நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிவேல் மகன் சந்தோஷ் (வயது 30). வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் தேசிகன். பெல் நிறுவனத்தில் துணை பொதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுமதி (29).
வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி படித்து வந்தபோது சந்தோசுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் சுமதியை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து 2012-ம் ஆண்டு பெண் வீட்டின் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கிடையே சந்தோசுக்கு நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை கிடைத்தது. இதனால் அவர் சுமதியுடன் நாமக்கல்லில் குடியேறினார்.
பின்னர் சந்தோஷ் ஓசூர் வங்கி கிளை மேலாளராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில் சந்தோசின் பெற்றோர் அவருடைய காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு ஜூன் 23-ந் தேதி திருச்செங்கோட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதாக கூறினர்.
இதனை நம்பி சந்தோஷ் விடுமுறை எடுத்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு வந்து திருமண வரவேற்பிற்கான பணிகளை கவனித்து வந்தார். அவர் ஓசூரில் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், கடந்த 20-ந் தேதி நாமக்கல்லில் இருந்த வீட்டில் சுமதி படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்த அன்று சந்தோசின் தாயார் மாதேஸ்வரி (52), சுமதியை பார்த்துவிட்டு சென்றதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் தனது மகன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு கவுரவ பிரச்சினையாக இருந்ததால் கணவருடன் சேர்ந்து சுமதியை கொலை செய்துவிட்டேன் என கூறினார். இதை தொடர்ந்து பழனிவேல், மாதேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பழனிவேல் அதிமுகவில் கிளை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களையும் சாதி மீறி நடந்துகொண்டதற்காக அந்தப் பெண்ணையும் கொல்வது நடந்துவரும் சூழலில், ஆணைப் பெற்றவர்களும் ஆணவக் கொலைகளில் ஈடுபடுவது இந்தச் சம்பவத்தின் மூலம் பதிவாகியுள்ளது.