
வாயைப் பிளக்கவைத்தால் வாழ்வியல் சூறையாடப்படுமா சார்? எழுத்து, படம், காணொலி என்பதைப் போல காமிக்ஸ் என்பதும் ஒரு ஊடகம். அது எப்படி பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடியது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்று Muralidharan Kasi Viswanathan பின்னூட்டம் எழுதியுள்ளார்.
மேலும் இணைய வலைத்தளங்களில் காரசாரமான விவாதம் நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கின்றது.
அன்புள்ள முரளி,
மாற்றுப் பார்வை மற்றும் சர்வதேச அரசியல் பார்வைகொண்ட உங்களிடம் நான் நிச்சயமாக இந்த பின்னூட்டத்தை எதிர் பார்க்கவில்லை. தற்கால சர்வதேச நுண்ணரசியல் தெரியாத காமிக்ஸ் வாசகர்கள் ஒரு சிலர் இப்படிப்பேசலாம். ஆனால் நீங்கள்? பி பி சி என்னும் சர்வதேச ஊடகத்தில் பணி புரிகின்ற முக்கியமான ஊடகவியலாளர்.
ஒருவேளை நீங்கள், நான் இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்துச் சொல்லியிருக்கலாம்.
கடந்த பன்னெடுங்காலமாக பழங்குடியினரின் வாழ்வியலை ஐரோப்பிய ஏகாதிபத்தியம் சூறையாடப்பட்டு வருகிற வரலாறுகள், பக்கம்பக்கமாக கட்டுரைகளாக கதைகளாக ஆவணங்களாக உலகம் முழுக்க குவிந்து கிடக்கின்றன. பழங்குடி மக்களின் தலைவரான சியாட்டில், 1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதம், உலகின் எந்த மகத்தான இலக்கியத்திற்கும் மேலானதல்லவா?
லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் எடுவர்டோ காலியானோ எழுதிய ” லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளம்” நூலில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தப் பழங்குடிமக்களின் பகுதிகளைக் கண்டடைந்து ஆக்கிரமித்தபிறகு என்னென்ன மாதிரியான ஒடுக்கு முறைகளையும் அழித்தொழிப்புகளையும் செய்தார் என்பதை பக்கம்பக்கமாகச் சொல்லிச் செல்கிறார். எஸ்பனோலா என்னும் பகுதியில் வாழ்ந்து வந்த ஹைதியின் பூர்வகுடி மக்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு தானே நேரடியாக உத்தரவிட்டு முன்னின்று நடத்தியதை விரிவாக விளக்குகிறார். அவர்களைக் கொன்றொழித்ததையும், ஸ்பெயினுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்டோர் செவிலி என்னுமிடத்தில் அடிமைகளாக விற்கப்பட்டதையும் வரலாறாய் விவரிக்கிறார்.
16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பழங்குடி மக்களை அடிமைகளாக்குவது தடை செய்யப்பட்டாலும், ஐரோப்பிய உள்ளரசியலாக அது ஆசீர்வதிக்கப்பட்டது.
இந்த நாடுபிடிப்புக் கேப்டன்கள், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைக்கு முன்பும், இந்தப்பழங்குடிகளுக்கு தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது மதமாற்றத்தை அமுல்படுத்தினார்கள் என்றும் அப்போது அவர்கள் பாடிய இசைப்பாடலின் வரிகளில் தொக்கிநிற்கும் அச்சுறுத்தலையும் எவ்வித அலங்காரமுமின்றி அப்படியே முன்வைக்கிறார் கலியானோ. இந்த கொலம்பஸின் கப்பலில் பயணம் செய்த மாலுமியான கிறிஸ்டோபர் தான் முதலாம் வேதாளர் என்றும் பழங்குடிகளின் பாதுகாவலர் என்றும் வரலாற்றைத் திரிக்கும்போது நிஜமான வரலாற்றை தமிழ்கூறும் இளம்தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது என்கடமையாக ஒரு மூன்றாம் உலக எழுத்தாளன் என்ற பார்வையில் முன்வைக்கிறேன்.
