பத்தி: யானையில் ஆரம்பித்துப் பெண் கொலை வரைக்கும் நம் தலையில் திணிக்கப்படும் செய்திகள்

அமுதா சுரேஷ்

இன்று தமிழ்நாட்டின் பரபரப்பான செய்திக்குக் காரணம் மனிதர்களால் உயிரிழந்த யானையைப் பற்றியது. எல்லோருக்கும் தெரிவது, யானையின் மரணம், இல்லையென்றால் அது மனிதர்களுக்கு ஏற்படுத்தும் தீங்கு, இப்படியே விவாதித்து அடுத்து ஒரு சிங்கமோ, புலியோ இரையாகும் வரை இது செய்தியாய் இருக்கும்!

தமிழ்நாட்டில் செய்தித்துறை என்பது முழு அளவில் தம் பங்கை இன்னமும் நிறைவுறச் செய்யவில்லை, அல்லது செய்ய அனுமதிக்கப்படவில்லை!

இந்தச் செய்தி இப்போது என்ன சொல்கிறது? மனிதர்களின் நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த யானை, யானையைச் சுற்றி வளைத்தது வனத்துறை, யானை கொல்லப்பட்டது, இப்படித்தான் நீளும் பெரும்பாலான தமிழ் தினசரிகளில் செய்திகள்!

உண்மையில் யானையா மனிதர்களின் நிலங்களில் புகுந்தது? யானையா அட்டகாசம் செய்தது? தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையே யானைகளின் வழித்தடமாக இருந்த மதுக்கரையில், இத்தனை ஆக்கிரமிப்புகள் ஏன்? வீடுகள், விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், உயர் மின் அழுத்த கடத்திகள் என்று வனத்துறையின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் பக்கபலமும் ஒரு வாழ்வினத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதோ மிருகங்கள் மனிதர்களுக்கு இடையூறு விளைவித்தன என்று கொல்லப்படுகின்றன, ஏதோ சில மனிதர்கள் விலங்குகளின் பாதையில் யாருடைய அலட்சியத்தாலோ கொல்லப்படுகிறார்கள்! இது எதுவுமே எப்போதும் வேரின் தன்மையை ஆராயும் செய்தியாவதில்லை!

அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியிருக்கும் நிலங்களில் விவசாயம் செய்யும் அல்லது குடியிருக்கும் மக்களிடம் இருந்து, “யானைகளை அப்புறப்படுத்துங்கள், சிறுத்தைகளைக் கொல்லுங்கள், காட்டுப் பன்றிகளைக் கொல்லுங்கள், மயில்களைப் பிடித்துச் செல்லுங்கள்” என்று செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன, விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது சரிதான், இயற்கையுடன் இயைந்து வாழும் விலங்குகளைக் கொன்று, மரங்களை வெட்டி, உரங்களைக் கொட்டி விவசாயம் செய்து உண்மையில் நாம் செய்வது என்ன? காட்டை அழித்து, நிலங்களைச் சமைத்து, சிறிதுகாலம் விவசாயம் செய்து, பின் விளைநிலங்களைப் பட்டா மனைகளாக விற்று, காடும் போய், விலங்குகளும் போய், பூமியில் இயற்கைச் சீற்றம் கொள்ளும் போது, “எல் நினோ” என்றும் “எல் வினோ” என்றும் பெயர் சூட்டி, அவரசமாய்ச் சில மரக்கன்றுகளை ஆங்காங்கே நடும் விந்தையான தலைமுறைதான் நாம்!

நம் தலைமுறை விந்தையானதொரு தலைமுறையாய், பயம் விதைக்கப்பட்ட தலைமுறையாய் மாறியதற்குப் பின்னணியும் ஒரு மாபெரும் அரசியல்தான்!

