ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம் குமார், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த தென்காசி அருகே உள்ள தேன் பொத்தை மீனாட்சி புரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராம்குமார். வீட்டில் இவர் மூத்த மகன். இவருக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் உள்ளனர். அப்பா பரமசிவம் பிஎஸ்என்எல் ஊழியர். கிராமத்தைப் பொறுத்தவரை இவர் அமைதியான சுபாவம் உடையவராகவே சொல்லப்படுகிறார்.
ஆலங்குளத்தில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பை முடித்ததும் வேலை தேடி சென்னை வந்திருக்கிறார். சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டுக்கு எதிரே இருந்த மேன்ஷனில் இவர் தங்கியிருந்திருக்கிறார். அப்போது ஸ்வாதியின் மேல் காதல் வயப்பட்டதாகவும் அதை பலமுறை வெளிப்படுத்தி, ஸ்வாதி ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிக்கியது எப்படி?
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சுவாதியை கொன்ற கொலையாளியைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சுவாதியை கொலை செய்த ராம்குமார் அவரது செல்போனை எடுத்துச் சென்றதால் போலீஸ் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டது. கொலையாளி சூளைமேடு பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று குற்றவாளியின் புகைப்படத்தை காட்டி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
மேன்ஷனில் கிடைத்த தடயம்:
அந்தக் குறிப்பிட்ட மேன்ஷனின் பாதுகாவலரிடம் படத்தைக் காட்டி விசாரித்தபோது, இவரைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் தற்போது இங்கில்லை; ஊருக்குச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர். இதை வைத்து ராம்குமாரின் சொந்த ஊருக்கு விரைந்த போலீஸார் அவரை கண்காணித்துள்ளனர். ஆடு மெய்த்துவிட்டு வீடு திரும்பிய ராம்குமாரை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்துள்ளனர். அப்போது, விசாரணைக்கு பயந்து ராம்குமார் 10 இடங்களில் பிளேடால் தனது உடலில் கீறிக்கொண்டிருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி:
பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட ராம்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். சிகிச்சை முடிந்து தற்போது பேசும் நிலையில் இருப்பதாகவும், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.