
(ஒரு கருத்தரங்கில் ‘இந்துத்துவமும் பொருளியலும்’ எனும் தலைப்பில் பேசியது)
பொருளியல் (economics) என்பது இன்று எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில் பொருளியல் குறித்த ஒருநாள் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பொருளியல் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் எனக் கருத்தப்பட்ட இடதுசாரிகளும் கூட இன்று மிக வேகமாக இந்தியப் பொருளாதாரம் அந்நியமூலதனத்துடன் பிணைக்கப்படும் சூழலில் அதிர்ந்துபோய் வாயடைத்துப் போயிருக்கும் சூழல்தான் இன்று நிலவுகிறது.
பொதுப்புலத்தில் இன்று பொருளாதாரம் ஒரு பேச்சுப் பொருளாக இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் அது என்றைக்குமே அது உரிய முக்கியத்துவம் பெற்றதில்லை. சாதி, மதம், இனம் சார்ந்த அடையாளங்களின் அடிப்படையில்தான் இங்கு அரசியலும் விவாதங்களும் இங்கு மையங் கொண்டிருந்தன.
இந்த அடையாளங்கள் குறித்த விவாதங்கள் முக்கியமற்றவை என நான் சொல்ல வரவில்லை. ஆனால் இந்த விவாதங்களும் பிரச்சினைகளெல்லாம் பொருளியலிலிருந்து தனித்தவை அல்ல. பொருளியலை முற்றாகக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விட்டு இவற்றை மட்டும் பேசுவது பெரும் ஆபத்து.
ஆனால், இன்று என்ன நடந்து கொண்டு உள்ளது. முகநூல் முதலான சமூக ஊடகங்கள் உள்ளிட்டு எங்கும் இன்று பொருளாதார நடவடிக்கைகள் ஒரு பிரச்சினையாகவே இல்லை. சென்ற வாரத்தில்தான் “ஆசியாவிலேயே அந்நிய மூலதனத்திற்கு அதிகமாகத் திறந்து விடப்பட்ட நாடாக இந்தியா ஆகியுள்ளது” எனச் சொல்லும்படியான சில பொருளாதார நடவடிக்கைகள் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது குறித்து ஒரு ஜீவன் கூட வாய் திறக்கவில்லை. ஆனால் சுவாதி கொலை பற்றிப் பேசாதவர்கள் இல்லை. மோடி தினந்தோறும் வெளிநாட்டு அரசுகளுடனும் கார்பொரேட்களுடனும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டே இருக்கிறார். கல்வி தொடர்பான ‘காட்’ ஒப்பந்தத்தில் இன்று மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. கல்வி இப்போது பன்னாட்டு நிறுவனங்களின் ‘வணிகப் பொருள்’ ஆக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவுடன் செய்த அணு ஒப்பந்தத்தில் விபத்து இழப்பீட்டுப் பொறுப்பிலிருந்து அந்நிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் முன்னதாகக் கூட அதானி நிறுவனத்திற்கு சுற்றுச் சூழல் விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட 200 கோடி ரூ அபராதம் நீக்கப்பட்டுள்ளது. மோடி அதிகாரத்திற்கு வந்தபின் அதானி நிறுவனங்களின் சொத்து மதிப்பு நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இப்படி ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் இது குறித்தெல்லாம் எந்த விவாதமும் இங்கு பொதுப்புலத்தில் நடைபெறவில்லை.
இது ஒரு சாதாரண பிரச்சினை இல்லை. மிகவும் ஆபத்தான சூழல் இது.
பாசிசம் எப்போதும் வன்முறையாகத் திணிக்கப்படுகிற ஒன்று அல்ல. அது ஒரு வகையில் பெரும்பாலானவர்களின் ஒப்புதலுடன் தான் அரங்கேறுகிறது. 1930 களில் ஐரோப்பாவில் தலை எடுத்த classical fascism ஆனாலும் சரி, இன்றும், 1998 லும் இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்துத்துவமும் சரி இரண்டுமே இப்படி மக்கள் ஆதரவுடன்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இந்தத் தருணங்களில் சில பொதுவான கூறுகளை நாம் அடையாளம் காண இயலும். அவை:
1.இடதுசாரிகள் பலமிழந்திருப்பர். 2. ஓரளவு தாராள மனப்பாங்குடைய, பாசிசத்திற்கு இடங்கொடாத அரசியல் கட்சி உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் திராணியற்றதாகவும், ஊழல் மலிந்ததாகவும் பெயரெடுத்திருக்கும். 3. பாசிச சக்திகள் ஒரு ‘மாற்று’ என ஏற்கும் மனநிலை ஒன்று பரவலாக உருப்பெற்றிருக்கும். ஜெர்மனியில் ஹிட்லர் மேலெழுந்த சூழலில் இந்த மூன்று அம்சங்களும் பொருந்திப் போவதை இது குறித்துப் படிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள இயலும். 1998 ல் தேவகவுடா தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் 2014ல் மன்மோகன் சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசையும் இப்படி அன்றைய வெய்மார் குடியரசுடன் ஒப்பிட்டு விடலாம்.
