம் கொடுக்கும் போது ஏன் இவ்வளவு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

இந்த தனியார் கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மோசடியைக் கண்காணிக்கிறதா இந்த அரசு? படித்தவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துகிறதா இந்த அரசு? இதனை செய்யாமல் மாணவர்களை கல்விக்கடன் என்ற புதைகுழியில் தள்ளுகிறது அரசு – வங்கி – தனியார் கல்லூரிகள் என்ற இந்த முக்கூட்டு களவாணிகளின் லாபவெறிக்கு உருவாக்கப்பட்ட இந்த மாயவலையில் சிக்கிய லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்து வேலை கிடைக்காமலும், கல்விக்கடனைக் கட்ட முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் ஏழை கொத்தனார் கதிரேசன் தனது மகன் லெனினை சிவில் இன்ஜினியர் ஆக்க ஆசைப்பட்டிருக்கிறார். பலமுறை அலைந்து திரிந்து தனது மகனுக்கு (அரசு தாராளமாக வழங்க உத்தரவிட்டிருக்கும்) கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கியிடம் வாங்கி ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்த்து விடுகிறார். படித்து முடிக்கின்ற பொழுது லெனின் பல லட்சம் இளைஞர்களில் ஒருவராக வேலைவாய்ப்பு சந்தையில் தள்ளப்படுகிறார்.

வேலை கிடைக்க தாமதமாகி வந்த நிலையில் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கல்விக்கடன்களை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஏற்கனவே பலலட்சம் கோடி வாராக்கடனை வைத்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 40% விலைக்கு கொடுக்கிறது. விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் வாராக்கடனை வசூலிக்கும் உரிமையை வாங்கத் துணியாத ரிலையன்ஸ் நிறுவனம் (மல்லையாவிடம் கடன் வசூலிக்க சென்றால் அவன் வேறு ஒரு நிறுவனம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வாராக்கடனை வசூல் செய்யும் நிலைமை உருவாகலாம்) மிக எளிதில் மிரட்டி உருட்டி மாணவர்களிடம் வாங்கி விடலாம் என்பதால் இதனை வாங்குகிறது.

மாணவர்கள் வேலை கிடைத்ததும் கட்ட வேண்டிய கடன்தொகையை வேலை கிடைக்கும் முன்பே உடனடியாக வசூல் செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் தனது அடியாள் குண்டர்படையை ஏவிவிடுகிறது. இதே போன்றதொரு நிலைமையில் தான் கதிரேசனும், அவரது மகன் லெனினும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடியாள்படையால் மிரட்டப்படுகின்றனர். ஒரு மாதமாக இந்த மிரட்டல் தொடர்ந்த பொழுது, அன்றாடம் உழைத்துக் கிடைக்கும் வருமானம் மட்டுமே உடைய கதிரேசன் மிரட்டலை எதிர்கொள்ள முடியாமல், கடன் வாங்கியாவது ரிலையன்ஸ் அடியாட்கள் கோரிய முதல் தவணையாக ரூபாய் 50,000 கட்ட ஒப்புக்கொள்கிறார்.

அந்தப் பணத்தைக் கதிரேசன் தயார்செய்து கொண்டிருக்கும் போதே லெனினுக்கு ஜூலை 16-ம் தேதி அன்று ஒரு போன் வருகிறது.

“உங்கள் வீட்டிற்கு ஆட்கள் வந்து மிரட்டுவார்கள், உன் குடும்பத்தை அவமானப்படுத்துவார்கள் என்றெல்லாம் ரிலையன்ஸ் அடியாட்கள் மிரட்டியுள்ளனர். இதனால் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தந்தை தன்னால் மேலும் கஷ்டத்தை அனுபவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது லெனின் தற்கொலை செய்து கொள்கிறார்.

பு.மா.இ.மு இந்த மரணத்தைத் தற்கொலையாக பார்க்கவில்லை. தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் அரசு – பாரத ஸ்டேட் வங்கி – ரிலையன்ஸ் மூன்றும் சேர்ந்து நடத்திய படுகொலையாகவே கருதுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது. கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசே கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக்கடனை வசூலித்துக் கடனைத் திருப்பி செலுத்து என்று போராட மாணவர்களை அறைகூவி அழைக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.