ராம்குமாரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆனால் அவரை குற்றவாளி என போலீஸ் சொன்னதும் அப்படியே நம்பிவிடுகிறீர்கள். போலீசைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்… எப்படி?
ராம்குமார் மேய்த்த ஆடு, அவரது பக்கத்துவீடு, படித்த பள்ளி என ஒரு இடம் விடாமல் விசாரிக்கும் ஊடகங்கள், கொலை நடந்தபோது அங்கே நின்ற மக்களிடம் (மற்றும் துரத்திச்சென்ற இருவரிடமும்) கொலை செய்த நபரது அங்க அடையாளங்களை ஏன் விசாரிக்கவில்லை? ஒருவேளை அப்படி விசாரித்திருந்தால் அவை ராம்குமாரின் அடையாளத்தோடு ஒத்துப் போகிறதா என உறுதி செய்ய உதவியிருக்கும். அந்த அறிவு ஊடகங்களுக்கு இல்லையா அல்லது விருப்பம் இல்லையா?
ராம்குமார் முகநூலில் இயங்கி பல மாதங்கள் ஆகிறது என்றும், வாட்ஸ்சப் செயல்பாடுகள் மிகக்குறைவு என்றும் தெளிவான விவரங்களை காணமுடிகிறது, ஆனால் அவர் ஃபேஸ்புக் மூலம் ஸ்வாதியோடு நட்பானார் என்றும் வாட்ஸ்சப் மூலம் பேசினார் என்றும் செய்திகள் எப்படி உற்பத்தியாகின்றன?
ஆர்டர் கொடுத்து சாப்பிட போலீஸ் கஸ்டடி ஒன்றும் சரவணபவன் அல்ல.. போலீஸ் காவலில் ஒருவனால் சம்மனமிட்டுகூட உட்கார முடியாது. அவர்கள் கொடுப்பதைத்தான் சாப்பிட்டாக வேண்டும். அந்த யதார்த்தம் பற்றிய கவலையே இல்லாமல் ராம்குமார் பிரியாணி சாப்பிட்டான், இடியாப்பம் சாப்பிட்டான் என விவரிப்பதற்கான அவசியம் என்ன?
ஒரு பெண்ணுக்கு நல்ல குணமே இல்லாவிட்டாலும் அவளுக்கு வாழும் தகுதி உண்டு, ஒரு ஆண் எத்தனை நல்லவனாக இருப்பினும் அவனது குற்றங்கள் மன்னிக்கப்படக்கூடாது. ஒரு குற்றத்தை இப்படித்தான் பார்க்க வேண்டும். ஆனால் இங்கே ஸ்வாதியை மகிமைப்படுத்தவும் குற்றம் சாட்டப்பட்டவரை கொடூரமானவராக காட்டவும் தொடர் முயற்சிகள் நடக்கின்றன.. இறந்தவர் மீது கருணை காட்டவேண்டும் என வாதிட்டால், ஸ்வாதி கொல்லப்பட்ட அன்று தன் மூன்று மகள்களோடு கொல்லப்பட்ட ஒரு தாய் ஏன் கள்ளக்காதலி என விளிக்கப்பட்டார்,?
இத்தனைக்கும் அவர் கணவரை பிரிந்த பிறகுதான் இன்னொருவருடன் வாழ்ந்திருக்கிறார். அந்த இரண்டாவது கணவர் எப்படி மகள்களிடம் பாலியல் வன்முறை செய்தார் என அரைபக்க அளவு விவரிக்கின்றன அச்சு ஊடகங்கள்… கொல்லப்பட்ட ஒருவரை மகிமைப்படுத்தவும் இன்னொருவரை வார்த்தைகளால் ரேப் செய்யவும் ஒரே நாளில் உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? இப்படி பிரிப்பதற்கான தகுதிகள் என்னென்ன?
கேள்விகளுக்கு பதில் வரப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, மோடியும், ஜெயலலிதாவும் ஆட்சியில் உள்ளவரை இவர்கள் அரசை சிக்கலுக்கு உள்ளாக்கும் எந்த செய்தியையும் பெரிய விவாதத்துக்கு கொண்டுவரப்போவதில்லை. ஆகவே ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஆக்கிரமிக்கும் வண்ணம் இவர்கள் தொடர்ந்து செய்தியை உருவாக்குவார்கள் என்பது நிச்சயம்.
வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.