கொங்கு வட்டாரத்தில் சாதிய அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்க நினைப்போரும் மதவாத அரசியல் அணிதிரட்டலுக்காக உழைப்போரும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.அந்தப்பகுதி மக்களின் மனம் காயப்பட்டதைப் பற்றி உருகி உருகிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். This is called Appeasing. இந்த சக்திகளைத் தாண்டி பொதுமக்கள் மனம் இவர்கள் தூண்டியதால் காயப்பட்டிருந்தாலும் கூட எழுத்தாளர் பெருமாள் முருகன் பொதுமக்களின் இயல்பான வாழ்க்கையை விட என் எழுத்து முக்கியமில்லை. நான் மன்னிப்புக் கேட்கிறேன். திருச்செங்கோடு என்ற ஊர்ப்பெயரை நாவலிலிருந்து நீக்குகிறேன் என்று 7.1.2015 அன்றே அறிக்கை வெளியிட்டுவிட்டார்.அந்த நிமிடமே பிரச்னை முடிந்து விட்டது- அந்த எழுத்தைப் பொறுத்துவரை.
எழுத்தாளன் ஒருவன் செத்து விட்டேன் என்று சொல்லும் நிலைமை ஒரு நாட்டில் இருக்கலாமா என்றுதான் வழக்குத் தொடுத்தோம். தீர்ப்பு வந்ததும் அப்பிரச்னையும் முடிந்ந்தது.
ஆனால் எதற்காக இப்பிரச்னைகளை சாதியவாதிகளும் மதவாதிகளும் கிளப்பினார்களோ அந்தக்காரியத்தை அவர்கள் தொடரவேண்டியிருப்பதால் அவர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் மனம்,காயம். மக்கள் பாவம் என்றெல்லாம் ‘கண்ணீர்’ வடிக்கிறார்கள். கொங்கு வட்டாரத்தில் வாழும் மக்களுக்கும் எங்களுக்கும் எப்போதும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்கள் கால்களை எங்கள் கண்ணீரால் கழுவி அவர்கள் காயங்களை ஆற்ற எங்களால் முடியும். ஆனால் இந்த அரசியலமைப்பை மதிக்காத அமைப்பினர் அப்பகுதி மக்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்களோ என்கிற அச்சம்தான் நமக்கு இப்போது எழுகிறது.
பகைமையை முன் வைத்து அரசியல் நடத்தும் இந்தக் கேவலமான சக்திகளிடமிருந்து எம் அப்பாவி மக்களைக் காக்க வேண்டும். இந்தப் பிற்போக்கு சக்திகளின் முன்னால் ஒருபோதும் எங்கள் எழுத்து சரணடையாது. ஆனால் மக்களின் உணர்வுகளை மதிக்கவும் கௌரவப்படுத்தவும் எங்கள் எல்லாப் புத்தகங்களையும் பேனாக்களையும் நெருப்பில் போட்டு எரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மக்கள் ஒற்றுமையும் தேசத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு மாண்புகளும்தான் இன்றைக்குத் தேதியில் எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியம்.
ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்.