கிட்டத்தட்ட ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில், தேசிய குற்றவியல் ஆவண மையத்தின் ஆய்வறிக்கையின்படி (NCRB ) 2,72,423 (இரண்டு லட்சத்து எழுபத்திரெண்டாயிரத்து நானுற்று இருபத்து மூன்று) வழக்குகள் 2014-இல் பதிவாகியிருக்கிறது, அதில் தமிழகத்தின் பங்கு என்பது 1,93,200 (ஒரு லட்சத்து தொண்ணூற்று மூன்றாயிரத்து இருநூறு)

குற்றங்கள் எங்கே அதிகம் என்ற விவாததத்தை முன்வைக்கவில்லை, அதிகரிக்கும் குற்றங்களைப் பற்றிய ஒரு பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த இரண்டு லட்ச வழக்குகளில் 5671 ஐயாயிரத்து அறுநூற்று எழுபத்து ஒன்று வழக்குகள் வனம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பைப் பற்றியது, ஒரு மதுக்கரை மஹராஜ் அல்ல, பல வன ராஜாக்கள் நிறைந்த வனம் என்பது அழிந்துக் கொண்டுதான் இருக்கிறது, புற்றீசல் போல் அதிகரித்துக் கொண்டிருக்கும் மனித குலத்திற்காக! குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது, மனித உயிர்களுக்கும் மதிப்பில்லாமல்!

ஆனால் இதையெல்லாம் தமிழகத்தில் பெரும்பாலான பத்திரிக்கைகள் விவாதிக்கவில்லை, செய்தியாக்கவில்லை, இருவேறு திராவிடக் கட்சிகளின் பிரசார மேடைகளாகத் தான் பல பத்திரிக்கைகள் இருக்கின்றன, துணிந்து பேசும் சில பத்திரிக்கைகளும் தொடர்ந்து பேச முடியவில்லை!

இங்கே பத்திரிக்கைகைகளில் நாம் எதைத் தெரிந்து கொள்கிறோம், எது நம் மனதில் விதைக்கப்படுகிறது? உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்ப்போம்;

1. மதுவில் (விபத்தில்) ஏற்படும் மரணங்கள்:

எவனோ குடித்துவிட்டு ஓட்டினான், ஏதோ ஒரு குடும்பம் செத்தது, “உச்சு” கொட்டி நகர்ந்துவிடுவோம், அல்லது மிகப் பயங்கரமான விபத்தின் படங்கள், குடும்பங்களின் பின்னணி, இன்னும் கொஞ்சம் பரிதாபம் வரும், ஒருநாள் இரண்டு நாள், பின் இழப்பீடு பற்றிய அறிவிப்பு!

உண்மையில் குடித்துவிட்டு ஓட்டுபவன், அதனால் இறப்பவன் இவர்களைத் தாண்டி, “குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று இருக்கும் சட்டம், மதுக்கடைகளில் வாகன நிறுத்த இடம் எதற்கு வைத்திருக்கிறது” என்று ஒருவரும் கேள்வி கேட்பதில்லை, வழி நெடுக காவல்துறை சோதனை சாவடிகளில் ஏன் சோதனை செய்யவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை, அட இந்தக் குடியை விற்பவர் யார், அதிகரிக்கும் மரணங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம், யாரும் கேள்வி எழுப்ப முடியாது!

2. சாதி கொலைகள்:

காதல் திருமணம், கொலை, கலவரம்
“ஐயோ பாவம்”, “எதுக்குக் காதல்?”, “சாதி முக்கியம்”, “இப்படித்தான் வெட்டிப்போடணும்” “சாதி ஒழிக” இப்படிப் பலதரப்பட்ட உணர்வுகளை எழுப்பிவிட்டு இந்தச் செய்தியும் செத்தவனோடு /செத்தவளோடு முடிந்துவிடும்!

உண்மையில், பதினெட்டு வயது கூட மிகாத பிள்ளைகளுக்குக் காதல் ஏன் வருகிறது? படிப்பில் ஏன் ஆர்வம் குறைகிறது, வீட்டின் சூழல் என்ன? எங்கோ அந்தக் குழந்தைகளுக்கு அக்கறை மறுக்கப்படுகிறது, கல்வி என்பது தடம் மாறுகிறது, படித்து, தன்னிறைவு அடைந்து, சுயமாய், சரியாய் சிந்திக்கும் வரை அந்தக் காதல் ஏன் காத்திருப்பதில்லை? பெற்றோர்களுக்குச் சமூகம் கொடுக்கும் நெருக்கடி என்ன, காதல் என்பது தவறா, கொன்றவர்களுக்கு என்ன தண்டனை, எப்பேர்ப்பட்ட தண்டனை, இதையெல்லாம் ஏன் கேட்பதில்லை? இதையெல்லாம் ஏன் அரசு ஆய்வு செய்வதில்லை, பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏன் வழிகாட்டுதல் இல்லை?
ஒன்று காதல் இல்லையேல் சாதல், கல்வி முறை என்ன சொல்லித் தருகிறது, இந்தச் சாதித் தலைவர்கள் எதை வளர்க்கிறார்கள்?

