குல்பர்க் சொஸைட்டி படுகொலை தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களிலேயே வெளிநாட்டு நிதி பெறுவதற்கான உரிமத்தை இழந்தது மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட்டின் ‘சப்ரங்’ அறக்கட்டளை. இது குறித்து தீஸ்தா தரப்பை அறியும் பொருட்டு டிஎன்ஏ இதழின் யோகேஸ் பவார், தீஸ்தா செடல்வாட்டுடன் செய்த நேர்காணல். அதன் தமிழாக்கம் இங்கே…
கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட குல்பர்க் சொஸைட்டி தீர்ப்பு குறித்து உங்களுடைய கருத்தென்ன?
நான் முழு தீர்ப்பையும் வரிக்கு வரி படித்துக்கொண்டிருப்பதால், முழுமையான கருத்தை என்னால் சொன்னமுடியாது. ஆனால், ஊடகங்களில் வந்த செய்திகளை பார்த்தேன்; படித்தேன். அதன் அடிப்படையில், நேரடி சாட்சியங்களை முற்றிலும் அவர்கள் நிராகரித்திருப்பது என்னை சீற்றம் கொள்ளவைத்தது. சாட்சியமளித்தவர்கள் அனைவரும் வன்முறை எதிர்கொண்டவர்கள், காயம்பட்டவர்கள், நீதிமன்றத்தின் குறுக்கு விசாரணையை எதிர்கொண்டவர்கள். பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு காலை 9 மணியிலிருந்து 10.30 வரை குடியிருப்புப் பகுதியில் வன்முறை கும்பல் கூடியதிலிருந்து அனைத்து வன்முறைகளையும் பார்த்த 19 உறுதியான சாட்சியங்கள் இருந்தன.
அதில பலர் அப்போது டிஜிபியாக இருந்த பாண்டே, அந்த இடத்திற்கு வந்து போனதையும் இணை கமிஷனர் எம் கே டாண்டன் 10. 30 மணி வாக்கில் காவலர்களுடன் வந்திருந்ததும் அந்த நேரத்தில் அங்கிருந்த 5000 பேருக்கும் அதிகமான கூடியிருந்த கும்பலை டயர்களை ப் போட்டு கொளுத்தி குடியிருப்பின் மீது வீசிக்கொண்டிருந்ததைப் பார்த்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் போனதையும் அவர்கள் சாட்சியம் அளித்தபோது சொன்னார்கள். காலை 9 மணியிலிருந்து நண்பகல் 1 மணி வரை என்ன நடந்தது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்தும் ஏன் நீதிபதி அதை நிராகரித்தார்? நெறிமுறைகளின் படி இந்த வழக்கை சிறப்புப் புலனாவுக் குழு ஏன் நகர்த்தவில்லை?
நீங்கள் சுட்டிக்காட்டிய இந்த விஷயங்களை நீதிமன்றத்திலும் சொல்லப்போகிறீர்களா?
எஸ். எம். வோரா, சலீம் ஷேக், சாதிக் ஷேக் போன்ற எங்களுடைய மூத்த வழக்கறிஞர் சாட்சிகளின் சார்பாக வாதாட நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் சென்றிருந்தனர். எங்களுடைய பதிவின் ஒரு பகுதியாக அப்போதையா காவல் அதிகாரிகள் அகமதாபாத் கமிஷ்னர் பிசி பாண்டே, இணை கமிஷ்னர் பி பீ கோண்டா, துணை கமிஷ்னர் (நகர குற்றப் பிரிவு) எஸ். எஸ். சுதாசனா ஆகியோர் மீது பணியாற்றத் தவறியதற்காக குஜராத்தி மொழியில் 400 பக்கத்துக்கு வாதங்களை வைத்திருந்தோம். சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம் புரிந்து சக்திவாய்ந்த நபர்களை காப்பாற்ற நினைக்கிறதோ என்கிற எண்ணம் எங்களுக்கு இருந்தது. அப்போதே எங்களுக்கு நீதியின் மேல் நம்பிக்கை போய்விட்டது. நரோடியா பாட்டியா படுகொலை (குற்றப்பத்திரிகை 97 பேர் இறந்ததாகச் சொன்னது நாங்கள் 124 பேர் இறந்ததாகச் சொன்னோம்)க்குப் பிறகு, அதிகம் பேர் கொல்லப்பட்ட சம்பவம் இது. பிப்ரவரி 2002ல் நடந்த ராஜ்கோட் தொகுதி இடைத்தேர்தலில் நின்ற நரேந்திர மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் இஸான் ஜஃப்ரி, அதனால் அவர் மீது வன்முறை ஏவப்பட்டிருக்கலாம் எனகிற மற்றொரு கோணத்தையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். நண்பகல் 1 மணி வரை, ஜாஃப்ரி, கும்பலை நோக்கி சுடும்வரை அங்கே எதுவும் நிகழவில்லை என்பது வினோதமாகத் தெரிகிறது. அங்கே என்ன நடந்தது என்பதை குலைப்பது மட்டுமல்லாமல், புதிய கதைகளையும் புனைகிறது இந்தத் தீர்ப்பு.
