“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன்

அ. குமரேசன்
அ. குமரேசன்
ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை.

அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் ஆராயப்பட வேண்டாமா? அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய அரசியல் – சமுதாய காரணிகள் பற்றிய விவாதங்கள் நடக்க வேண்டாமா?

மத மோதலாக. சாதிப் பகைமையாக மாற்ற நடக்கும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டுச் சிந்தித்தால், ஒரு பெண் தன் காதலை ஏற்கவில்லை என்பதற்காக ஒரு ஆண் அவளைக் கொலை செய்கிறான் என்பதே விவாதிக்கப்பட வேண்டும். பெண்ணை மனிதப் பிறவியாகக் கருதாமல் தன் உடைமைப் பொருளாகக் கருதுகிற ஆணாதிக்கப் புத்தி, எல்லா மதத்திலும் எல்லா சாதியிலும் புரையோடிப்போயிருக்கிறது.

தனது நுகர்வுப் பொருளான கைப்பேசி தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வேலை செய்யவில்லை என்றால் அதைத் தூக்கிப் போட்டு உடைக்கிற வன்ம மன நிலையைப் போன்றதே இது. தன் விருப்பத்திற்கு இணக்கம் தெரிவிக்காத பெண்ணைச் சிதைக்கிற மனநிலை காலங்காலமாக இதுதான் ஆணின் கம்பீரம் என்பது போன்ற சிந்தனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது,

காதல் எதிர்ப்பு சமுதாயத்தில் ஆழமாக ஊறிப்போயிருக்கிறது. அதுவே சாதி அல்லது மத ஆணவக்கொலைகளுக்கு இட்டுச்செல்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெண், வேறு வழியே இல்லாதவளாகத் தன் காதலனோடு ஊரைவிட்டு வெளியேறினாள். அவளுடைய பெற்றோர் இன்னொரு கொடுமையையும் செய்தார்கள். அந்தப் பெண்ணின் தங்கை இனிமேல் கல்லூரிக்குப் போக வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள் – அவளும் காதல் கீதல் என்று கெட்டுப்போய்விடக்கூடாதாம்! இதுவும் ஒருவகையான ஆணவக்கொலையே அல்லவா?

காதல் எதிர்ப்பு எப்படி சமுதாயத்தில் ஊறிப்போனதாக ஆணவக்கொலைகளுக்கு இட்டுச்செல்கிறதோ அதே போல, காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான, குதர்க்கமான கற்பிதங்கள் இந்த வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன.

குற்றவாளியிடம் அரிவாள் இருந்ததால் அவனைத் தடுக்கிற தைரியம் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது ஏன் என்று கேட்கப்படுகிறது. உயிரச்சம் என்பது ஒன்றும் தவறானதல்ல. எதிராளியிடம் அரிவாளோ கத்தியோ வேறு ஆயுதமோ இருக்கிறபோதும் துணிச்சலாகப் பாய்ந்து தடுக்க அல்லது ஆளைப் பிடிக்க இது ஒன்றும் சினிமா நாயக சாகசக் காட்சி அல்ல. வாழ்க்கை. ஆகவே, தனி மனிதர்களாக எதிர் நடவடிக்கை எடுப்பதை எதிர்பார்ப்பதற்கில்லை.

தேவைப்படுவது கூட்டாகச் செயல்படுகிற உணர்வுதான். கூட்டுச் செயல்பாடுகளால்தான் சமுதாயம் முன்னேறி வளர்ந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு அந்தக் கூட்டு உணர்வு, கூட்டுச்செயல்பாடு என்பதெல்லாம் அரிக்கப்பட்டிருக்கிறது. அவரவரும் தமது சுயநலம், தமது சொந்தப் பாதுகாப்பு, சொந்த முன்னேற்றம் என்பதோடு சுருங்கியிருக்கச் செய்யப்பட்டிருககிறார்கள். அவ்வாறு மனிதர்களின் கூட்டுச் சிந்தனையைக் குலைத்து, தனித்தனி ஆட்களாகச் சுருக்கியதில் உலகளாவிய முதலாளித்துவம் தற்போதைக்கு வெற்றி பெற்றிருக்கிறது. நாங்கள், எங்களுக்கு என்றெல்லாம் யோசிக்க விடாமல், நான், எனக்கு என்று பேசவைத்திருக்கிறது.

ஆகவேதான், ஆணாதிக்க எதிர்ப்பு, பெண்விடுதலை, பகுத்தறிவு, மதவெறி தகர்ப்பு, சாதிப் பாகுபாட்டு ஒழிப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட போராட்டங்கள் உலகமய முதலாளித்துவச் சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்களோடும் இணைய வேண்டியிருக்கிறது. சுரண்டலுக்கு எதிரான இயக்கங்கள் இந்தப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களோடும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கூட்டுப் போராட்டத்திலிருந்தே கூட்டு மனசாட்சியும் கூட்டுச் செயல்பாட்டு உணர்வும் மேலோங்கும்.

-சென்னை பெரியார் திடல் அரங்கில், ஞாயிறன்று (ஜூலை 3) நடைபெற்ற சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் குழு (SMAG) கூட்டத்தில், ‘பெண்கள் மீதான வன்கொடுமை, கொலையாகும் பெண்கள்’ என்ற விவாதப்பொருள் மீது நடந்த கலந்துரையாடலில் நான் கூறிய கருத்துகளின் சாரம்.

அ.குமரேசன், ஊடகவியலாளர்.

One thought on ““காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

  1. ஆக இறுதியில் முதலாளித்துவ எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய இடதுசாரிகளுக்கு இன்னொரு நிகழ்வு. இப்படி சிந்திக்கும் இடதுசாரிகள் இருக்கும் வரை இடதுசாரி இயக்கங்கள் மக்களிடம் செல்வாக்கு பெறப் போவதில்லை. எதற்கெடுத்தாலும் முதலாளித்துவம், சாதி/மதம் என்று காரணிகளை சொல்லிவிட்டு ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் என்று குரல் எழுப்பும் அபத்தம் இன்னும் இவர்களுக்கு புரியவில்லையா?

    “அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை.
    அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகிற மற்றவர்கள் எளிதில் தப்பித்து சுதந்திரமாக உலாவிக்கொண்டிருக்க, ஒதுக்கப்பட்ட, சமூக அடிப்படையிலும் பொருளாதாரத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களிடையே இப்படிப்பட்ட குற்ற மனநிலை கொண்டவர்களும் உருவாவது எப்படி? அந்த சமூகப் பொருளாதார உளவியல் ஆராயப்பட வேண்டாமா? ”

    இதே போல் லஞ்சம்,ஊழல் மற்றும் அனைத்து குற்றங்களுக்கும் சமூக பொருளாதார காரணிகளை கண்டுபிடித்துவிட்டால் யாரும் குற்றவாளிகள் இல்லை, சமூக பொருளாதார காரணிகளேதான் குற்றவாளிகள் என்று எழுதிவிடலாமே. ராம் குமார் பற்றிய இதே அணுகுமுறையை கோகுல்ராஜ் பற்றி எழுதும் போதோ அல்லது சாதி ஆணவக் கொலைகள் பற்றி எழுதும்போதோ பின்பற்றினீர்களா.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.