கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி

நாச்சியாள் சுகந்தி

சுகந்தி நாச்சியாள்
சுகந்தி நாச்சியாள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அக்குடும்பத்தினிடரிடம் சொல்ல பதைபதைத்துப் போகிறது அக்குடும்பம். உடனே காவல்துரைக்கு செல்கிறார்கள். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான நம் காவல்துறை 2000 ரூபாயும் ஒரு செல்போனூம் அன்பளிப்பாக(?) வாங்கிக்கொண்டு செயல்பட ஆரம்பிக்கிறது நத்தை வேகத்தில். அதற்குள் அந்த புகைப்படங்கள் பரவ… மானம் போய்விட்டதே என்று வினுப்பிரியா தற்கொலை செய்துகொள்கிறார். வினுப்பிரியா ஒரு பட்டாதாரி. ஸ்வாதியும் ஒரு பட்டாதாரி. நன்கு படித்தவர்கள். ஸ்வாதி விஷயத்தில் ’ஆணவக்கொலை புகழ்’ ராமதாஸ் கூட ’அந்தப் பெண்ணை நடத்தைக்கொலை (character assassination) செய்யாதீர்கள்’ என அறிக்கைவிடுகிறார்.

இன்று பெண்கள் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டியுள்ளது. ’வெளியே வந்தால் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று குரல் எழுப்பும் அதே சமயத்தில்தான் வினுப்பிரியாவுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உடல் குதறப்பட்டு, தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்; தற்கொலையும் செய்துகொள்கிறார். ஆக, வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருந்தாலும் பெண்ணுக்கு எந்த வகையிலும் பாதுகாப்பு இல்லை.

இந்த கொலைக்கும், தற்கொலைக்கும் பெண்ணுடல் ஒன்றே பெரும் காரணமா? என்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 90களுக்கு முன்பு அதீத தொழிற்வளர்ச்சியும், நகரமயமாதலும் இல்லாத காலகட்டத்தில், பெண்கள் மீது இந்த அளவுக்கு வன்முறை நிச்சயமாக இருந்தது இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஆனால் உலகமயம், தொழில்மயம் என்கிற உலக வியாபர யுக்திகள் அழகழகான பெயரில் இந்தியாவுக்குள் பொருளாதரக் கொள்கைகளாக வந்தவுடன் மொத்த இந்திய சமூகத்தின் வாழ்வியல் மதிப்பீடுகளில் பெரும் மாற்றம் தினம் தினமும் உருவாகிக்கொண்டிருக்கிறது; நல்ல வாழ்வியல் மதிப்பீடுகள் சுவடுகள் இல்லாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. அதன் எதிரொலிதான் பார்க்கும் திசையெங்கும் கொலைகள்; கொள்ளைகள்.

குறிப்பாக, பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறத்தொடங்கின. பெண்கள் என்றாலே சிவப்பாக இருக்க வேண்டும் என்கிற வியாபார-சந்தை சிந்தனை இந்திய குக்கிராமங்கள் வரை ஷாம்பு, சிவப்பழகு க்ரீம் ஷாஸேக்களாக நடமாடத் தொடங்கின. ஆனால் இந்த சந்தை பெண் ஒரு போகப் பொருள், அழகுக்காக, படுக்கைக்காக படைக்கப்பட்ட வஸ்து என்கிற இந்திய- ஆணிய கருத்தாக்கத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திடமாக உருவாக்கியது. பெண்ணை பொதுவெளியில் நடமாட அனுமதித்தது. ஆனால், பெண் உடம்பில் கட்டப்பட்ட பொம்மலாட்டக் கயிற்றை ஆண் மையக் குடும்பம் இறுகப் பற்றியிருக்கிறது. அதனால் இறந்த பெண்ணின் நடத்தை குறித்து தூமைத் துணியென அலசுகிறது.

இந்தியா- தமிழக படைப்புலகமான சினிமா, தொலைக்காட்சி தொடர் நாடகங்கள், மொழிமாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் உள்பட வரவேற்பரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, பெண் ஒரு போகப்பொருள்… அதை உன் அதிகாரத்திலிருந்து வெளியே விட்டுவிடாதே என்பதை விதவிதமான காட்சிகளாலும் வசனங்களாலும் சொல்லிக்கொண்டிருக்கிறது. அதனால் ஆசைப்படுகிற பெண் கிடைக்கவிட்டால் ஆள் வைத்தாவது கொன்றுவிடு என்கிற செயல் மலிந்து, தினம் தினம் விதவிதமான கொலைகளாக வீதிதோறும் குடும்பம் தோறும் ரத்தக் கறையுடன், கலைந்த ஆடையுடன் கிடைக்கிறது.

தொழிற்வளர்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்று பெருமை பொங்க பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் பெண் என்கிற உயிரை உடம்பாக மட்டுமே பார்க்கும் கல்விமுறையைத்தான் இந்தியா முழுக்க உருவாக்கிவைத்திருக்கிறார்கள். பெண் எப்போதும் தன் உடம்பை மறைத்தே வாழ வேண்டும். பெண்ணின் உடல் அவயங்கள் வெளியே தெரிந்தால்… அவளுடைய கற்பு போகும். அதன்மூலம் குடும்ப மானம் போகும். பெண்ணின் உடலில்தான் மொத்தக் குடும்பத்துடைய மரியாதையும், அவள் பிறந்த சாதியின் மரியாதையும் அந்த ஊரின் மரியாதையும் இருக்கிறது என்பதை திரும்பத் திரும்ப பருத்திவீரன்கள் சொல்லிக்கொண்டே இருப்பதால்தான், தன்னுடைய உடல் பொதுவெளியில் யாரோ கயவர்களால் கேடுகெட்டத்தனமாக காட்டப்பட்டபோது, பெண்உடல்-கற்பு- மானம் போய்விட்டது என்கிற நாறிப்போன கருத்தாக்கத்தால் ஒரு பெண் தற்கொலை செய்திருக்கிறாள்.

காலம் காலமாக இந்திய சமூகம் பெண்ணுடலை இதே கற்பிதத்துடன் வளர்ப்பதுதான் இந்த கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் மூலகாரணம். அதனால்தான் அந்த உடலை கல்லூரியில் பாடம் எடுக்கும் பெண் ஆசிரியர்கள், மாணவ ஆண் மனத்துக்கு பயந்து சேலைக்கு மேல் கோட் போட்டு பூட்டிவைத்திருக்கிறார்கள்.

கண்காணிப்பு கேமிராக்களால் குற்றவாளியை கண்டுபிடிக்கமுடியும். ஆனால் குற்றவாளிகள் இல்லாத சமூகத்தை பள்ளியிலும், ஒவ்வொரு வீட்டிலும் தெருவிலும்தான் உருவாக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை எப்போது கற்றுக்கொள்ளபோகிறோம்? யார் கொடுக்கப் போகிறோம்?

நாச்சியாள் சுகந்தி, எழுத்தாளர்; ஊடகவியலாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.