சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
அப்பட்டமான ஒரு இந்துத்துவவாதியும், ஒரு போலி அறிவுஜீவியுமாகிய ராஜிவ் மல்ஹோத்ராவின் ஏற்பாட்டில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் “சுதேசி இன்டாலஜி” கருத்தரங்கம் வெளியார் அனுமதியின்றி மூடிய கதவுகளுக்குள் ஐஐடி நிர்வாகத்தின் பூரண ஒத்துழைப்புகளுடனும் விதிமீறல்களுடனும் நடந்து கொண்டுள்ளது.

உலகளவில் மதிக்கப்படும் இந்தியவியல் அறிஞரான ஷெல்டன் பொல்லாக்கைக் குறி வைத்து இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தி இப்போது ஊடகங்களில் பேசப்படுகிறது.. ராஜிவ் மல்ஹோத்ரா ஏற்கனவே ஷெல்டன் பொல்லாக்கை “விமர்சித்து” எழுதிய Battle for Sanskrit எனும் ஒரு அசட்டு ஆய்வு நூல் அறிவுலகால் புறக்கணிக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

ஷெல்டன் பொல்லாக் சமஸ்கிருத வரலாறு மட்டுமல்ல, இந்திய இலக்கியங்களின் வளர்ச்சி, இந்திய சிந்தனை வளர்ச்சி ஆகியன குறித்த மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர். அவரது முக்கிய நூல் The Language of the Gods in the World of Men (2006) முழுமையாக pdf வடிவில் இலவசமாகக் கிடைக்கிறது. அவரது இன்னும் பல மிக முக்கியமான பல கட்டுரைகளையும் கூட நீங்கள் தரவிரக்கம் செய்து வாசிக்கலாம்.

sheldon pollock book

கொலம்பியா பல்கலைக் கழகத்தின் தென் ஆசியத் துறையில் பேராசிரியராக உள்ள ஷெல்டன் Clay Sanskrit Library யின் பொது ஆசிரியராக இருந்தவர். தற்போது இன்ஃபோசிஸ் ரோஹன் மூர்த்தியால் 5.2 மில்லியன் என்டோமென்ட் தொகையுடன் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள Murty Classical Library of India வின் General Editor ஆக உள்ள ஷெல்டன் சமகால உலகில் வேறு யாரையும் விட சமஸ்கிருத ஆய்விற்குக் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தவர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் குடும்பம் அப்படி ஒன்றும் இந்துத்துவச் சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் இல்லை. இந்த முக்கிய கல்வித்துறை சார்ந்த பொறுப்பிற்கு அவர்கள் ஷெல்டனைத் தேர்வு செய்தது என்பது துறை சார்ந்த ஒரு ஆகச் சிறந்த வல்லுனரை பொறுப்பில் அமர்த்துவது என்கிற ஒரு வகை கார்பொரேட் அணுகல்முறையின்பாற் பட்டதுதான்.

இந்துத்துவவாதிகளின் பிரச்சினை என்னவெனில் இப்படி நேர்மையான ஆய்வாளர் ஒருவர் அந்தப் பொறுப்பில் இருந்தால் தாங்கள் விரும்பும் வகையில் அறிவு நாணயமற்ற பணிகளுக்கு பயனில்லாமல் போவது மட்டுமல்லாமல் எதிராகவும் போய்விடுமே என்பதுதான். ஷெல்டனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அவர்கள் ஒரு பெரிய கையெழுத்து இயக்கத்தையும் நடத்தினார்கள்.