இன்னும், இந்த பழங்குடி மக்களை அமெரிக்க ஐரோப்பிய ஆதிக்கம் செய்த கொடூரமான செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். தீராத வரலாற்றின் பக்கங்களில் ஒரு கருத்த பிசாசாய் தனது நாக்கைச் சுழட்டிக் கொண்டே இருக்கும் ரத்த ருசி எப்பொழுது வேண்டுமானாலும் உயிர்த்தெழலாம் என்பதை நுண்ணரசியல் பார்வையில்தான் உணர முடியும். அப்படியான ஒரு பார்வையை வெறும் புனித இலக்கியம் மட்டுமே பேச வேண்டும் அதுதான் நவீன இலக்கியவாதிக்கு அடையாளம் என்று காயடித்து வைத்திருக்கும் தமிழின் அடுத்த இளம்தலைமுறைக்கு கையளித்துவிட வேண்டும் என்பதற்குத்தான் இத்தனை பிரயாசைப் படுகிறேன்.
மிருகக்காட்சிகளுக்கு இணையாக மனிதக்காட்சி சாலைகளை உருவாக்கி, மனித இனவரைவியலில் அபூர்வமான பிறப்பு பாரம்பரியங்கள் கொண்ட பழங்குடி மக்களை கடத்தி வந்து காட்சிப் பொருளாக மாற்றியவர்கள் இந்த ஏகாதிபத்திய வாதிகள்தானே.. மத்திய ஆப்பிரிக்கா, பப்புவா நியுகினியா போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களான Pygmy மக்களை, சித்திரக்குள்ளர்களை காட்சிப் பொருளாக்கிய வெள்ளை இனத்தவர்தான் ஆப்பிரிக்க மக்களின் பாதுகாவலர் என்று வரலாற்றைத் திரிப்பது எவ்வளவு பெரிய Historical Irony!
எல்லாவற்றையும் வீடக் கொடூரம், சாரா பார்ட்மன் என்னும் பெண்ணின் துயரவரலாறு. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோய்ஸன் இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இயற்கையிலேயே பின்பக்கம் பெரியளவில் புடைத்து தூக்கிக் கொண்டு இருக்கும். மேலும் அவர்களது பிறப்புறுப்பு மற்ற பெண்களுடையதை விடவும் இரண்டு மடங்கு பெரிதாக வெளியே அடையைப் போல தொங்கிக் கொண்டிருக்கும்.
இந்தப் பெண்மணியைக் கடத்திப் போய் காட்சிப் பொருளாக்கி, பொருட்காட்சியைப் போல ஐரோப்பியக் கனவான்களிடம் காசு வசூல் செய்து, அவர்களை இந்தப்பெண்ணின் உடல் முழுக்கத் தொட்டுப்பார்த்து தடவிப் பார்த்து தங்களது மேலாதிக்க உயர்வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தியவர்கள்தான், இந்தத் தென்னாப்பிரிக்க பழங்குடி மக்களின் பாதுகாவலர்களாம். அது மட்டுமல்லாது அந்தப் பழங்குடிப் பெண்மணி பால்வினை நோய் முற்றி இறந்த பிறகு அந்த உடலை கூறு போட்டு அந்த உடலின் பிறப்புறுப்பை வெட்டி எடுத்து காட்சிப் பொருளாக்கிய குரூரர்கள்தான் இந்தப் பழங்குடி மக்களின் தலைவர்கள்!
மேலும் இதுகுறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.
ராணி காமிக்சில் வெளிவந்த “மர்மக் கடிதம்” என்கிற ஒரு காமிக்ஸின் உள்ளடக்கத்தைப் பாருங்கள்: வேதாளன் என்கிற மாயாவி அந்தக் காட்டில் நீதிபரிபாலனம் செய்து கொண்டிருக்கிறார். அந்தக்கட்டத்தில் அந்த பகுதியில் உள்ள ரெக்ஸ் என்னும் பழங்குடி சிறுவன் அவரைக் கவர்கிறான். உடனே அவரைத் தத்தெடுத்து மிகப் பெரிய சாகசக்காரனாக மாற்றுகிறார் வேதாளர் (மாயாவி). ரெக்ஸ் அந்த காட்டின் ஈடிணையற்ற பெரும் வீரனாக மாறுகிறான்.
