கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜிண்டா ல்ஸ்டீல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் இரண்டு தொழிலாளர்களை இரும்பு ராடால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ வைரலாகி வெகுஜென ஊடகங்களின் கவனத்தை பெற்ற நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வீடியோவில் சூப்பர்வைசர் ஆகாஷ் என்பவர் இரும்பு ராடுடன் தொழிலாளர்கள் அருகில் நிற்கிறார். அவர்களிடம் கன்னடத்தில் பேசும் அவர்,
“இது என் ஏரியா, இங்கே தவறு நடந்தால், இவர்களுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னடா செய்தீர்கள்? கூட்டத்தில் சொல்லுங்கள்..வேலை நேரத்தில் காபினுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இப்படி செய்வீர்களா?” என ஊழியர்களை அரை நிர்வாணமாக்கி மிரட்டுகிறார்.
பெல்லாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேட்டன் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்த சம்பவம் ஸ்டீல் தொழிற்சாலையில் விதிமீறல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளிக்க மறுத்துவிட்டதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் புகார் அளிக்கும்படி தொழிலாளர்களிடம் கேட்டோம். ஆனால் நிறுவனம் மற்றும் தொழிலாளர்களிடையே உள்ள புரிதல்கள் காரணமாக அவர்கள் புகார் தருவதில் இருந்து விலகியுள்ளார்கள்’ என்றார்.
இதனிடையே தொழிலாளர்களை அடித்த சூப்பர்வைசர் ஆகாஷை பணியிடைநீக்கம் செய்து தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் நடந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமது ரபி கூறினார்.