‘சமஸ்கிருதத்தின் மரணம்’ என்பது ஷெல்டனின் எண்ணற்ற சிறு கட்டுரைகளில் ஒன்று. ஒரு செவ்வியல் மொழியின் ஏற்றங்கள் இறக்கங்கள் ஆகியவை குறித்த ஒரு சிறிய அறிமுகம் அது. சமஸ்கிருதத்தை இழிவு செய்வது அதன் நோக்கமன்று. காஷ்மீர், 16ம் நூற்றாண்டு விஜயநகரம், 17ம் நூற்றாண்டு டெல்லி இப்படி வரலாற்றின் பல்வேறு தருணங்களில் சமஸ்கிருதத்தை அவ்வக்கால மன்னர்கள் புத்துயிர்க்கச் செய்த முயற்சி எவ்வாறு வெற்றி பெற இயலாமற் போயிற்றென்பதைச் சுட்டிக் காட்டும் ஒரு மிக அழகான கட்டுரை. அது, மீண்டும் சொல்கிறேன் சமஸ்கிருத்தத்தைக் குறைத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. ஒரு செவ்வியல் மொழி செழித்திருப்பதற்கான அரசியல், பண்பாட்டு, சமூகச் சூழல் குறித்துப் பேசுகிற ஒரு மொழி வரலாற்றுக் கட்டுரை அது. இந்தியத் துணைக் கண்ட அளவிலான இலக்கிய, தத்துவச் சொல்லாடல்களுக்கான மொழியாக இருந்த சமஸ்கிருதத்தின் இடத்தை எவ்வாறு உள்ளூர் / தல மொழிகள் கைப்பற்றின என்பதைச் சொல்லும் எழுத்துக்கள் அவருடையன..

மேற்குறிப்பிட்ட இந்தக் கட்டுரையின் அடிப்படையில் நான் எழுதிய “சமஸ்கிருதம் வழக்கிழந்த வரலாறும் அதை உயிர்ப்பிக்க முனையும் அபத்தங்களும்” எனும் கட்டுரை முகநூலில் ஆக 1, 2014ல் வெளியிடப்பட்டது. பின் ‘கருஞ்சட்டைத் தமிழர்’ இதழில் அது வெளிவந்தது. அதன் பின் பல அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் மறு வெளியீடும் கண்டது. கீழே உள்ளது என் கட்டுரையின் ஒரு சிறு பகுதி.:

“1857ல் குஜராத்தி கவிஞர் தல்பத்ராம் தாஹ்யாபாய் இயற்றிய ஒரு கவிதையை ஷெல்டன் பொல்லாக் மேற்கோள் காட்டுவார். சமஸ்கிருதத்தின் மரணத்தை அறிவித்த அந்த முதல் பதிவு:

“போஜ மன்னன் பார்ப்பனர்களுக்கு அளித்த விருந்துகளும் பெருநிதிக் குவியங்கள் எல்லாமும் தேவ பாஷையின் சாவைக் கண்டு அதற்கு இறுதிச் சடங்குகளுக்காக அவன் அளித்தவை தான்…

ஆடம்பரமாக அமர்ந்திருந்த பாஜிராவ் அந்த இழவுச் சடங்குகளைச் செய்தான். இன்றும் கூட வழி வழிவரும் ஆட்சியாளர்கள் ஆண்டு தோறும் அதற்குத் திவசம் செய்யத் தவறுவதில்லை..”

பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின் மன்னர்கள் ஜெய்னுல் ஆப்தீன் (காஷ்மீர்), கிருஷ்ணதேவ ராயர் (விஜயநகரம்), அக்பர் உள்ளிட்ட முகலாய மன்னர்கள், ஜெய்சிங் (ராஜஸ்தான்) கிருஷ்ணராஜ உடையார் (மைசூர்). தஞ்சை மராட்டிய மன்னர்கள் முதலானோர் சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்துப் புதிய இக்கியங்கள் ஆக்க மேற்கொண்ட முயற்சிகளைத்தான் தல்பத்ராம் இப்படிச் சொல்கிறார். முகலாயர்களின் நடவடிக்கைகளால்தான் சமஸ்கிருதம் அழிந்தது எனச் சொல்வது அபத்தம் என்கிறார் The Language of god in the World of Men எனும் முக்கிய நூலின் ஆசிரியர் ஷெல்டன் பொல்லாக்.”

இப்போது தெரிகிறதா இந்துத்துவவாதிகளுக்கு அறிஞர் ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி என.

