எனக்கு வெகு நாள் ஆசை கனவு என்றே கூறலாம். ஆம் திருநர்களின் கல்வி பாதியிலேயே முடிந்து விடுகிறது அப்படி முடியக் கூடாது ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ தன் சுய அடையாளத்தோடு பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பதுதான். அது நடக்க பல ஆண்டுகள் ஆகுமோ என்பதை தகர்த்தெரிந்துவிட்டார் தாரிகா பானு. இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்பு பாலின மாற்றம் செய்ய வேண்டும் என என்னிடம் கேட்டுகொண்டார். அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்த பின்னர் மேற்கொண்டு எனக்கு படிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுகொண்டார்.
நானும் யோசித்தேன் உச்சநீதிமன்றம் நமக்கு உரிமை வழங்கியிருக்கிறது முயற்சி செய்து பாக்கலாம் என்று கடந்து ஒரு மாதத்திற்கு முன் எங்களுக்கு அருகாமையில் உள்ள பல அரசு பள்ளிகளில் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அறிவியல் பாடப்பிரிவு இங்கே இல்லை ஆங்கில வழி தான் இருக்கிறது என்று சொல்லிவைத்தாற்போல் பதில் கூறினர். இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அதன்பின்புதான் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலருக்கும் மற்றும் தலைமை செயலாளருக்கும் மனு அனுப்பினோம்.
எந்த வித பதிலும் இல்லாததால் நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட முதன்மை அலுவலரை சந்திக்க நேதில் சென்றோம். அதிகாரி இல்லை என வழக்கம் போல பதில் அழித்தார்கள் அவர்கள் நடத்தையில் வழக்கமான அலட்சியப்பார்வை தெரிந்தது. நான், “எங்கள் பகுதி அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் அந்த பாடப்பிரிவு இருக்கிறது. அவர்கள் எங்களிடம் பொய் சொல்கிறார்கள்” என்று முதன்மை அலுவலர் உதவியாளரிடம் கூறினேன் அவரும் ” அந்த பள்ளியில் அறிவியல் பாடப்பிரிவு தமிழ் வழி இல்லை என்று கூறினார். “நீங்களும் ஏன் பொய்கூறுகிறீர்கள் பள்ளியில் சேத்துக்க முடியாதுனா முடியாதுனு சொல்லுங்க அதவிட்டுட்டு ஏன் இப்படி பொய் சொல்றீங்க” என்று கேட்டேன் . அவர் பதிலே கூறாமல் சென்றுவிட்டார்.
நான் இதற்கு மேல் முடியாது என்று தர்ணா போராட்டதில் ஈடுபட்டோம். விடயம் வெளியுலகத்துக்கு தெரிந்து விட்டதை அறிந்த அவர்கள் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் நீங்கள் ஆண்-பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் கேட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை பெண்கள் பள்ளியில் கேட்கிறதால் எங்காளால் முடியாது என்றார்கள். நான் மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தேன்.
பெண்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். உங்களால் சக மாணவிகளுக்கு எந்த பிரச்சனையும் வராது என்று எழுதிகொடுங்கள் என்றனர். நான் நீங்கள் எனக்கு எழுதி கொடுங்கள் உங்களால் இந்த திருநங்கைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று கூறினேன். பின்னர் வெகுநேர விவாதத்திற்கு பிறகு ஒரு வழியாக பள்ளியில் சேர்க்க ஆணை வழங்கினார்கள் .
இப்படி ஒவ்வொரு கட்டமும் வாழ்வில் போராடிதான் வெற்றி பெறுகிறோம். ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நாவென்னும் அறிவாளால் என் ஒவ்வொரு அங்கத்தையும் வெட்டியதுபோல் இருந்தது. ஆசிரியர்கள் இவ்வளவு புரிதல் இல்லாதவர்களா என்று என்னை தேற்றிகொண்டு வீடு திரும்பினேன்.