என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள்?
இந்தத் தீர்ப்பின் மீது நம்பிக்கையின்னையும் விரக்தியும் இருந்தபோதிலும், இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்கான வேலைகளில் இறங்கியிருக்கிறோம். சம்பிரதாயத்துக்காக சிறப்புப் புலனாய்வுக் குழு மேல் முறையீட்டுக்குப் போனாலும் அவர்களுடன் சேராமல் தனியாகவே நாங்கள் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். சிறப்புப் புலனாய்வுக் குழு குறித்து உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர். சி, கொடேகர், இந்த வன்முறைக்குப் பின்னால் சதி இருந்தது என்பது குறித்து வாதாடவேயில்லை.
உள்துறை அமைச்சகம் உங்களுடைய தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி உதவி பெறும் உரிம(FCRA licence)த்தை, முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் ரத்து செய்துள்ளதே?
இந்தத் தடை குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்காமல் முழுமையாக நிராகரித்துவிட்டது. அறக்கட்டளைக்கு ஏப்ரல் 9-11, 2015 வரையான கணக்குகளை உள்துறை அமைச்சக குழு ஜூன் 5, 2015 அன்று பார்வையிட்டதைத் தொடர்ந்து ஜூன் 25, 2015 அன்று விரிவான அறிக்கையை சப்ரங் அறக்கட்டளை தாக்கல் செய்தது. இந்த உத்தரவு 2010. 2011 குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. எந்த விளக்கத்தையும் ஏற்காமல் தாறுமாறாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அறக்கட்டளையிலிருந்து சப்ரங் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்துக்கு ரூ. 50 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது சொந்த பயன்பாட்டுக்கு செய்யப்பட்டதா?
ரூ. 50 லட்சம் பரிமாற்றம் செய்யப்படுவதாக சொல்லப்படுவது (2006-07 மற்றும் 2013-24) சப்ரங் அறக்கட்டளையின் தணிக்கை செய்யப்பட்ட விவரங்களோடு ஒத்துவரவில்லை; மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பரிமாற்றம் இந்த இரண்டு அமைப்புகளுக்கிடையே ஒப்புக்கொள்ளப்பட்டதுதான். இந்த பரிமாற்றத்தின் மூலம் பெறப்பட்ட தொகை அலுவலகம், அலுவலக பொருட்கள், பணியாட்களின் சம்பளம் ஆகியவற்றுக்காக மட்டுமே செலவிடப்பட்டது. இந்தப் பணத்திலிருந்து எனக்கோ, ஜாவித் ஆனந்துக்கோ சம்பளமாகத் தரப்படவில்லை. அதுபோல என் பெற்றோரின் இடத்தைப் பயன்படுத்தியதற்காக வாடகைப் பணமாகவும் தரப்படவில்லை.
மேற்பார்வை குழுவின் கணக்கின் படியே வைத்துக்கொண்டாலும் ஒரு மாதத்துக்கு ரூ. 60 ஆயிரம், 9 ஊழியர்களின் சம்பளம், அலுவலக பராமரிப்பு, அலுவலக பொருட்கள் வாங்குவது தொடர்பான செலவுகள், மின்சாரக் கட்டணம் உள்ளிடவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதுபோல செலவீனங்களை குறைப்பது தொடர்பாக வெளிநாட்டு பங்களிப்புக்கான ஒழுங்கு முறை சட்டம் வேறு எங்கேனும் செயல்படுத்தப்பட்டிருக்கிறதா எனத் தெரியவில்லை.
வெளிநாட்டு பங்களிப்புக்கான ஒழுங்குமுறை சட்டப்படி உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பது, தவறான வழிகளில் பணம் வருவதை தடுப்பதற்குத்தான் எனக்கூட சிலர் சொல்கிறார்களே?
என்ன சொல்லப்பட்டதோ அதைப் பற்றி கேள்வி கேட்காமல் ஊடகள் ஏமாறக்கூடியவையாக உள்ளது ஏன்? எங்களுடைய நிறுவனத்துக்கு கடன் அட்டை இல்லை. பணி தொடர்பான பயணங்கள் செல்லும்போது விமான, ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய தனிப்பட்டவர்களின் அட்டைகளைத்தான் பயன்படுத்துகிறோம். இது அறக்கட்டைளை உறுப்பினர்கள், ஆடிட்டர்களின் கவனத்துக்குத் தெரிந்தே செய்கிறோம். என்ன செலவு செய்தோமா அதைத் திரும்பத் தரப்படும்.
ஒயின் வாங்கவோ, புத்தகம், செருப்பு, மருந்துகள், சூட்கேஸ், முடி திருத்த, சாப்பிட என அனைத்தையும் தனிப்பட்டவர்களின் சொந்த வருமானங்கள் மூலம் செய்துகொள்கிறோம். குஜராத் காவல்துறை தனிப்பட்ட கடன் அட்டைகளின் தகவல்களை எடுத்து பொது மக்கள் பணம் தவறாகப் பயன்படுத்தியதாக திரித்துச் சொன்னது. நாங்கள் மகாராஷ்டிராவில் இருக்கிறோம். தடை செய்யப்பட்ட குஜராத்தில் அல்ல. ஒரு கிளாஸ் ஒயினுக்காக ஏன் இவ்வளவு கொந்தளிப்பு?
