
டிஎஸ்பி விஷ்ணு பிரியா மரணமடைந்த போது அவர் விசாரித்து வந்தது கோகுல்ராஜ் கொலை வழக்காகும். அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக யுவராஜ் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அதன் பிறகு போலீசால் தீவிரமாக தேடப்பட்டு வந்த யுவராஜ் வாட்சப்பில் பேசுவது, பத்திரிக்கைகளில் பேட்டி கொடுப்பது, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுவது என பல மாதங்கள் ‘தலைமறைவாக’ இருந்தான். பின்னர், தான் இந்த தேதியில் சரணடையப் போகிறேன் என்று அறிவித்துவிட்டு ஆட்டம் கொண்டாட்டமாக பெரும் கூட்டத்தை கூட்டி சரணடைந்தான். இந்த வழக்கில் நடந்ததைப் போன்ற கேலி கூத்துகள் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது. இன்றும் கூட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி கோகுல்ராஜ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி யுவராஜை பேட்டி எடுத்து எக்ஸ்குளூசிவ் செய்தி என போடுகிறது ஒரு தொலைக்காட்சி. இதே போன்றதொரு வாய்ப்பை ஸ்வாதியை கொன்றவர்களுக்கும் இந்த ஊடகங்கள் வழங்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்த பட்டப்பகல் துணிகர படுகொலைகளுக்கு யுவராஜ் போன்ற ஊரறிந்த பொறுக்கிகளுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.
கோகுல்ராஜின் கொலை வழக்கை தொடக்கத்திலேயே மூடிமறைக்க திட்டமிட்டது போலீசும், அரசு நிர்வாகமும் ஆனால் விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய சமரசமற்ற தொடர் போராட்டத்தினால் தான் கோகுல்ராஜ் தலை வெட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டான் என்னும் உண்மை வெளிவந்து யுவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. யுவராஜ் மீது 2015 ஜூலை 1ஆம் தேதி கொலை வழக்கு பதியப்பட்டதிலிருந்து அந்த வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணு பிரியாவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, விசாரணைக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. கோகுல்ராஜ் வழக்கை முன்வைத்து அவர் எப்படியெல்லாம் மேலதிகாரிகளால் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை விஷ்ணு பிரியாவின் தோழியான மற்றொரு டிஎஸ்பி கண்ணீரோடு ஊடகங்களிடம் சொன்னார்.
யுவராஜ் ‘தலைமறைவாக’ இருப்பதற்கு பல போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர் என்று பரவலாக அப்போது பேசப்பட்டது. இந்த பின்னணியை விசாரணை அதிகாரி விஷ்ணு பிரியா கண்டுபிடித்ததும் அவர் மரணத்துக்கு காரணமாக அமைந்தது என்று அவர் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அந்த சாதிய அதிகாரிகளை காப்பாற்றுவதற்குத்தான் தமிழக அரசு விஷ்ணு பிரியா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தது. ஒரு பிரச்சனையின் மூலத்தை அணுகாமல் எப்படி அதற்கு தீர்வு காண முடியும்? சாதி ஆணவ கொலைகள் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று சட்டமன்றத்திலேயே பொய்யான தகவலை சொன்னவர்கள் எப்படி நமக்கான நீதியை பெற்றுத் தருவார்கள் என நம்பலாம்? இந்த அடிப்படையில் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் சந்தேகத்துக்குரிய மரணத்திற்கும் கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதை நாம் பார்க்கலாம். விஷ்ணு பிரியாவுக்கான நீதி கோகுல்ராஜுக்கான நீதியில் புதைந்திருக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
(படம்: கொல்லப்பட்ட கோகுல்ராஜின் உடல் வைக்கப்பட்டிருந்த சேலம் அரசு மருத்துவமனையில் கோகுல்ராஜ் அண்ணனிடம் விசாரணை நடத்தும் டிஎஸ்பி விஷ்ணு பிரியா)