பத்தி: தமிழில் எழுதும் ஒரு சினிமா விமர்சகர்கூட ஏன் தேசிய விருது பெறவில்லை?

ஜீவா பொன்னுசாமி

” If you have no critics you will likely have no success “. – Malcom X .

” On your way to the top you always get some criticism.criticism is a great motivation ” – Wladimir Klitschko.

” The notion of directing a film is the invention of critics. the hole eloquence of cinema is acheived in the editing room ” – Walter Murch .

ஒரு விமர்சகர் என்பவர் படைப்பாளியையும் , படைப்பையும் தரம் உயர்த்த தனது தலையை ஏணிப்படியாகவும், அதே நேரத்தில் வாசகரை / பார்வையாளரை முதுகில் சுமந்து கொண்டு சமூகத்தை முன்னோக்கி செலுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்பதே எனது வாதம்.

ஒரு படைப்பாளி வளருவதற்கும், அவனது படைப்பாக்கத்திறன் மெருகேறுவதற்கும், அவனது படைப்பின் மூலம் சமூகம் வளருவதற்கும் ஒரு விமர்சகர் தேவை. விமர்சனம் எனும் பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது விமர்சனம்; கலை ஆகாது. விமர்சனம் என்பதற்கும் பார்வை என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இங்கு தமிழ் சினிமா என்று வைத்துக்கொள்வோம், நேர்மையான விமர்சகர் என்று யாருமில்லை – குறிப்பாக தமிழ் சினிமாவில் யாருமில்லை – மற்ற துறைகளிலும் இல்லை. ஒரு வேலை அப்படி இருந்திருந்தால் சினிமாவின் தரம் என்பது கண்டிப்பாக உயர்ந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையும் கூட.

ரோமின் சிம்மாசனம் காலியாக இருக்கும் நேரம் sede vacante என்பார்கள். ஆனால் வரலாற்றில் அதுவே அதிகபட்சமாக 2 வருடம் 10 மாதங்கள். ஆனால் , இங்கு தமிழ் சினிமா வரலாற்றில் இத்தனை வருடங்களாக விமர்சகன் எனும் சிம்மாசனம் காலியாகவே உள்ளது.

விமர்சனம் எனும் பெரும் கலை வடிவத்தின் ஒரு கிளையான சினிமா விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு திரைப்படம் என்பது விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் போது திரைப்படம் – வகைப்பாடு – கரு – களம் – கதை – திரைக்கத்தை – வசனம் – இயக்கம் -ஒளிப்பதிவு – ஒலிப்பதிவு – படத்தொகுப்பு – இசை – திரைமொழி – அரசியல் – தொழில்நுட்பம் -இலக்கணம் – இலக்கண மீறல் – வாழ்வியல் – மானுடவியல் – பொருளாதாரம் – பிரதிபலிப்பு – வரலாறு – கலாச்சாரம் – மொழி – உடை – உணவு – காலம் – தத்துவம் – கதாபாத்திரம் – நடிப்பு – கதாபாத்திர படைப்பு – உறவுமுறை – உளவியல் – என அனைத்தையும் அலசி, ஒரு திரைப்படம் அதன் திரைவடிவத்தில் உள்ள குறை நிறைகளை மிகச்சரியாக சொல்வதே விமர்சனம் என்று கொள்ளலாம்.

இது திரைப்படத்தினுள் விமர்சகர் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். ஒரு விமர்சகர் அவரது விமர்சிக்கும் திறனைப்பொறுத்து அதை பல்வேறு விதமாக வகைமைக்குட்படுத்தலாம். அதை பின்னர் பார்ப்போம்.

ஒரு திரைப்படத்தினை எடுத்துக்கொண்டால் அது எந்த வகைப் பிரிவினைச்சேர்ந்தது என்கிற தெளிவிலிருந்து மேற்சொன்ன அனைத்தைப்பற்றியும் ஓரளவுக்கேனும் (அ) மிகத்தெளிவான புரிதல் உள்ள ஒருவரே விமர்சகர் என்கிற கிரீடத்தினை சூடிக்கொள்ள முடியும்.

