எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்குகிறார்.
இதுகுறித்து தனது முகநூலில் இரா. முருகவேள் செய்துள்ள அறிவிப்பு:
“தோழர் திருப்பூர் குணா சொன்னது உண்மையாகிவிட்டது. அவள் பெயர் தமிழரசி இயக்குநர் மீரா கதிரவன் மிளிர் கல் நாவலைத் திரைப்படமாக எடுக்க உள்ளார். தோழர் திருப்பூர் குணாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
எரியும் பனிக்காடு – பரதேசி பிரச்சினை சண்டைக்குப் பிறகு தமிழ் சினிமா நமக்கு ஒத்து வராது என்று கருதியிருந்தேன். மீரா கதிரவன் அறிமுகம் கிடைத்ததும் அந்த எண்ணம் மாறிவிட்டது.
மிகுந்த மகிழ்ச்சி”.
கொங்கு மண்டலங்களில் கிடைக்கும் ரத்தினக் கற்கள் பின்னணியில் வரலாற்றுப் பதிவுகளையும் இணைத்து எழுதப்பட்ட நாவல் ‘மிளிர்கல்’. பொன்னுலகம் பதிப்பகம் வெளியிட்ட இந்நாவலுக்கு தமிழ் வாசகர்கள் சிறந்த வரவேற்பு அளித்துள்ளனர். தற்போது நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது இந்நாவல்.