எதிர்பாராத விதமாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தனது பதவியை துறந்திருக்கிறார். ஐயூவிலிருந்து பிரிவதால் ஏற்படும் விளைவுகளை பிரிட்டன் எப்படி சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி அப்படியே இருக்கிறது. வருகிற அக்டோபரின் நடைபெறவிருக்கும் தேர்தல் வரை கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நீடிக்கப்போவதாக கேமரூன் அறிவித்துள்ளார். அதுவரை அவர் இடைக்கால பிரதமராக இருப்பார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்தான், ஐயூவிலிருந்து பிரிட்டன் பிரிந்துவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். சொல்லத் தேவையே இல்லை, பிரிக்ஸிட் வாக்குப் பதிவு முடிவுகள் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. உலக பொருளாதார சந்தைகள், இந்தியா உள்பட கொந்தளித்துப் போயுள்ளன. இந்த நிலைமை வாக்கு முடிவின் தாக்கம் முழுவதுமாக நீங்கும்வரை நீடிக்கும். அதற்கும் மேலாக, பிரிக்ஸிட் முடிவு அரசியலில் தாக்கங்களை உருவாக்கும்.
ஐயூவிலிருந்து வெளியேறும் முடிவு, முக்கியத்துவம் வாய்ந்தது ஏனெனில் உலகமயமாக்கள் என்பது இங்கிருந்தே துவங்கியது. வரலாற்று ரீதியாக சுதந்திரமான வர்த்தகத்தையும் உலக பொருளாதார ஒருங்கிணைப்பையும் மேற்குலகுக்கு சொன்ன நாடு இது. அரசியல் ரீதியாக ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்த உலகமயமாக்கலும் விழுந்த அடி இது. உலகமயமாக்கள் தங்களுக்கு எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை என ஏழைகளும் உழைக்கும் வர்க்கமும் கருதியது. இங்கு மட்டுமல்ல, அமெரிக்கா உள்பட மேற்குலகில் உலகமயமாக்கலின் சுதந்திரமான வர்த்தகம் கார்ப்போரேட்டுகளுக்குத்தான் லாபம் தந்தது என்கிற கருத்து இந்த வர்க்கங்களிடையே உள்ளது. உழைக்கும் வர்க்கத்தின் ஊதியம், 15 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையிலே தேங்கிவிட்டது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் பிகேடி இந்தக் கருத்தை கடந்த சில ஆண்டுகளாகக் கூறி வருகிறார்.
வாக்குப் பதிவு முடிவை ஒட்டி பிரிக்ஸிட் இயக்கத்தின் தலைவர் நைஜெல் ஃபரெஜ், பெரும் வியாபாரிகளுக்கும் வர்த்தக வங்கிகளுக்கு நிதி நிறுவனங்களுக்கு எதிராக அளித்த வாக்கு என தெரிவித்திருப்பது வியப்பைத் தருகிறது. இதுபோன்ற கருத்துகள் ஐரோப்பா, அமெரிக்காவிலும் பரவுவதோடு வளர்ந்த நாடுகளிலும் பரவிக்கொண்டிருக்கிறது.
விற்பனை, முதலீடு, சேவை, தொழிலாளர் ஆகியவற்றின் எல்லையில்லா இயக்கமான உலகமயமாக்கலின் ஆதரவாளர்களுக்கு தங்களுடைய சொந்த மக்களுக்கு உலகமயமாக்களின் பலன்கள் கார்ப்போரேட்டுகளுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும்தான் என வலியுறுத்துவது மிகப் பெரும் சவாலாக இருக்கும்.
ஐயூ ஏற்பாட்டின் படி பிரிட்டனில் குடியேற்றப்பட்ட 3 மில்லியன் புலம்பெயர் மக்கள் பிரிட்டனின் பணிபுரியும் வர்க்கம் இழப்பைச் சந்தித்தது. பிரிக்ஸிட் தலைவர்கள், கப்பல் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளில் பணிகளை இழந்தவர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்றார்கள். பிரிட்டனின் இறைமையையும் பெருமையையும் மீட்போம் என ஃபரேஜ் இந்த பணியாளர்களிடையே உணர்வுப் பூர்வமாகப் பேசி ஆதரவு திரட்டினார். ஆனால், ஐயூவிலிருந்து விடுபடுவதால் மட்டும் பிரிட்டனின் கப்பல் மற்றும் ஸ்டீல் தொழில்களை மீட்டெடுத்து விடமுடியுமா? பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் அதிக சம்பளம் காரணமாக ஸ்டீல் உற்பத்தியும் மற்ற பொருட்களின் உற்பத்தியும் ஐரோப்பா முழுவதும் நொடிந்துவிட்ட நிலையில் இந்த சந்தேகம் வரத்தான் செய்யும். பிரிட்டன் தன்னிறைவு பெறும் போது மட்டுமே இந்த தொழில்களை மீட்டெடுக்க முடியும். ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உலக சூழலில் இது சாத்தியமேயில்லை. கியூபாவையும் வட கொரியாவையும் தவிர தன்னிறைவு பெற்ற நாடுகள் என்று எந்த நாட்டையும் சொல்ல முடியாது!
என்றாலும் தீவிர இடதுசாரிகள் முதல் வலதுசாரிகள் வரை ஐயூவிலிருந்து பிரிட்டன் பிரிவதை வரவேற்கிறார்கள். புதிய பிரதமர் இவர்களுக்கு ஏற்றதுபோல விரும்பியோ விரும்பாமலோ ஐயூவிடம் பேசியாக வேண்டும்.
தாராள வர்த்தகம்-முதலீடு பெரு வியாபாரிகளுக்கு சாதகமாகவே இருந்தது, உழைக்கும் மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்கவில்லை என்பது உள்ளிட்டு உலகமயமாக்கலின் கட்டமைப்பு குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதை சரிபடுத்துவது முதன்மையானதாக இருக்கிறது. தொட்டியில் இருக்கும் குழந்தையைத் தூக்கி எறிவதுபோல, அத்தனை ஏற்பாடுகளையும் குலைத்துவிட முடியாது. ஐயூவிலிருந்து முழுவதுமாக விலகிக் கொள்வது பிரிட்டனில் பல லட்சம் பேரை வேலை இழப்புக்கு உள்ளாக்கும், பொருளாதார மந்தநிலையை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். சமூக பொருளாதார நிலைமையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
உதாரணத்துக்கு, ஐந்து மில்லியன் பிரிட்டன் மக்கள் ஐயூவின் வெவ்வேறு இடங்களில் பணி விசாவைத்திருப்பவர்களின் நிலைமை என்னவாகும்? இது ஒரு அறுவை சிகிச்சையின் போது நோயாளியை மரணத்துக்கு அருகில் கொண்டு போவதைப் போல. பிரதமர், கவனத்துடன் அடியெடுத்து வைப்பார் என தோன்றுகிறது. பிரிட்டனால், கடுமையான முடிவுகளை இந்த நிலையில் சமாளிக்கவே முடியாது.
ஐயூவுக்கும் பிரிட்டனுக்குமிடையே என்ன நடந்தாலும் குறைந்த விலை உற்பத்தி நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருளாதாரம் தாக்குதலுக்கு உள்ளாகும். தேசியவாதிகள் பாதுகாப்பு உணர்வாளர்கள் மேற்கின் உற்பத்தி முடிவுகளை ஒருவேளை மாற்றினால் ஆசிய பொருளாதாரம் கவலைக்குரியதாக மாறும்.