இன்று மிகப் பெரிய அளவில் மத்தியதர வர்கம் வீங்கிப் பெருத்துள்ளது. கிட்டத்தட்ட 15 சதம் அளவு உள்ளது. IT துறை முதலியவற்றின் ஊடாக உருப்பெற்றுள்ள மத்தியதர வர்கம் ஏழ்மை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம், இட ஒதுக்கீடு, தொழிற்சங்க உரிமைகள் முதலான அரசியலை வெறுக்கின்றது. இந்தியாவின் பின்னடைவுகளுக்கு இவையே காரணம் என அது நினைக்கிறது. இவர்கள் எளிதில் நரேந்திர மோடியை ஒரு உருப்படியான மாற்று என ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்த மட்டில் வெறும் பேச்சுக்கள்.
இந்தப் பின்னணியில்தான் இந்துத்துவம் இங்கே ஆட்சி அதிகாரத்தை இரு முறையும் (1998, 2014) கைப்பற்றியுள்ளது.
இரண்டு
1991 ல் இங்கே பொருளாதாரம் அந்நியமூலதனத்திற்குத் திறந்துவிடப்பட்டது. அப்போது இந்தியாவில் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது?
எண்ணை விலை ஏற்றத்தின் விளைவாகவும், மூலதன வாய்ப்புகள் சுருங்கியதாலும் இந்தியா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்தது. Fiscal மற்றும் current account களில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட வெளி நாட்டுக் கடன்களைக் கட்ட முடியாமல் திணறும் நிலையை குறைந்த பட்சம் இரண்டு தடவைகள் இந்தியா சந்திக்க நேர்ந்தது. செலவினங்களில் பெருங் குறைப்பு. ரூபாய் மடிப்பு 20 சதம் குறைப்பு முதலியவற்றை இந்தியா சந்திக்க நேர்ந்தது. IMF க்குக் கட்ட வேண்டிய நிலுவைத் தொகை 1.6 பில்லியன் டாலர் அளவு உயர்ந்தது.
கட்டுமானத் தகவமைப்பு நடவடிக்கைகள் (structural adjustment programmes), புதிய பொருளாதாரக் கொள்கை, சுங்க வரி வீதக் குறைப்பு என்பதாக இந்தியப் பொருளாதாரம் நரசிம்மா ராவ் அரசால் அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடப்பட்ட நிகழ்வு இந்தப் பின்னணியில்தான் நிகழ்ந்தது.
இந்த நிலையில்தான் மேற்சொன்னவாறு பாஜக முதல் முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது அதன் முன் இருந்த மூன்று தேர்வுகளை இப்படிச் சொல்லலாம்.
1.தங்களது சுதேசியக் கொள்கைக்கு ஏற்ப முந்தை அரசால் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த பொருளாதாரத் திறப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
2.ஏற்கனவே முந்தைய அரசுகள் மேற்கொண்டிருந்த இந்தப் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்திருகலாம்.
3.இன்னும் தீவிரமாக இந்தியப் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டிருக்கலாம்.
அன்றைய சூழல் எப்படி இருந்தது. நரசிம்மாராவ் காலந் தொடங்கி மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருந்தன என்றே கொள்வோம். மிகப் பெரிய அளவில் மேலை நாடுகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படுவதை பா.ஜ.க அரசு எதிர்கொள்ளத் தயங்கி இருந்தால் அதைக் கூட நாம் புரிந்து கொள்ள இயலும்.
அந்தத் தயக்கத்தின் விளைவாக அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? முன்னதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு தொடர்ந்திருக்க வேண்டும். அதாவது முன் குறிப்பிட்ட மூன்று தேர்வுகளில் இரண்டாவதை அது தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
ஆனால் வாஜ்பேயி தலைமையில் இருந்த பா.ஜ.க அரசு என்ன செய்தது?
மூன்றாவது தேர்வை, அதாவது நரசிம்மாராவ் தொடங்கி வைத்த பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்துவது எனும் நிலையை அது எடுத்தது.
தனது அந்நிய எதிர்ப்பு, சுதேசி வாய் வீச்சுக்கள் ஆகிய அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக அந்நிய மூலதனத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்து விடும் நிலையை அவ்வளவு சாதாரணமாக எப்படி இந்துத்துவத்தால் எடுக்க முடிந்தது?
ஏன் அதற்குப் பெரிய எதிர்ப்புகள் உள்ளிருந்து வரவில்லை?
தீவிர சுதேசியம் பேசியவர்கள் எங்கு போனார்கள்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் விளங்க நாம் இந்துத்துவத்தின் ‘தேசியம்’ குறித்த அணுகல் முறையைச் சற்று ஆழமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.
அ. மார்க்ஸ், ஓய்வுபெற்ற பேராசிரியர்; எழுத்தாளர். இவருடைய சமீபத்திய நூல் ‘ பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்’ உயிர்மை வெளியீடு.
அ.மார்க்ஸ் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடிய பேரறிஞர் :). 1996-98ல் ஆட்சியில் இருந்த அரசும் தாராளவாத பொருளாதார கொள்கைகளை கடைப்பிடித்தது. முதலில் தேவ கொளடா, பின் குஜ்ரால் பிரதமராக இருந்தனர். 1998ல் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது. இந்த்துவத்தை ஆதரிப்பவர்கள் எல்லோரும் சுதேசிய பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.இடதுசாரிகள் பங்குபெற்ற/ஆதரித்த அரசே நரசிம்மராவ் துவக்கிய தாரளமயமாக்கலை மறுத்து அதற்கு முன்னர் இருந்த ’சோசலிச’ பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்கவில்லையே, அது ஏன் என்பதை அ.மார்க்ஸ் விளக்குவாரா.
LikeLike