ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

ஜோஷ்வா ஐசக் ஆசாத்

 joshua

 

நேற்றிலிருந்து இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.

2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.

இந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ ‘ஆசாதி’ என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.

தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக ‘நம்மால்’ கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இத்தனை கொந்தளிப்பு? வெறும் 21 வயது ‘தீவிரவாதி’ கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது? அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக?

அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான். கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். ஃபேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கின்றன. (இறுதியாக அமர்நாத் யாத்ரீகர்களை கொல்லக்கூடாது என்கிற பதிவை வெளியிட்டுள்ளான்.)

சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர். புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் ‘காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்’. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் ‘பாகிஸ்தான் தீவிரவாதிகள்’ என்று நம்பிக் கொண்டிருப்போம். இணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடினமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

ஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.

ஜோஷ்வா ஐசக் ஆசாத், சமூக-அரசியல் செயற்பாட்டாளர்.

One thought on “ஷாஹித் புர்ஹான் வானி: கொல்லப்படுவரெல்லாம் தீவிரவாதி அல்ல

  1. வீரவணக்கம் என்று எழுதுபவர் வானியின் அரசியல் வன்முறை அரசியல் என்பதை மறைப்பதையும், அவர் அப்பட்டமான இந்திய விரோதி என்பதையும் எழுதாததும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.ஏனெனில் தீவிரவாதத்தினை எப்படியாவது நியாயப்படுத்தியும், இந்திய அரசு செய்வது மட்டுமே தவறு என்றும்தான் இவரைப் போன்றோரால் எழுத முடியும். ஜிகாதிகள் செய்த அட்டூழியங்கள், அவர்களில் பலர் பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்குவது போன்றதை மறைத்துத்தான் இவர்களால் எழுத முடியும். இத்தகைய இந்திய விரோத சக்திகள் அணிந்து கொள்ளும் முகமூடிகளில் ஒன்றுதான் தாங்கள் ஒடுக்கப்பாட்டோருக்காகவும், மனித உரிமைக்கு ஆதரவாகவும் இருப்பதாக காட்டிக் கொள்வது. இவர்களை நிராகரித்து எதிர்ப்பதுதான் சரியான எதிர்வினை.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.