ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John

 

ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் தொடங்குகிறது குற்றத்துக்கான சிந்தனை.

இந்த குற்றச்சிந்தனை பெருகுவதற்கு பல சமூக நடைமுறைகள் உதவுகின்றன. தடையிலிருந்து சுலபமாக வெளியே வர முடியாத அளவுக்கு அழுத்தம் தரும் சமூக நம்பிக்கைகள். சாதிகள், மதங்கள். அதை போற்றி பாதுகாக்கும் சட்டங்கள். பொருளாதார பிளவுகள். Commodification. பொதுப்புத்தியால் இயங்கும் ஊடகம். தன் லாபத்துக்காக ஊடகம் உருவாக்கும் பொதுப்புத்தி போன்றவை. அடிப்படையாக ஆண் புத்தி!

எல்லாவற்றுக்குமே ஆணை குறை சொல்லலாமா? பெண் திமிர் கொண்டு ஆடவே இல்லையா?

உண்டு. ஆனால் அங்கு நன்றாக ஆராய்ந்து பாருங்கள். அந்த பெண் கொண்டிருக்கும் திமிர், அடிப்படையில் ஒரு ஆணின் திமிராக இருக்கும். தந்தை, அண்ணன், தம்பி அல்லது கணவன், போன்ற ஆண்களின் திமிரை பிரதிநிதித்துவப்படுத்தும் தாயின் வழி திமிராக இருக்கும். கார்த்தி சுப்புராஜ் பாணியில் சொல்வதானால் “ஆம்பளத் திமிர் கொண்ட பொம்பளைகளுக்கு பிறந்த மகள்களாக’” இருப்பர். ஆணின் சொத்து, சாதி, மதம், அகங்காரம், அந்தஸ்து என இன்னும் ஆணின் இன்னபிற லொட்டு லொசுக்குகளை கட்டி காப்பாற்றும் ஆறு பெண்கள் கொண்ட குழு ஒன்று இயங்கும் குடும்பமாக அது இருக்கும்.

வேட்டைக்கு செல்பவனாக தானும், சுள்ளிகள் பொறுக்கி, சிறுதானியங்கள் பயிரிட்டு, குழந்தை பெற்று தருபவளாக மட்டும் பெண் இருக்க வேண்டும் என்கிற ஆணின் மனநிலை இது. மிகவும் பழமையான – விவசாயம் அறிமுகமான காலத்தைய – வீடு பெண்ணுக்கு உலகம் ஆணுக்கு என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையின் நீட்சி!

நகரத்தில் நிலப்பிரபுத்துவ சிந்தனையா?

ஆம்.

Touch me here if you dare என எழுதியிருக்கும் டிஷர்ட் அணிந்த பெண்ணை தொட்டு, ‘கற்றது தமிழ்’ பட நாயகனை அவமானப்படுத்த சொல்வது இந்த சிந்தனைதான். உலகமயமாக்கலில் தாக்குப் பிடிக்க முடியாமல் தேங்கிப் போனவன். தனக்கான வாய்ப்பை பறித்து உயரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை பார்த்ததும் அவன் ஆயுதமாக்குவது பழைய நிலபிரபுத்துவ சிந்தனையைதான்.

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து நிலப்பரப்பை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அது கொடுத்த சிந்தனைப்பரப்பு சுலபமாக மாறுவதில்லை. அதற்கான முழு விருப்பமும் விழிப்புணர்வும் இருந்தாலொழிய!

உலகமயமாக்கல் ஆணையும் பெண்ணையும் சரி நிகராகத்தானே வைக்கிறது?

ஆம். முதலாளித்துவம் ஆணுக்கிருந்த மகிமையை பெண்ணுக்கும் கொடுத்திருக்கிறது. சொல்லப் போனால், ஆணுக்கிருந்ததைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறது. காரணம், பெண்ணின் மேல் உள்ள அக்கறையால் எல்லாம் அல்ல. இத்தனை காலமும் அடிமைப்படுத்தி, பெண்களிடம் நிலப்பிரபுத்துவம் ஏற்படுத்தி வைத்திருக்கும் Fragility, முதலாளித்துவத்துக்கு வசதியாக இருக்கிறது. பண்டங்களாக மாற்ற பெண்களை சுலபமாக ஈர்க்கமுடிகிறது. அப்படியான மாற்றம் ஏற்படுத்தும் சமூக சிக்கல்களுக்கு முதலாளித்துவம் பொறுப்புடன் பதிலளிக்கிறதா என்றால் இல்லை. அதன் லாப சிந்தனைக்கு அது தேவையும் இல்லை.

முதலாளித்துவத்துக்கு தேவை சந்தையும் பண்டமும் அதிக நுகர்வாளர்களும் மட்டும்தான். மற்ற எந்த அறமும் அதற்கு கிடையாது. குடும்பமாக அமர்ந்து ஒரு டிவி பார்த்து அளவளாவியது மறைந்து அறைக்கொரு டிவி கொடுத்து, தனிநபர்களை உருவாக்கி, நுகர்வை பெருக்கிக் கொள்ளும் உத்திதான் அதனுடையது. அதிக தனி நபர்கள் எனில், அதிக தன்னலம். அதனால்தான், நுங்கம்பாக்கத்தில் கொலை நடந்தபோது பொதுநலம் அரங்கேறாமல் தன்னலம் மட்டும் சிறப்பாக அரங்கேறியது. ஏதாவது செய்ய முயன்றிருந்தால், ‘ரயில் மிஸ் ஆகியிருக்கும். ஆஃபிஸ்க்கு லேட்டாயிருக்கும். மேனேஜர் லாஸ் ஆஃப் பே போட்டிருப்பான். அடுத்த மாச சம்பளத்துல ஒரு நாள் சம்பளம் கொறையுமே. பேங்க்காரன்கிட்ட எவன் அசிங்கப்படறது?”

இவையாவும் ‘மொட்டைத்தலை-முழங்கால் முடிச்சாகவோ’ Chaos Theory ஆகவோ தெரியலாம். ஆனால் இந்த அடிப்படை எதையும் புரிந்துகொள்ளாமல் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது என்பதுதான் யதார்த்தம். நிலப்பிரபுத்துவத்தை கொல்லைப்புற வீட்டில் வைத்து குடும்பம் நடத்தும் முதலாளித்துவத்தையும் அவ்விரண்டின் பிரதிபடிமங்களாக இயங்கும் அரசு மற்றும் அதன் அமைப்புகளையும் கொண்டு நீதியை வேண்டுவதெல்லாம் துயர நகைச்சுவை.

கடைசியில், பெண்ணை தெய்வமாக்கிவிட்டு வீட்டுக்குள் தூக்கிப்போட்டு மிதிப்பதை போல், பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையே என வெதும்பிவிட்டு பெண்களை கொல்லும் ஏனைய மனிதர்களாகத்தான் நாம் எஞ்சுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.