திரைப்படம் – மூலக்கதை படைப்பாளியினுடையதா, கதாசிரியனுடையதா, எழுத்தாளனுடையதா, வேறு மொழிப்படத்தின் நகலா, சமூகத்தில் நடந்த சம்பவங்களின் அகத்தூண்டுதலால் (Inspiration) உருவானதா, வேறு சினிமா அதன் படைப்பாளி அவரது படைப்பாக்கத்திறன் இவற்றின் மீது ஏற்பட்ட அகத்தூண்டுதலின் பாதிப்பினால் எடுக்கப்பட்டுள்ளதா அல்லது ஏற்கனவே சொந்த மொழியில் எடுக்கப்பட்ட படத்தின் நவீன திரைவடிவமா என ஆராய்தல்.

களம் – கதை நிகழும் களம், அதை சார்ந்த விமர்சனப்பார்வை. இங்கு களம் என்பது ஒன்றாகவோ அல்லது பலவாகவோ இருக்கலாம்.

கரு – கதை எதை ஆதர்சமாக பின்னி நகர்ந்து செல்கிறது அதை இனம் கானல்.

திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, தொழிநுட்பம், தொழில்நுட்பக்க கலைஞர்கள் – இப்படி ஒவ்வொன்றிலும் அந்த தொழில்நுட்பத்தின் நுணுக்கம் அறிந்தும், அதனதன் தொழில்நுட்ப கலைஞர்களின் தனித்திறமை உள்ளிட்டவையும் குறிப்பிடுதல் …….

திரைமொழி – மேற்சொன்ன அனைத்திலும் ஒரு படம் என்பது எப்படி திரையில் உருமாறியுள்ளது அதில் கையாளப்பட்டுள்ள கலைத்தன்மை இவையே திரைமொழி என்பதன் விளக்கமாகும். (ஆனால் இங்கு அந்த சொற்றொடரை மட்டும் தெரிந்துகொண்டு அதை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்).

அரசியல் – இது கண்டிப்பாக இருக்கும் அல்லது இல்லாதது போல் இருக்கும். படம் எந்த புள்ளியில் நின்று அதனளவில் அரசியல் பேசுகிறது என்பதையும்.

இலக்கணம் – தொழில்நுட்பம் , படைப்பாகாத்திறன் இரண்டிலும் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணம் அதை பயன்படுத்தி இருக்கும் விதம் அல்லது அதை உடைக்கின்ற தன்மை இவற்றினை பற்றி தெளிவு படுத்துதல்.

பொருளாதாரம் – தயாரிப்பு , விளம்பரம் , வசூல் என்பன உள்ளிட்டவை.

வாழ்வியல் – களத்தினை பொறுத்து , காலத்தினை பொறுத்து வாழ்வியல் என்பது புனையப்பட்டிருக்கும் . அதில் உள்ள உண்மைத்தன்மையை தெளிவு படுத்துதல்.

மானுடவியல் – படத்திற்குள் மானுடவியல் சார்ந்தோ , அல்லது ஒரு இனக்குழுவை சார்ந்ததோ இருக்கலாம் . அப்படி பின்னப்பட்டிருக்கும் போது அவற்றின் நெறிமுறைகள் சடங்குகள் தொன்மங்கள் இவற்றின் பிரதிபலிப்புகள் என பட்டியல் நீளும் அதை பற்றிய புரிதலோடு விளக்கம்

வரலாறு – காலம் சார்ந்து, காட்டப்படுகிற ஒரு சிறிய பொருள் முதல் கொண்டு, உயிரினம் வரையில். அதன் புற மற்றும் அகத் தோற்றம் உள்ளிட்ட அனைத்திற்கும் உள்ள வரலாறு மற்றும் கதை பேசுகிற வரலாறு என்ன என்பனவற்றில் தெளிவுபடுத்துதல்.

கலாச்சாரம், மொழி, உடை, உணவு, காலம் இவை அனைத்தையும் சரிவர உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என் சுட்டிக்காட்டுதல்.

ஏதேனு தத்துவத்தின் பின்னணியில் கதை பின்னப் பட்டுள்ளதா காட்சியமைப்பு பின்னப்பட்டுள்ளதா.

