சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே:
“பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் “லைக்கிட்டும்” “மெளனம் சாதித்தும்” உற்சாகப்படுத்திய நண்பர்களையும் கண்டித்து எழுதியிருந்த பதிவை நீக்கியிருக்கிறேன். காரணங்கள் இரண்டு. ஒன்று, பழனிவேள் தன் வசைகளை நீக்கிவிட்டதாக நண்பர்கள் அறியத் தந்தார்கள். இரண்டு, அந்த விவாதத்திலேயே, எழுதும் பெண்களைப் பற்றி யவனிகா சுதந்திரவள்ளியின் கவிதைக்கு கீழ் தரக்குறைவான கமெண்ட பதிந்திருந்தார் என்ற பிரச்சினை எழுந்தது. அதைக் குறித்த விவாதத்தில் யவனிகா தான் எழுதியது தவறு என்று தன் வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இவ்வாறிருக்க, இதை தொடர்ந்து, அந்த விவாதத்தில் பங்கு கொண்ட லஷ்மி மணிவண்ணன் குறித்தும், இன்னும் எழுதும் சில ஆண்களைக் குறித்தும் பல பிராதுகள் என் இன்பாக்ஸுக்கு வந்தபடி இருந்தன. அவர் இவரிடம் இப்படி சேட் செய்தார், இவர் இவருக்கு இப்படி அழைப்பு விடுத்தார், அவர் அப்போது இவரை இப்படி தாக்கிப் பேசினார் என்று ஸ்க்ரீன்ஷாட்டுகளுடன் வரும் குற்றச்சாட்டுகளுக்கான விவாதங்களை எல்லாம் தொடர்வதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை.
நிற்க. இதில் சுதந்திரவள்ளியோடு, ப்ரேம் யவனிகாவைக் கண்டித்ததாக பேச்சு வந்த போது “இது சாத்தான் வேதம் ஓதும் கதை” என்ற கருத்தை சொல்லியிருந்தேன். ஈழத்தமிழர் தோழமை குரல் நடத்திய தில்லி போராட்டங்கள் முடிந்த இரவில், தங்கியிருந்த மண்டபத்தில் கூடி பேசியிருந்தபோது எல்லோர் முன்னிலையிலும் பிரேம், மாலதிமைத்ரியிடம் மிக மோசமான வசைகளைப் பேசி ஃபிசிக்கலாகவும் அத்துமீறினார். கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தோம், தடுத்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அந்தப் பிரச்சினை நடந்தது. அது ஏதோ கணவன் – மனைவிக்குள் நடந்த சண்டை அல்ல. ப்ரேம், மாலதி மைத்ரி என்ற தனி தனி ஆளுமைகளின் மேலுள்ள மதிப்பும் மரியாதையும் சரிந்த நாள் அது. அதை நினைவுபடுத்தியே, ப்ரேம் முதலில் “தன் சொந்தப் பெண்ணிடம் பொது இடங்களில் சரியாக நடந்துக்கொள்ள சொல்லுங்கள், பிறகு பெண்ணியம் பேசலாம்” என்ற கருத்தை நான் பதிவிட்டிருந்தேன். இந்தக் கருத்தை வெவ்வேறான வதந்திகளாக உற்பத்தி செய்து மாலதியும், ப்ரேமும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகிறேன். என் புது நூல்களுக்கு கூட்டம் வைப்பதாக முகநூலில் பதிவிட்டிருக்கும் நண்பர்களுக்கு தொலைபேசி நிறுத்தச் சொல்கிறாராம் மாலதி மைத்ரி. இந்த மாதம் புனைவு சார்பில் செந்தி அழைப்பிதழ் அனுப்பி விட்ட நிலையில், அவரை நேரில் அழைத்து தான் கூட்டத்தை நடத்தவிடமாட்டேன் என பேசியிருக்கிறார். செந்தி எனக்கு இதை அழைத்து சொன்னபோது, அவர் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சரி என்று சொன்னேன்.
நல்லது. இந்த நிகழ்வால் நிறையக் கற்றுக்கொண்டேன். வதந்திகளும் மிரட்டல்களும் எனக்குப் புதிதல்ல. அதனால் அவதியுறும் என் நண்பர்களுக்காக இந்த விளக்கத்தை இங்குப் பதிவிடுகிறேன். நன்றி”.