ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ்

ஜூலை- 9 The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் அவர்களது நேர்காணல் (Not playing caste card in Swathi murder case : Thirumavalavan) மிக மிக முக்கியமான ஒன்று. நேர்காணலைச் செய்துள்ள ஸ்ருதி சாகர் யமுனனும் பாராட்டுக்குரியவர்.

பா.ஜ.க வழக்குரைஞர் ஒருவர் இடையில் புகுந்து ராம்குமார் “சார்பாக” ஜாமீன் மனு தாக்கல் செய்து, பின் வழக்கிலிருந்து விலகி, ராம்குமார் இந்தக் கொலைக்குக் காரணம் இல்லை, வேறு யாரோ செய்து ஒரு அப்பாவி தலித்தை குற்றவாளி ஆக்குகிறார்கள் என்றெல்லாம் ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களும் மிகைத்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் திருமாவளவன் அவர்கள் மிக்க நடுநிலையுடனும் பொறுப்புடனும் முன்வைத்துள்ள கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஒரு குறிப்பிட்ட அடையாளம் சார்ந்த அரசியலுக்கு அப்பால் எந்த சமூகப் பிரச்சினையையும் ஆழமாகவும் அவசரப்படாமலும் கருத்துக்களை திருமாவளவன் தன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

முழு நேர்காணலையும் நீங்கள் பத்திரிகையில் படித்துக் கொள்ளுங்கள். அதன் சுருக்கம் இதுதான். திருமாவளவன் சொல்பவை:

1. நான் ராம்குமார் குற்றவாளி என்றோ இல்லை என்றோ சொல்லவரவில்லை. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.
2. ராம்குமார்தான் குற்றவாளி என்பது உறுதியானால், அவர் தலித் என்பதற்காக நான் அவருக்கு ஆதரவாகப் பேசுபவன் அல்ல. இது மிகவும் ஆணாதிக்கத் திமிருடன் செய்யப்பட்ட கொலை. இந்தக் குற்றத்தைச் செய்தவர் யாராக இருந்தபோதிலும், அவர் தலித்தாகவே இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
3. கடந்த சிலநாட்களாக இந்த வழக்கில் பா.ஜ.க தலையீடு என்பதும் முன்னுக்குப் பின் முரணாக வரக்கூடிய செய்திகளும் பல குழப்பங்களையும் ஐயங்களையும் ஏற்படுத்துஇயுள்ளது. உள்ளூர் போலீஸ் இதை விசாரித்தால் ஆதிக்கத்தில் உள்ளவர்களின் தலையீடு இருக்க வாய்ப்புண்டு. கோகுல்ராஜ் கொலையில் கொலையாளியைக் கைது செய்ய எவ்வளவு தாமதம் ஏற்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
4. இந்நிலையில் இந்த வழக்கு மாநில போலீஸ் விசாரணையிலிருந்து மத்திய போலீஸுக்கு (CBI) மாற்றப்பட வேண்டும்.

இதுதான் திருமாவளவனின் விரிவான பேட்டியின் சுருக்கம். இதை நான் ஏன் இங்கு கவனப் படுத்துகிறேன் எனில் இன்றைய சூழலில், சமூக ஊடகங்கள் உட்படப் பல்வேறு ஊடகங்களின் வழியாக விரைவில் கருத்துக்கள் பரவுகின்றன. இவற்றில் பல மிகவும் சார்பு நிலையுடன் பொறுப்பற்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அல்லது குற்றச்சாட்டுகளை மறுப்பது என்பதாகவும் அமைந்துவிடுகின்றன. ஒரு பக்கம் திருமாவளவன் சொல்வது போல நமது அமைப்பில் ஆதிக்க சக்திகள் தலையிட்டு விசாரணை திசை மாற்றப்படும் ஆபத்து. இன்னொரு பக்கம் தமது தீவிர முற்போக்கு நிலையை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் பலர் அதிரடியாக வைக்கும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள், இதில் சில இளம் ஊடக நண்பர்களும் அடக்கம்,

உண்மை அறியும் குழு அமைத்துச் செயல்படும்போது நான் பலமுறை இத்தகைய எதிர்வினைகளால் சலித்திருக்கிறேன். இரண்டொரு பிரச்சினைகளில் நான் குழுவிலிருந்து விலகி வந்துள்ளேன். சில நேரங்களில் பல முக்கிய பிரச்சினைகளில் மௌனம் காத்தும் உள்ளேன்.

இது மிகவும் அறம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. அதையும் தாண்டி நடைமுறை உத்தி சார்ந்த பிரச்சினையும் கூட. நமக்கு நம்பகத் தன்மை மிக மிக முக்கியம். நமக்கு வேறு எந்த அதிகாரமோ பலமோ கிடையாது. நமது நம்பகத் தன்மை ஒன்றே நமக்கு பலம். சரி இவர்கள் சொன்னால் அதில்
நியாயம் இருக்கும். அவசரப்பட்டுச் சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையை நாம் பெறுவது அவசியம்.

நிறைய, ஏராளமான அனுபவங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு வேளை இது குறித்து நான் எழுத நேர்ந்தால் அப்போது இதையெல்லாம் சொல்ல வேண்டும்.