மேலும் கதாபாத்திரம், கதாபாத்திர படைப்பு, அதன் உளவியல், உறவு முறை என்பன பற்றியும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இவை அனைத்தும் சேர்ந்து ஒரு படத்தின் அதனுள் உள்ள விஷயங்களை வைத்து விமர்சிக்க தேவையான நுண்ணறிவு.

இது திரைப்படம் அதன் அகம் சார்ந்து எனக் கொள்ளலாம் . புறம் சார்ந்தும் சில உள.

விமர்சனம் என்பது விமர்சகரின் திறனாய்வைப் பொறுத்தவரையில் விதிமுறை, ஒப்பியல், பாராட்டு, மதிப்பீடு, வரலாறு, விளக்கமுறை, மனப்பதிவு, உளவியல், சமூகவியல், அறிவியல், தொன்மவியல், மொழியியல், குறியியல், பகுப்பாய்வு, அமைப்பியல், மார்க்சியம், பெண்நிலைவாதம் இப்படி பல உள்ளன. இவற்றுள் ஒரு விமர்சகரானவர் எந்த புள்ளியில் நின்று தனது விமர்சன திறனாய்வு அணுகுமுறையை பின்பற்றுகிறார் என்பதில் தெளிவு வேண்டும்.

jeeva
ஜீவா பொன்னுசாமி

விமர்சனத்தில் உள்ள மற்றும் சில விவாதக்கூறுகளாவன, படைப்பு – படைப்பாளி – படைப்பாக்கத்திறன் ,(creatiion – creator – creativity).

ஒரு படைப்பு அதனளவில் நின்று என்ன சொல்லுகிறது என்றும் அதை அந்தப் படைப்பாளி எவ்விதம் சொல்லியிருக்கிறார் என்றும் அது அவரின் தனிப்பட்ட பார்வையா அல்லது சமூகப்பார்வையா என்பது உட்பட அனைத்தும் அந்த படைப்பின், படைப்பாளியின், படைப்பாக்கத்திறன் சார்ந்து அளவுகோல் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இதில் முரண் என்னவெனில், ஒரு படைப்பு அதனளவில் ஒரு சாராருக்கு நியாயவாதம் பேசும்படி இருக்கும். அதனால் படைப்பின் கருப்பொருளிலேயே முரண்பாடுகள் / மாற்று கருத்துக்கள் தோன்றும். இது படைப்பின் எல்லாத்தளத்திலும் நிகழும்.

மேலும் ஒரு படத்தின் அனைத்தையும் பகுப்பாய்ந்து இன்னும் சிலவற்றை கூறலாம், ஒரு படம் தனது கலைத்தன்மை என்கிற அளவில் பார்வையாளனுக்கு எந்த மாதிரியான மனவோட்டத்தை ஏற்படுத்துகிறது என்றும் சொல்லுதல், நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு பார்வையாளனை பிற்போக்காக, முற்போக்காக, சமாதானப்போக்காக, பொழுதுபோக்காக என எப்படி நிலை நிறுத்துகிறது என்பதை சொல்ல வேண்டும்.

ஒரு விமர்சகர் என்பவர் இவ்வனைத்தையும் உள்ளடங்கியே விமர்சனம் எனும் கலையினை கையாள வேண்டும். இதிலும் விமர்சனத்தை தாண்டி, ஒரு விமர்சகர் என்கிற அளவில் ..,
படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கு ஒரு பிணைப்பு சங்கிலி போல் செயல்படுகிறார் . இதன் மூலம் பார்வையாளருக்கு ஒரு படைப்பாளி தனது ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசம் ஏதும் கையாண்டுள்ளாரா என்பதுவரையில் பார்வையாளருக்கு கொண்டு செல்கிறார். இதனால் படைப்பாளியும் பார்வையாளரும் மெருகேற்றப்படுகின்றனர்.

இதில் ஒரு விமர்சகர் அவரளவில் நின்று ஒரு படைப்பாளியின் அகத்தூண்டுதலுக்கு உட்படுத்தி (இங்கு அகத்தூண்டுதல் என்பது stumilate) அவனது படைப்பின் தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நோக்கம் , அதே நேரத்தில் ஒரு விமர்சகன் ஒவ்வொரு படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பையும் தனித்தனியே அணுக வேண்டும். படைப்பாளியின் மீதான முந்தைய மதிப்பீடுகளை வைத்து அவனது படைப்புலகத்தை கேள்விக்குட்படுத்தக்கூடாது. மேலும் விமர்சகர் என்பவன் தனி மனிதர் என்கிற அளவில் ஒரு படைப்பாளிக்காக தனது விமர்சனத்தில் சுய சமரசம் செய்து கொள்ளக்கூடாது . இது மிகப்பெரி விளைவுகளை ஏற்படுத்தும்.