நல்லவேளை ஷெல்டன் இந்தியாவில் வாழவில்லை. அப்படி வாழ நேர்ந்திருந்தால் கல்புர்கிக்கும் அனந்தமூர்த்திக்கும் நேர்ந்ததுதான் அவருக்கும் நேர்ந்திருக்கும்.

இறுதியாக இன்னொரு குறிப்பு. இவர்கள் ஷெல்டனைக் காட்டிலும் கடுமையாக வெறுக்கும் இன்னொரு இந்தியவியல் / திராவிட இயல் அறிஞர் உண்டு. அவர்தான் கால்டுவெல். இருக்காதா பின்னே. சமஸ்கிருதம் தேவ பாஷை. அதிலிருந்து உருவானதுதான் தமிழ் உட்பட இந்திய மொழிகள் எல்லாம் என்று அவர்கள் விட்டுக் கொண்டிருந்த நூலை அறுத்தெரிந்தவர் அல்லவா அறிஞர் கால்டுவெல்!

One thought on “சென்னை ஐஐடியில் சுதேசி இன்டாலஜி கருத்தரங்கம்: ஷெல்டன் பொல்லாக் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

 1. “இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் குடும்பம் அப்படி ஒன்றும் இந்துத்துவச் சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் இல்லை. இந்த முக்கிய கல்வித்துறை சார்ந்த பொறுப்பிற்கு அவர்கள் ஷெல்டனைத் தேர்வு செய்தது என்பது துறை சார்ந்த ஒரு ஆகச் சிறந்த வல்லுனரை பொறுப்பில் அமர்த்துவது என்கிற ஒரு வகை கார்பொரேட் அணுகல்முறையின்பாற் பட்டதுதான்.”

  நாரயணமூர்த்தியின் குடும்பம் இது தவிர பல அறிவுத்துறை முயற்சிகளுக்கு உதவியுள்ளது/உதவுகிறது.அவர்கள் இந்த்துவ சிந்தனைகளுக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை.Infosys Foundation ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளும் துறை சார்ந்த அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.அதற்கான தெரிவுக் குழுவில் அமர்த்தியா சென் இடம் பெற்றிருந்தார்.
  சமூக அறிவியலில் அவ்வமைப்பு வழங்கும் பரிசினை பெற்றோர் பட்டியலில் நந்தினி சுந்தர் பெயரும் உண்டு.
  2010 ஆண்டு அவர் இதைப் பெற்றார். இது ஒன்றே போதும் அ.மார்க்ஸ் கூறியுள்ள ”இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் குடும்பம் அப்படி ஒன்றும் இந்துத்துவச் சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் இல்லை” என்பது பொய்ப் பிரச்சாரம் என்பதைக் காட்ட.
  சர்ச்சைகளுக்குப் பின்னரும் ஷெல்டனை அப்பொறுப்பிலிருந்து நீக்கப் போவதில்லை என்றும், விமர்சகர்களுக்கு பதில் கூறியும் ரோஹன் மூர்த்தி பேட்டி அளித்தார்.
  நாரயணமூர்த்தி போன்றோர் இடதுசாரி புரட்சியாளர்கள் அல்ல.அ.மார்கஸ் போல் வெறுப்பினை முன்வைத்து அரசியல் செய்பவர்கள் அல்ல, எந்த மத அடிப்படைவாதத்திற்கு ஆதரவாக இயங்குபவர்களும் அல்ல.

  இந்த்துவாதிகளை எதிர்க்கிறார் என்பதற்காக அ.மார்க்ஸை ஆதரிக்க முடியாது.ஏனெனில் அவர் கருத்துரிமைக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக எழுதியவர், இன்னும் அவர்களை ஆதரிப்பவர். ஷெல்டன் போன்றோர் எழுதுவதை தனக்கு சாதமாகக் கொண்டு தமிழ்ச் சூழலில் தனக்கான ஆதரவை அதிகரித்துக் கொள்ளத்தான் முடியும், ஷெல்டன் போன்றோர் பங்கு பெறும் அறிவு விவாதத்தில் உருப்படியான பங்களிப்பினை செய்ய முடியாது.
  அவரும் இந்த்துவாதிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.