‘ராமன் மனிதநேயமற்றவன்’ என்று கருத்தரங்கில் பேசியதற்காக தலித் பேராசிரியர் கைது

கடந்த 2015 ஜனவரி 3-ஆம் தேதி ‘ஊடகமும் மனித உரிமைகளும்’ என்ற தலைப்பில் மைசூர் பல்கலைக்கழகம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது. அம்பேத்கரிய பேராசிரியர் மகேஷ் சந்திர குரு, இந்திய புராணங்களில் புகழ்பெற்ற கதாபாத்திரமான ராமனை விமர்சித்தார். “ராமாயண ராமன், மனித உரிமைகளை மீறினார். அவர் சீதாவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டார், அவர் குற்றவாளிபோல் நடத்தினார். இதில் நான் மனித உரிமை மீறலைப் பார்க்கிறேன். ஊடகங்கள்தான் ராமனை வழிபாட்டுக்குரியவனாக மாற்றின. அது சரியல்ல” என்றார்.

பேராசிரியர் குருவின் பேச்சு, அந்த அரங்கிலேயே எதிர்ப்பு வந்தது.  மானுடவியல் துணை பேராசிரியர் அப்பாஜி கவுடா எதிர்ப்பு தெரிவித்ததோடு, கர்னாடு சர்வோதய சேனா என்ற வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரைத் தூண்டி அதே நாளில் வழக்குப் பதிய வைத்தார். இதை மாணவர் திலிப் குமார் தெரிவித்ததாக ஃபார்வர்டு பிரஸில் இந்த விவாகாரம் குறித்து எழுதிய சஞ்சீவ் சந்தன் கூறுகிறார்.

ஒரு வருடம் கழித்து, ரோஹித் வெமுலா தற்கொலை சம்பவத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இது மோடி ஆதரவாளர்களாலும் பிராமணிய சக்திகளாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் பின்னணியில் மைசூர் நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது.

 

ராமனை அவமதித்தாகக் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் மகேஷ் சந்திர குரு, தலித்-புத்திசம் குறித்து சொல்லித்தருபவர். 30 ஆண்டுகளாக பத்திரிகைத் துறை குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் இவர் மாநில மற்றும் மத்திய அரசுகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர். கர்நாடகா பணியாளர் தேர்வாணையத்திலும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திலும் யூஜிசி குழுக்களிலும் பேராசிரியர் குரு உறுப்பினராக உள்ளார். கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இந்துத்துவ அமைப்புகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதி வந்தவர்.  சமீபத்தில் தலித் சிந்தனையாளர் காஞ்சா அய்லய்யா மீது வழக்குப் பதியப்பட்டபோது அதைக் கண்டித்து எழுதினார். ஆனால் அவர் மீதும் இப்படியான வழக்கும் பாயும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

பேராசிரியர் குருவின் முக்கியமான செயல்பாடாக மகிஷாசுர இயக்கத்தைச் சொல்லலாம்.  மகேஷாசுரர் புத்தமதத்தைப் பின்பற்றிய ஆட்சியாளர் என்பதையும் அவர் பெயரை ஒட்டிய மைசூர் பெயர் பெற்றது என்பதையும் அவர் நம்புகிறார்.  அவருடைய கூற்றுப்படி, “கிபி 245 ஆம் ஆண்டு அசோக மன்னர், மகாதேவா என்ற புத்தத் துறவியை கர்நாடகாவின் மகிஷமண்டலுக்கு அனுப்புகிறார். மகிஷாவின் ஆட்சி இங்கே நடைபெற்றதுக்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன.  சாமுண்டீஸ்வரியால் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. பிராமணியவாதிகள் அவரை ‘அசுரன்’ என முத்திரைக் குத்தினார்கள்”.

சமீபத்தில் பேரா. குருவும் அவருடைய நண்பர்களும் தியாகி மகிஷாசுர தினத்தை மைசூரில் கொண்டாடினார்கள். மகிஷாசுரர் புத்தமதத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்த ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வரவிருக்கும் மகிஷாசுரர்(Mahishasur: Debrahmanizing a Myth) என்ற நூலில் எழுதியிருக்கிறார். இந்த நூல் ஃபார்வர்டு பிரஸ்ஸின் ஆசிரியர் பிரமோத் ரஞ்சனால் திருத்தப்பட்டு வெளியாகிறது.

 பேரா.குருவின் கைதுக்கு தலித் சிந்தனையாளர் காஞ்சா அய்லய்யா, மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட், சமூகவியலாளர் ஷம்ஷுல் இஸ்லாம், ஜெயதி கோஷ், ரான் புனியாணி, ஆனந்த் ஸ்வரூப் வர்மா, குமார் பிரசாந்த், எஸ். ஆனந்த், ரதன் லால், எழுத்தாளர் விமர்சகர் கன்வால் பாரதி, பிரயாக் சுக்லா, ராஜேஷ் ஜோஷி, மங்கலேஷ் திபரால், ஜிதேந்திர பாட்டியா, சுதிர் சுமன், பஜ்ரங் பிஹாரி திவாரி, க்ருபாசங்கர், ஃபாரிட் கான், அம்லெண்டு உபாத்யாய, சஞ்சய் ஜோதெ, சமூக செயல்பாட்டாளர் வித்யா பூஷன் ராவத், அனுராக் மோடி, ப்ரீதம் சிங், கிரீஷ்வர் பிரசாத், பதல் சரோஜ், நவால் குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு ஃபார்வர்டு பிரஸ் தளத்துக்குச் செல்லவும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.