அதே சமயம் ஒரு விமர்சகர் தனது பார்வை / நிலைப்பாடு / கொள்கை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையாளர் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிக்கக் கூடாது.

உதாரணமாக : ” இப்படி சொல்லியிருந்தால் / காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ” எனச்சொல்வது . இந்த வரிகளுக்கு முன்னும் பின்னும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு விமர்சகர் அவரது விமர்சனப் பார்வை அதன் அணுகுமுறை இவற்றை வைத்து அவரது சார்பை எளிதில் இனம் காண முடியும . அப்படி இனம் கண்டுகொள்ளப்பட்டால் அவரை படைப்பாளியும் பார்வையாளரும் கேள்விக்குட்படுத்தி அவரது விமர்சனத்தையும் அவரது விமர்சனப் பார்வையையும் சரியல்ல என்று சொல்லி அவரை ஒரு விமர்சகர் இல்லை என்று அவனது தகுதியை உடைத்து விடலாம்.

ஒரு படைப்பாளிக்கு எப்படி ஒரு படைப்பை படைக்க படைப்பு சுதந்திரம் உள்ளதோ (அது இங்கு பெரும்பாலும் கேள்விக்குறியே – இது மற்ற சில உலக நாடுகளுக்கும் பொருந்தும்), ஒரு விமர்சகர் ஒரு படைப்பை விமர்சிக்க எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே போல் ஒரு படைப்பாளி, ஒரு பார்வையாளர் என இருவரும் ஒரு விமர்சகரையும் அவரது விமர்சனத்தையும் விமர்சிக்கலாம் என்கிற சுதந்திரம் உண்டு.

ஒரு ஆரோக்கியமான முரண் என்னவென்றால், “படைப்பாளி – விமர்சகர் – பார்வையாளர் “யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் படைப்பாளிகள் பார்வையாளரின் உணர்வின்முலம் உணர்ச்சியை தோண்டி அவர்களை உளவியல் ரீதியில் கட்டிப்போட்டு வெற்றி பெற்று வருகின்றனர் என்பதே உண்மை.

உண்மையில் ஏதேனும் ஒரு உணர்வின் அடிப்படையில்தான் படமானது கருப்பொருளை தாங்கி நிற்கும் அந்நாள் அதை எவ்வளவு தூரம் காட்டுகிறோம் என்பதில்தான் இங்கு பிரச்சனையே .

குறுக்கு வழியில் சொல்வதென்றால் universal emotion – regional cultural structure – stumilate audience – success formula.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு விமர்சகர் தமிழ் சினிமாவில் இல்லாதது ஒரு குறையே . ஒருவேளை அவர் இருந்திருந்தால் படைப்பாளிக்கு ஒரு ஆசிரியராக இருந்து தலையில் குட்டு வைத்து சிறந்த படைப்புகளை படைக்கவும் , பார்வையாளருக்கு வழிகாட்டியாக இருந்து சினிமாவை பார்க்கும் திறனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்.

அப்படி இருந்திருந்தால் ” அத்தி பூத்தாற் போல்….” என்கிற பழமொழிகளுக்கு அவசியமில்லாமல், படைப்புகள் அனைத்துமே அத்திப்பூவாய் பூத்திருக்கும்.

குறிப்பு : தமிழ் சினிமாவில் விமர்சகர் என்கிற பிரிவில் இது வரையில் ஒருமுறைகூட நாம் விருது வாங்கவில்லை என்பது வருத்தமே.

” நவீன கலை வடிவம் ” என்கிற பெயரில் சினிமாவை பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைத்தொகுப்பு புத்தகத்தில் இடம் பெறவுள்ள ஒரு கட்டுரை இது.

 ஜீவா பொன்னுசாமி, திரைக் கலைஞர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.