மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த மாணவர் லெனின், பாரத் ஸ்டேட் வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கல்விக் கடனாக பெற்று, சிவில் பாடப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.
பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்து உள்ளது. இதனால் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருகிறது. அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாக சேர்த்து, மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோரையும் மிரட்டி வருகின்றனர்.
படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில், லெனின் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வங்கி நிர்வாகம் ரிலையன்ஸ் முகவர் மூலம் நிர்பந்தப்படுத்தி இருக்கிறது. ரிலையன்ஸ் முகவர்கள் ரவுடிகளைப் போல நெருக்கடி தந்ததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.