அதன்பிறகு, இப்பொழுது ராஜ்ய பரிபாலனம் செய்யும் வேதாளருக்குப் பிறகு அடுத்த வேதாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று விவாதிக்கப்படுகிறது. அனைவரும் ஏகோபித்த குரலில் ரெக்ஸ் பெயரையே முன்மொழிகிறார்கள்.
ஆனால், வேதாளரின் பதவிக்கு வருவதற்கான விதிமுறைகள் ரெக்ஸை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் வேதாளரின் பதவிக்கு நியமனம் செய்வது என்பது, வேதாளரின் ரத்த சம்பந்தமானவராகத்தான் இருக்க வேண்டும் இதுதான் பாரம்பரியமாக நடந்துவரும் நியமனம் என்றும் அந்தக் காட்டின் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. வேதாளருக்கோ இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனால், அவரது இதயத்தில் டயானா என்னும் ஒரு வெள்ளைக்காரப் பெண் இருப்பதை உணர்ந்து அந்தப்பெண்ணுக்கு வேதாளரைக் காதலிக்கச் சொல்லி கடிதம் எழுதுகிறான் ரெக்ஸ்.. இதுதானய்யா நுண்ணரசியல். காலங்காலமாக பாரம்பரிய ஆட்சிதான் நடக்க வேண்டும் என்றும், அது மட்டுமல்லாது, பழங்குடிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ராஜ்ஜியத்தில் கூட ஒரு பழங்குடி வீரன் ஆட்சியில் அமரமுடியாது என்றும், அதற்கு அந்தப் பழங்குடி ராஜ்ஜியத்தின் விதிமுறைகளே இப்படித்தான் பாரம்பரியமாக இருக்கிறதென்றும், ஈடிணையற்ற பழங்குடி ராஜ்ஜியத்தின் வீரர்கள் கூட தலைமைப் பொறுப்புக்கு வரமுடியாது.. வேண்டுமானால், தளபதி போன்ற பொறுப்புகளுக்கு வரலாம் என்று இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறது இந்த காமிக்ஸின் கதைத் தளம்.
இன்னும் எப்படித்தான் விரிவாக விளக்கிச் சொல்வது?
இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் இது போல விரிவாக இல்லையே என்று நீங்கள் நினைத்து எழுதியிருக்கலாம். இது போன்ற நுண்ணரசியல்களைத் தேடி என் இளந்தலைமுறை நகரவேண்டும் என்பது என் ஆசை. எல்லாவற்றையும் நானே சொல்லிவிடக்கூடாது. அடுத்ததலைமுறையை சிந்தனைத் தேடல் சோம்பேறிகளாக மாற்றிவிடக்கூடாது என்று விரும்புகிறேன். அதுமட்டுமல்லாது அந்த இளம் தலைமுறை நான் யோசிப்பதைவிடவும், என் நுண்ணரசியல் பார்வைகளை விடவும் பன்மடங்கு அறிவுக் கூர்மையானவர்களாக இருப்பார்கள் என்றும், அவர்களிடம் இன்னும் பேரளவில் புதிய சிந்தனைகளை எதிர்பார்க்கலாம் என்ற அனுமானத்துடன் நான் கோடிட்டுக் காட்டவே செய்கிறேன்.
மற்றபடி இது உங்களுக்கும் உங்களை போன்ற நுண்ணரசியல் பார்வையாளர்களுக்கும்தான். மேலோட்டமாக இந்தக்கட்டுரையைப் புரிந்து கொண்டு உலக அரசியலோ அல்லது உலகமயமாக்கலின் பின்புலத்தில் கட்டமைத்து எழும்பும் மூன்றாம் உலக அரசியல் பார்வைகளோ அற்று கூச்சலிடும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அல்ல.
ஏனெனில், “வெள்ளைக்காரர்கள் உருவாக்கும் கதையில் எப்படி பழங்குடியாளர்களை கதாநாயகர்களாக வைப்பார்கள்? வெள்ளைக்காரர்கள்தான் கதாநாயகர்களாக இருப்பார்கள்..” என்று முன்வைக்கும் அவர்களின் அப்பாவித்தனமான கூற்றுக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
மிக்க நன்றி முரளி. உங்கள் பின்னூட்டம், ஒருவிதத்தில் இப்படி மேலும் ஆழமான ஒரு கட்டுரையை எழுத வைத்ததற்கு மிக்க நன்றி.