ஆனால் நம் மனதில் விதைக்கப்படுவது என்ன? “காதலித்தால் கொடூர தண்டனை, அது மிகவும் கொடூரமாக இருக்கும், அது வேதனை நிறைந்ததாய் இருக்கும்” என்பதே ஆகும்! கொன்றவனைப் பற்றி நாம் பேசுவதில்லை, பரிதாபத்தையும், கொந்தளிப்பையும் ஒரு வரைமுறைக்குள் எழுப்பிப் பத்திரிக்கைகள் கடந்துபோகும், மறந்தும் கொலைகாரர்களை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையைப் பற்றி யாரும் அழுத்திப் பேசுவதில்லை

3. குழந்தைகள் கடத்தல்கள்/ மரணங்கள்:

எங்கோ குழந்தைகள் காணாமல் போகும், எங்கோ குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில், சாலை விபத்துகளில், பள்ளி விபத்துகளில், நெரிசல்களில் இறந்து போகும்! ஒருமுறை இதயம் நின்று துடிக்கும், இரவில் உறக்கம் தொலைப்போம்! பரிதாபத்தை மட்டுமே ஏற்படுத்திச் செய்திகள் கடந்துபோகும்!

உண்மையில், சாலையில் சிக்னல் தோறும் பிறந்த குழந்தைகள் முதல், வளர்ந்த குழந்தைகள் வரை பிச்சையெடுக்கிறார்கள், காவல்துறையின் கண்முன்னேதான் இது நிகழ்கிறது, இந்தக் குழந்தைகள் யார் குழந்தைகள்? கட்டாயக் கல்வி எனும் நிலையில் இந்தக் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை? குழந்தை தொழிலாளர்களை அமர்த்துவது சட்டப்படி குற்றம் என்ற சட்டம் இருக்கும் நாட்டில், இவர்களை ஏன் சட்டம் தடுக்கவில்லை? பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறை அமைதியாய் இருக்கிறது, அந்தப் பகுதியில் கடந்து போகும் சில நீதித்துறையும் அமைதியாய் இருக்கிறது, யாரோ ஒருவர் பொதுநல வழக்கு போட்டால் மட்டுமே அரசு விழித்துக் கொள்கிறது. கடத்தல்கள் பற்றி ஆயிரம் கேள்விகள் எழுப்ப வேண்டிய பத்திரிக்கைகள் மரணம் பற்றியும் எழுப்புவதில்லை, ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும் என்ற நடைமுறையைப் பின்பற்றாதவரை சட்டம் என்ன செய்கிறது? நீச்சல் குளத்தில், நெருப்பில், நெரிசலில், மின்தூக்கியில், பேருந்து ஓட்டையில், பள்ளி வாகனத்தில் என்று ஒவ்வொரு முறையும் குழந்தைகள் இறந்தபின்னே விழித்தெழும் அதிகாரிகள், இன்னமும் எத்தனை முறையில் குழந்தைகள் இறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்? இதுவரை குழந்தைகள் இறந்த முறையில் இனியொரு குழந்தை இருக்காது என்பதற்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு வரைமுறைகள் என்ன, கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்ன? குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோருக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு எங்கே? இதில் அரசின் பங்கு என்ன? மூச் இதெல்லாம் பத்திரிக்கைகள் கேட்காது!

4. பெண்கொலைகள் \ வன்கொடுமைகள் \ பாலியல் வன்முறைகள்:

இதில் பத்திரிக்கைகளின் கற்பனைத் திறனை நாம் பாராட்டியே ஆக வேண்டும், எந்தப் பெண் கொலைசெய்யப்பட்டாலும் / தற்கொலைச் செய்தாலும் முதலில் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே தெரியும் ரகசியம் அந்தப் பெண்ணிற்குக் கள்ளத்தொடர்பு எனும் முக்கிய விஷயம் தான்! இருபது வயதென்றாலும் அறுபது வயதென்றாலும் முதலில் கள்ளத்தொடர்பு என்பார்கள், பின் வேறு ஒரு காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று காவல்துறை வழக்கை முடித்தாலும், குறைந்தபட்சம், கொடுத்த தவறான செய்திக்காக மன்னிப்புக் கூடக் கேட்காத மாண்பு நம் பத்திரிக்கைகளுக்கே உரித்தானது!

