ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது:
“வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க. இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் டார்ச் லைட் எடுத்துட்டு கதவ தொறந்தேன். அப்போ போலீஸ்காரங்க நின்னாங்க. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்னு கேட்டாங்க. எனக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு சொன்னேன். இப்படி பேசிக்கிட்டிருக்கும்போது, உங்க பிள்ளை என்ன பண்ணிருக்கான் பாருங்கன்னு கூப்டுட்டு போனாங்க.
அவன் படுத்திருந்த இடத்துக்கு போயி பார்த்தா, அங்க ஒரு போலிஸ்காரர் கால்மேல அப்படியே தலை தொங்கிப் போயி கிடந்தான். கழுத்துல ரத்தம் வழிஞ்சது. அவன் செத்துட்டான்னுதான் நினைச்சேன். சுத்தி நின்ன ரெண்டு பேர் அவனை போட்டோ எடுத்தாங்க. அவனை அந்த நிலையில பார்த்ததும் நான் மயங்கி விழுந்துட்டேன்.
என்னை சொந்தக்காரங்கதான் தூக்கிட்டுவந்து திண்ணையில படுக்கவெச்சாங்க. ராம்குமாரை அப்படியே போலீஸ் வேன்ல கூப்டுட்டு போனாங்க. என் பெரிய பொண்ணையும் வீட்டம்மாவையும் கூட கூப்டுட்டு போனாங்க” என்று தெரிவிக்கும் பரமசிவம், ராம்குமார் அரியர்ஸ் எழுதவே சென்னை சென்றதாகவும் மாதம் ஒரு முறை செலவுக்கு பணம் வாங்க வீட்டுக்கு வருவார் எனவும் தெரிவிக்கிறார்.
“என் பையன் வழக்கமா வர்றமாதிரிதான் வந்தான். சம்பளம் போட்டவுடனே தர்றப்பான்னு சொன்னேன். அவனும் வீட்ல வழக்கமா இருக்கமாதிரிதான் இருந்தான். அவன் தப்பு செஞ்சிருந்தான்னா அவன் தைரியமா இருந்திருக்க முடியுமா? போலீஸ்காரங்க ஊருக்குள்ள வர்றாங்க போறாங்க. அவங்க முன்னாடியேதான் ஆடு மேய்க்கப் போறான் வர்றான். தப்பு செஞ்சவனால இதைச் செய்ய முடியுமா?” என்கிறார். ராம்குமாரைக் காப்பாற்ற முயற்சிப்பீர்களாக என்பதற்கு விரக்தியான பதிலைத் தருகிறார் பரமசிவம்.
“அவன் ராமராஜ் புள்ள (ராம்குமார் தரப்பு வழக்கறிஞர்). அவர் பாத்து எது செஞ்சாலும் சரி. நான் அவனை மறந்துட்டேன். எனக்கு ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்கு. அவங்களை காப்பாத்தணும். எனக்கு இருக்கிற கஷ்டத்துக்கு கோர்ட் கேஸுன்னு அலைய முடியுமா?” என கண்கலங்குகிறார்.