காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத்

ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள்.

குமுதுமகா கிராமத்திற்கு அருகே 16 பேரோடு அவர்கள் பயணம் செய்த ஆட்டோவின் சக்கரம் பெய்துக் கொண்டிருந்த மழையால் சேற்றில் சிக்கிக் கொண்டது. அதை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மறைந்திருந்த அரச படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலைகளை அரங்கேற்றியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டு. ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார். பலத்த குண்டு காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் இருக்கிறார்கள். சம்பவம் நடைபெற்றதும் காயமடைந்தவர்கள் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்துள்ளார்கள். இதைக் குறித்து உண்மைக் கண்டறியும் குழுவினரிடம் அவர்கள் சொல்லும்போது, காயங்களோடு தப்பியவர்களை போலீஸ் மொத்தமாக கொன்றுவிட்டு, உண்மைகளை மறைத்துவிடுவார்கள் என்பதனாலேயே தப்பிக்க முயற்சித்தோம் என்றார்கள். இதே கந்தமாலை ஒட்டிய பலியாகுடா காட்டில் 2014ஆம் ஆண்டு பாபர் மாதம் 5 அப்பாவி மக்களை கொன்றுவிட்டு அவர்களை நக்சல்கள் என்று போலீஸ் வழக்கை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்டவர்களில் தலித்துகளும் ஆதிவாசிகளும் அடங்குவர்.

kandhamal 2

நக்சல்களின் நடமாட்டம் குறித்து தகவல் வரவே தான் அங்கு மறைந்திருந்தோம், எங்களிடையே துப்பாக்கிசூடும் நடந்தது. அப்போது தான் எதிர்பாராதவிதமாக பொதுமக்களின் ஆட்டோ குறுக்கே வந்துவிட்டது என்று சொல்கிறது போலீஸ். ஆனால் 2 வயது குழந்தை மரணம் தான் இம்முறை போலீசின் வழக்கமான கதைகளை இங்கு சொல்லமுடியாமல் போயுள்ளது. அதுவும் போலீஸ் சுட்ட திசையிலிருந்த ஆட்டோவின் ஒரு பக்கம் தான் துப்பாக்கி குண்டு துளைகள் இருக்கிறது. இரவிலும் பார்ப்பதற்கு வசதியான அதிநவீன கருவிகள் இருந்தும் ஆட்டோவில் இருந்தவர்கள் ஆயுதமற்ற அப்பாவிகள் என்பது தெரியவில்லையா என்ற கேள்விக்கு மழையில் அவற்றை பயன்படுத்த முடியவில்லை என்கிறது கந்தமால் எஸ்.பி தலைமையில் படுகொலைகள் நிகழ்த்திய போலீஸ் கும்பல். செத்தவர்கள் குடும்பங்களுக்கு 5 லட்சம் அறிவித்துள்ளது மாநில பிஜேடி அரசு. படுகொலைகளை கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது பாஜக.

கடந்த வாரம் மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தின் துப்பாக்கிசூடு சம்பவத்தில் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான 1528 சம்பவங்களின் உண்மைத்தன்மையைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது இந்திய உச்ச நீதிமன்றம். காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தினரின் போலி மோதல் படுகொலைகள், கூட்டு பாலியல் வன்முறைகள், சித்ரவதை முகாம்கள், சட்டதுக்கு புறம்பான கைதுகள் என அவர்கள் நிகழ்த்தும் குற்றங்கள் எதிலும் வழக்கு பதிந்திட முடியாது, நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால் இந்திய அரசின் கூலிப் படைகள், AFSPA எனப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தை நீக்க கோரி தான் போராளி இரோம் சர்மிளா கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக அறவழியில் போராடி வருகிறார். இப்போது போராளி புர்ஹான் வானி மரணத்தை தொடர்ந்து நடந்து வரும் போராட்டத்தில் இது வரை 31 பேர் ராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைகளில் யார் மீதும் வழக்கு தொடக்க முடியாது. யாருக்கும் தண்டனை கிடைக்கப் போவதுமில்லை. இது தான் இந்திய சட்டம்.

kandhamal 3

கந்தமாலில் படுகொலை செய்யப்பட்டுள்ள 5 பேரும், காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ள 31 பேரும் தினந்தினம் நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கும் மேலும் சில எண்கள் தான். அவர்களின் பெயரும், பிறப்பும், வாழ்ந்த வாழ்க்கையும், மொழியும், கொண்டாட்டங்களும், கடவுளும், உறவுகளும், உணவும், தொழிலும், கனவுகளும் என எதுவும் நமக்கு தெரியப்போவதில்லை. அது அவ்வளவு முக்கியமானதாகவும் இப்போது இல்லை. மனித உயிர்கள் வெறும் எண்களாக சுறுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இவர்களெல்லோரும் ஏன் எப்படி யாரால் கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் நமக்கு தெரியும்.

அடுத்த முறை காஷ்மீரில் தீவிரவாதி கொல்லப்பட்டான், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் போலீசுடனான மோதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டார்கள், இயற்கை கனிமங்களைவெட்டி எடுக்க சர்வதேச ஒப்பந்தம், மேக் இன் இந்தியா, இந்திய வளர்ச்சி விகிதம் என்று செய்திகளை பார்க்கும்போது தயவுகூர்ந்து, எங்கோ ஒரு காட்டில், மழை பெய்துக்கொண்டிருந்த சேறும் சகதியுமான சாலையில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கேட்பாரற்று விழுந்து கிடந்த இவர்களின் பெயர்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

குகல் டிகல் – ஆண் – 50 வயது
கிமுரி மல்லிக் – பெண் – 35
ப்ரிங்குலி மல்லிக் – 40
மிதியாலி மல்லிக் – 30
கோசே டிகல் – ஆண் குழந்தை – 2

ஜோஸ்வா ஐசக் ஆசாத், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.