அகமதாபாத் குல்பர்க் சொஸைட்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மியூசியம் ஒன்றை நிறுவ பணம் வசூத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?
மியூசியம் என்பது ஒரு சிந்தனை அவ்வளவுதான். பணமோ இடமோ பரிமாற்றம் செய்யப்படவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று 2002ல் கோரினோம். ஆனால் ஆறு வருடங்கள் கழித்து 2008ல் தான் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏன் இத்தனை காலம் பிடித்தது? இதற்கிடையே இந்த குடியிருப்பை மேம்படுத்த யாரும் முன்வரவில்லை. அதனால் நாங்க மியூசியம் ஆக்கலாம் என நினைத்தோம். இப்போதும் கூட ஜாஃப்ரி குடும்பம் தன்னுடைய வீட்டை மியூசியம் ஆக்க விரும்பிறதென்றால் யார் தடுக்கப் போகிறார்கள்?
ஊடகங்கள் உங்களுக்கு போதிய ஆதரவு தரவில்லை என்று உணர்கிறீர்களா?
ஊடகங்களின் மறதி, குறிப்பாக சில நோய் பீடித்த தொலைக்காட்சிகள் பயங்கரமானவை. சில தொலைக்காட்சிகள் ‘காப்’ பஞ்சாயத்துகளைவிட மோசமானவை. நிறைய பேர் என்னை பேசவைக்க முயற்சித்தார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். “நீங்கள் எல்லாவற்றையும் கேளுங்கள் நான் வரிக்கு வரி பதில் சொல்கிறேன்” என்று. அது இதை நேரலையில் சொல்லவும் தயாராக இருக்கிறேன் என்றேன். ஒரு தலைப்பட்சமான, பட்டிமன்றங்களில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை. நான் அங்கே என்னுடைய தரப்பைச் சொல்ல சத்தம் போட்டு பேச வேண்டியிருக்கும். என்னுடைய நண்பர்களான பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய், விஷ்ணு சாமுடனும் இதைத்தான் சொன்னேன். ஐந்து நட்சத்திர வாழ்க்கையை வாழும் சில முன்னணி பத்திரிகையாளர்கள் எங்களைக் கேள்விக் கேட்பதுதான் முரண்பாடாக இருக்கிறது.
குறிவைக்கப்படுவதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? 2004-ஆம் ஆண்டு பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஷாகிரா ஷேக் பொய் கடத்தல், பொய் வாக்குமூலம் என திசைதிருப்பியபோது இதெல்லாம் தொடங்கியது. அவர் பொய் சொல்வது நிரூபணமானது. டிசம்பர் 2005ல் மற்றொரு முதல் தகவல் அறிக்கையை லுனாவாடா வழக்கில் பதிவு செய்தேன். ராயேஸ் கான் பதானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் பிரிந்து செயல்பட ஆரம்பித்தோம். 2010ல் ஜாகிய ஜஃப்ரி வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. திடீரென ராயேஸ் கான் எனக்கு எதிராக குற்றம் சாட்டினார். 2011-ஆம் ஆண்டில், ஆறு வருடங்களுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டேன். என்னை கைது செய்ய ஐந்து முறை வந்தார்கள். நல்லவேளையாக உச்சநீதிமன்றம் என்னைக் காப்பாற்றியது.
கடினமான பாதைகளைத் தேர்ந்தெடுத்ததாக வருந்துகிறீர்களா?
நான் அப்படி நினைக்கவில்லை. இந்தத் தாக்குதல் என்மீது நடத்தப்படுகிறது; இந்த மிரட்டல் எதையோ அணிந்துகொண்டேன் என்பதற்காக அல்ல. ஊடகங்களோ மற்றவர்களோ எங்களை ஆதரிப்பார்களோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 570 குடும்பங்களுக்கும் மேலாக எங்கள் பக்கம் நிற்கிறார்கள், ஷாகிராவையோ, ராயேஸ் கானை நம்பியில்லை.
இந்த மிரட்டலை முன்பு குறைத்து மதிப்பிட்டு விட்டேன், சரி நாம் கைதாவோம் என்றிருந்தேன். என்னுடைய வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் என்னை எச்சரித்தார், குஜராத் போலீஸ் உன்னை முடித்துவிடும், எளிதாக முடித்து விடும், எப்போதும் வெளியே வர முடியாது என்றார் அவர்.
இழிவுபடுத்தப்படுவது குறித்து நான் கவலைப்படவில்லை; அதில் பாசிஸ்டுகள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள். ஆனால், எனக்கோ என் குடும்பத்துக்கோ உள்ள மிரட்டலை என்னால் புறந்தள்ள முடியாது.