குடிகார கணவனை, குழந்தைகளைக் கொடுமைப்படுத்தும் கணவனை, ஊதாரித்தனமான கணவனை, பெற்ற பெண்ணையே வன்கொடுமை செய்யும் கணவனை ஒரு பெண் கொலை செய்தால், ஆணை விட்டு விட்டுப் பத்திரிக்கைகள் பெண்ணையே சாடும், பெண்ணின் எந்தக் குற்றத்திற்குப் பின்னாலும் அவளின் ஆடை, நடத்தை, ஒழுக்கம் இவையே செய்திகளின் பிரதானம், குற்றம் செய்தவனோ, செய்யத்தூண்டியவனோ அல்ல! பெண்ணைப் பற்றிய செய்திகள் படிப்பவர்களுக்கும் கிளுகிளுப்பு அல்லது வாய்க்கு அவல்!

யானையில் ஆரம்பித்துப் பெண் வரைக்கும், நம் தலையில் திணிக்கப்படும் செய்திகளின் தன்மை இவைகள் தான், “காட்டில் இருந்து நாங்கள் பறித்த நாடெனும் காட்டிற்குள் வந்தால் உனக்கு மரணம்” என்று யானைக்கு ஒரு செய்தி இருக்கிறது, “பெண்ணென்றால் ஒழுக்கமாய் இருக்க வேண்டும் இல்லையென்றால் அமிலமோ, மரணமோ தான் உனக்குப் பரிசு” என்று பெண்ணிற்குச் செய்தியும், சமூகச் சேவகன் அல்லது சேவகி என்றால் “ரௌடிகளால் கொல்லப்படுவாய்” என்றும், “சாலை என்றால் விபத்து மட்டுமே நடக்கும்” என்றும், “பாதுகாப்பு என்பது அவரவரின் தலையெழுத்து” என்றும் மறைமுகச் செய்திகள் மட்டுமே நமக்குக் பல வருடங்களாய்ப் பத்திரிக்கைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது, அல்லது கொடுக்க வைக்கப்படுகிறது! பயம் விதைக்கப்பட்டு வருகிறது!

உன் குடும்பம், உன் வாழ்க்கையைப் பார்த்துக் கொள், உன் வேலையைப் பார்த்துக் கொள் என்றே மக்கள் பணிக்கப்படுகின்றனர், வடக்கில் இருக்கும் செய்திகளின் விசாரணை கூடத் தெற்கில் இல்லை, நம் செய்திகள் திரைத்துறையையும், கட்சிகளையும், பெண்களையும் சுற்றியே வருகிறது!

துணிந்து நிற்கும் ஒருவனை, பொதுநல வழக்கு போடும் ஒருவனை, வழக்கின் தன்மையைப் பாராட்டி, ஆதரித்துப் பத்திரிக்கைகள் எழுதுவதில்லை, குற்றம் செய்தவனின் நிலை என்ன அது எத்தகைய பாதிப்பை அவனின் குடும்பத்தில் ஏற்படுத்துகிறது என்று, குற்றம் தவறு என்று, அதன் பாதிப்பு கொடிது என்று, குற்றம் செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்று, எந்த ஒரு பயத்தையும் குற்றவாளிகளுக்குச் சட்டமோ, பத்திரிக்கைகளோ விதைப்பதில்லை , மாறாக “நாம் உண்டு நம் வேலைகள் உண்டு பாதிக்கப்பட்டவன்/பட்டவள் இப்படி இருந்தால் அப்படி இருந்தால் இப்படி நிகழ்ந்திருக்காது” என்று கலாச்சாரப் போதனைகளும், பரிதாபத்தைத் தூண்டும், விற்பனையை அதிகரிக்கும் கிசுகிசு உத்திகளே அதிகம்!

காட்டில் யானைகள் சாகட்டும் நாட்டில் மனிதர்கள் சாகட்டும், அரசியல்வாதிகள் ஊழல்கள் செய்யட்டும், பத்திரிக்கைகள் விற்கட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.