“எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும்”: பாலுமகேந்திரா

பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு” இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.

பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள் மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு “அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம். அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.

எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility) மிக அதிகமானது. ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக் கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.

இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது. முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உணர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்து கொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது…

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம் சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.

1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின் உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும் இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும் படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எங்கள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எங்கள் உடல்கள். நாங்களல்ல!

Sunday, 21 April 2013 அன்று தனது வலைப்பூவில் திரைக்கலைஞர் பாலுமகேந்திரா எழுதிய பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.