மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார்
இந்நிலையில் சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவரின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும்?
போலீஸ்காரன் கெடுபிடி, மேலிடம், மந்திரி கெடுபிடி, அவர்கள் கொடுக்கும் அழுத்தம், இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த நெருக்கடி மிகுந்த சூழலில் ஒரு மருத்துவன் என்ன செய்ய வேண்டும் எதன் அடிப்படையில் செயல்பட வேண்டும்?
நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நமக்கென்று மருத்துவ அறம் சார் விசயங்கள் இருக்கின்றன, மருத்துவர்களாகிய நாம் இ.ம.சவின் உறுப்பினர்கள், மேலும் நாம் உலக மருத்துவ சங்கத்தின் டோக்கியோ உடன்படிக்கைப்படியே இந்த நெருக்கடி நிறைந்த சூழலில் நாம் செயல்படவேண்டும்.
1. அழைத்துவரப்படும் நபர் ஒரு போர்க்குற்றவாளியாகவோ, ஆயுதம் தாங்கிய போராடும் அமைப்பின் உறுப்பினராகவோ, சிவில் சமூகப் போராளியாகவோ, அல்லது ஒரு குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவரானாலும், குற்றவாளி, குற்றம்சுமத்தப்பட்டவர், விசாரணைக் கைதியானாலும்….எவரானாலும் அந்த நபரின் தனிப்பட்ட நம்பிக்கைகள், காரணங்கள் எதுவாகிலும் ஒரு மருத்துவன் அந்த நபரை சித்தரவதைக்கு உட்படுத்த, மனித நேயமற்ற முறையில் நடத்துவற்கு ஒப்புதல் அளிக்கவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தயக்கத்துடனோ, முழுமனதுடனோ சித்திரவதையில் ஈடுபடக்கூடாது.
2. ஒரு மருத்துவன் தன் அறிவு, திறன், அறிவியல் செயல்முறையை ஒரு நபரை சித்தரவதை செய்யவோ, மனிதாபிமான மற்றமுறையில் நடத்தவோ பயன்படுத்தக்கூடாது.
3. ஒரு மருத்துவன் தன்னுடைய மருத்துவ அறிவை, ஒருவரை சட்டப்பூர்வ/ சட்டத்திற்கு புறம்பான விசாரணைக்கோ, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அந்த நபரை தயார்படுத்தவோ பயன்படுத்தக்கூடாது.
4. தன்னுடைய பொறுப்பின் கீழ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் ஒரு நோயாளியின் மருத்துவ சிகிச்சை, எவ்வளவு நாள் மருத்துவமனையில் தங்கவேண்டும், எப்போது உடல் நலம் தேறும் என்பதை தீர்மானித்து முடிவெடுக்கும் முழு சுதந்திரம் மருத்துவருக்கு இருக்கவேண்டும்.
சக மனிதனின் துயர் துடைக்கும் தலையாயக் கடமையே ஒரு மருத்துவனின் மிக முக்கிய அடிப்படை பங்காகும். அந்த உயரிய கடமையை செயல்படுத்தத் தடையாக ஏதோ தனிமனித/கூட்டுத் தலையீடுகளின் காரணிகள் இருப்பினும் துயர்துடைக்கும் உயரியக்கடமையை செயல்படுத்தவேண்டும். அதை மனதில் நிறுத்தவேண்டும்!
எனவே ராம்குமார், காவல் துறையின் பார்வையில், ஊடக நண்பர்களின் பார்வையில் ஒரு குற்றவாளி. நெல்லை மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்களின் பார்வையில் அவர் ஒரு நோயாளி அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டிய பொறுப்பு, கடமை அவர்களுக்கு உண்டு,
மேலும் சிகிச்சை என்பது, அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை என்பது மட்டும் கிடையாது, அவரின் அறுவை புண் ஆறி, ரணங்கள் குறைந்து உடல் நிலை தேற்றி அனுப்பவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு, இது அவர்களுக்கும் தெரியும்.
ஆனால் போலீஸ் கெடுபிடி, அரசியல் தலையீடு இருக்கும் இந்த வழக்கில் மருத்துவர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய அழுத்தம் இருக்கும். அந்த நெருக்கடிகளுக்கு மருத்துவர்களாகிய நாம் இடம் கொடுக்கக் கூடாது.
உலக மருத்துவ சங்கத்தின் டோக்கியோ உடன்படிக்கையின்படி ஒரு நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க எந்தவித தலையீடு வந்தாலும் ( தனிமனித, அரசியல்) சிகிச்சையை தீர்மானிக்கும் முழுசுதந்திரமும், அந்த சுதந்திரம் நோயாளியின் துயர் துடைத்து அவரின் நலன் பேணும் மிகச்சீரிய கடமையை, பொறுப்பை செயல்படுத்தவும் மருத்துவர்கள் விழையவேண்டும்!
நாம் நெல்லை மருத்துவர்கள் பக்கம் நிற்போம்
மருத்துவ அறம் காப்போம்!