ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ. 93க்கு 10 ஜிகா பைட் 4 ஜி சேவையை வழங்கவிருப்பதாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் அளித்துள்ளது. தனது 8 மில்லியன் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களில் 90 சதவிதமானவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே அளவிலான 4 ஜி சேவைக்கு ஏர்டெல் ரூ. 3,249ம் வோடஃபோன் ரூ. 1,847ம், ஐடியா ரூ. 1,346ம் கட்டணமாக நிர்ணயித்துள்ளன. கிட்டத்தட்ட 94 சதவிதத்துக்கும் குறைவான விலையில் ரிலையன்ஸ் இந்த கட்டண விகிதத்தை நிர்ணயித்துள்ளது.
மும்பை, டெல்லி, கொல்கத்தா, குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி கிழக்கு மற்றும் மேற்கு, ஒடிசா, மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 12 வட்டங்களில் முதலில் இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் அடுத்தக் கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய வட்டங்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் அனுமதி கிடைத்தபிறகு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச், 2015ல் ரிலையன்ஸ் 850 MHz அலைக்கற்றைகளை வாங்கியது. இவற்றின் மூலம் அனைத்துவிதமான தொழிற்நுட்பங்களையும் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டண சலுகையில் வழங்கலாம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்.