இதில் யாரையும் நான் குற்றம்சாட்டவில்லை. முஸ்லிம்கள், தலித்கள் முதலானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். எனவே எந்த ஒரு பிரச்சினையிலும் இதில் நமக்கு நியாயம் கிடைக்காது போய்விடுமோ என்கிற நூறு சதம் நியாயமான அச்சம் அவர்களுக்கு உள்ளது. இந்த அச்சத்திற்கும் அதன் விளைவான அய்யத்திற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டிய அதே நேரத்தில், குறிப்பிட்ட பிரச்சினையில் அபாண்டமான குற்றச்சாட்டையும் நாம் சுமத்திவிட இயலாது. குற்றச்சாட்டு அபாண்டமானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இயலாத நிலையில் நாம் என்ன செய்வது?

சமீபத்திய என் அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஒரு பத்து நாட்களுக்கு முன் திருவாரூர் பகுதியில் ஒரு பிரச்சினை. என் பக்கங்களில் பார்த்திருப்பீர்கள். சாதி ஆதிக்கம் மிகுந்த ஒரு ஊர். அங்கே இதற்கு முன் தலித்கள் பலரும் ஆதிக்க சாதிகளின் கொடும் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர். வெண்மணியிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள ஊர் அது. இப்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியின் ஊழியரும் தலித்துமான ஒரு இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டு பலநாட்களாக நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவர் அந்த முக்கிய அரசியல் கட்சியின் மாவட்டச் செயலாளரிடம் மிக நெருக்கமாக இருந்தவர். அந்த மாவட்டச் செயலாளர் அந்தப் பகுதில் செல்வாக்கு மிக்க ஆதிக்க சாதியைச் சேந்தவர். நினைவிழந்துள்ள அந்த தாக்கப்பட்ட இளைளைஞனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டுள்ளவரும் அவரே.

இதற்கிடையில் ஒரு ஆதிக்க சாதிப் பெண்ணுடன் இவர் வைத்திருந்த தொடர்பு காரணமாகத் தாங்கள்தான் இந்தத் தாக்குதலைச் செய்ததாகச் சிலர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கைதாகியுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் உள்ள தலித் மக்கள், சிபிஐ, சிபிஎம் கட்சிகள், தலித் அமைப்புகள், அதே முக்கிய கட்சியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் எல்லோரும் அந்த மாவட்டச் செயலர்தான் தாக்குதலுக்குக் காரணம் என்கின்றனர். அவரைக் கைது செய்யவேண்டும் எனச் சொல்லி போராட்டமும் நடத்துகின்றனர், ஆனால் தாக்கப்பட்ட இளைஞனும் தன் கட்சியைச் சேர்ந்தவனே ஆயினும் அக்கட்சித் தலைமை மட்டும் மௌனம் சாதிக்கிறது.

தாக்கப்பட்ட இளைஞனின் அம்மாவும் அந்த முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவரிடம் நான் பேசியபோது அந்த மாவட்டச் செயலாளருக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதிபடவும், உணர்ச்சிவயப்பட்டும் சொன்னார். காவல்துறையிடம் பேசும்போது அவர்களும் இதே கோணத்தில்தான் வழக்கைக் கொண்டு செல்கின்றனர் என்பது தெரிந்தது.

இந்தச் சூழலில் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து ஒரு நாள் சென்று விசாரிக்கும் நாம் என்ன சொல்ல முடியும்?

என்னுடன் வந்திருந்த அனைவரும் அந்த பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பலர் வழக்குரைஞர்கள். ஒருவர் முன்னாள் நீதிபதியும் கூட.

பலமணி நேர விவாதங்களுக்குப் பின் அந்த அறிக்கையை நாங்கள் இப்படித்தான் எழுத முடிந்தது:

இப்படியான நிகழ்வுகள் இங்கே தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதில் தலித்களுக்கு நியாயம் கிடைப்பதே இல்லை. அந்த மக்கள் மட்டுமல்ல முக்கிய அரசியல் கட்சிகள் பலவும், குற்றம் சாட்டப்பட்ட மாவட்டச் செயலரின் அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றியத் தலைவரும் விசாரணை செய்யும் திசையில் அய்யம் கொள்கின்றனர். நீதி கிடைக்காது என நம்புகின்றனர்.

நாங்கள்தான் தாக்கினோம் எனச் சிலர் கைதாகியுள்ளனர். தாக்கப்பட்டவரின் அம்மாவும் அதைத்தான் உறுதி செய்கிறார். மாவட்டச் செயலரின்மீது குற்றம் இல்லை என்கிறார். ஆட்சியோ குற்றம் சாட்டப்பட்டவரின் கட்சிக்கு எதிரானது.

இந்நிலையில் எங்கள் பரிந்துரை:

பாதிக்கப்பட்ட மக்களின் ஐயங்கள் நியாயமானவை. இந்த விசாரணையில் நீதி கிடைக்காது என அவர்கள் நம்புகின்றனர். அரசு அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவது போல விசாரணையை CBCID க்கு மாற்ற வேண்டும்.

இப்படித்தான் நாங்கள் சொல்ல முடிந்தது. திருமாவளவன் அவர்களின் இந்த நேர்காணலும் மிகவும் நியாயமான முறையில் சுவாதி பிரச்சினையிலும் இதே போன்ற முடிவுக்குத்தான் வந்துள்ளார். இத்தகைய பொறுப்புணர்வு நம் எல்லோருக்கும் தேவை. இன்றைய சூழலில் இது மிக மிக அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.